அரசியல் ஒரு சூதாட்டம் என்று யாரோ, எங்கோ சொன்னதாக நினைவு. ஆனாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில், சூதாட்டம் என்பது பகடையை உருட்டும் போது சற்றும் எதிர்பாராமல் விழும் எண்களை வைத்து, முற்றிலும் அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை வைத்து ஈடுபடும் விளையாட்டு. ஆனால், சதுரங்கம் என்பது கவனத்துடன் எதிராளியின் நிலை மற்றும் வாய்ப்புகளைப் பார்த்து, யோசித்து, காய் நகர்த்தும் சாதுர்யமான விளையாட்டு.
பலவீனம்
ஆகவே, அரசியலில் வெற்றி பெற புத்தி சாதுர்யம், திறமை, அவமானங்களை அலட்சியப்படுத்தும் மன வலிமை. தோல்விகளை ஏற்றுக் கொண்டு தன் அடுத்த வாய்ப்புக்காக காத்திருக்கும் பொறுமை, எதிராளியின் பலவீனத்தை கண்டறிந்து அதை தக்க வகையில் பயன்படுத்திக் கொள்ளும் தந்திரம். தன் பலவீனத்தை மறைக்கும் யுக்தி, கருத்தாழமிக்க பேச்சுத்திறன் இப்படி பல திறமைகளில், ஏதாவது ஒரு சில திறமைகள் இருந்தால் தான் அரசியல் தலைவராக உருவாக முடியும்.வாக்குறுதிகளை அள்ளி வீச வேண்டும். பின் அதை நிறைவேற்ற இயலாமல் போனால் நம்பத் தகுந்த காரணத்தைச் சொல்லி சமாளிக்கத் தெரிய வேண்டும்.கல்வித்தகுதியில் உயர்ந்து நிற்காவிட்டாலும் அவர்களிடம் உள்ள ஒரு சில நல்ல குணங்களுக்காக மதிக்கப்படுபவர்கள் தான் தலைவர்கள்.
கடந்த காலங்களில் அரசியலில் முன்னேறி வந்தவர்கள் எல்லாம்கூடியிருக்கும் மக்களை அப்படியே கவர்ச்சிகரமான பேச்சால்கவர்ந்திழுக்கும் ஆற்றல் படைத்தவர்கள். அவர்களின் பேச்சைக் கேட்க மணிக்கணக்கில் காத்துக் கிடந்தனர் மக்கள்.யாருடைய தரம் தாழ்ந்த பேச்சுக்காகவும் கொடும்பாவி எரித்ததை அந்த காலங்களில் நாங்கள் கண்டதில்லை. தற்போது நாகரிகமான அரசியல் சொற்பொழிவைக் கேட்பது அரிதிலும் அரிதாகி விட்டது.எதிரெதிர் அணியை சேர்ந்த, இரண்டு அரசியல் தலைவர்களை ஒரு பொது விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருந்தனர். இருவரும் ஒரே நேரத்தில் வந்து எதிரெதிராக சந்தித்துக் கொண்டனர். ஒரு தலைவர், அடுத்த தலைவரைப் பார்த்து, 'இவன் ஒரு முட்டாள்' என்றார்.
அடுத்தவர், 'இவன் ஒரு அயோக்கியன்' என்றார். திரும்பவும் முதல் தலைவர், 'இவன் ஒரு திருடன்' என்றார். அடுத்தவர் உடனே, 'இவன் ஒரு கொள்ளைக்காரன்' என்றார். நிலைமை மோசமாவதை உணர்ந்த விழா ஏற்பாட்டாளர், மைக்கைப் பிடித்தார். 'தலைவர்கள் இருவரையும் நாம் அறிமுகப்படுத்துவதற்கு முன், ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டு விட்டனர்' என்றார்.இது போன்றதொரு வேடிக்கை நிகழ்வு நடக்க வாய்ப்பில்லை என்று சொல்வதற்கில்லை. இப்போது ஊடகங்களில் வரும் அரசியல் தலைவர்களின் உணர்ச்சிபூர்வமான ஆவேச உரைகள், மக்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் இலக்காகி வருகிறது. ஒரு சில தலைவர்களுக்கு, அதை வைத்தே பட்டப் பெயரும் சூட்டப்பட்டு விடுகிறது.
அதிலும் மிக வேகமாக, கட்சிக்கு கட்சி தாவி, சாதனை படைக்கும் தலைவர்கள் சிலர், வெவ்வேறு மாறுபட்ட கோணத்தில் பேசி அசத்துவதும், மக்களுக்கு கிடைக்கும் மிகச் சிறந்த நகைச்சுவை விருந்து.மக்களை கவரும் வகையில் சிந்திக்கத் துாண்டும் அறிவுபூர்வமான கருத்துகளைப் பேசும் திறமை இவர்களிடம் இல்லாமல் போனதால், எதிரணி தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமரிசித்து பேசி, மக்களைக் கவர நினைக்கின்றனர்; அதனால் எதிர்ப்புகளை சந்திக்கின்றனர்.
அனுபவம்
அற்ப விஷயங்களை எல்லாம் ஊதிப் பெரிதாக்கி, அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர். தங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திக் கொள்வதற்காகவே, மக்கள் சற்றும் பொருட்படுத்தாத விஷயங்களைக் கூட இவர்கள் வலியச் சென்று எடுத்து, பிரபலப்படுத்துவது மக்களுக்கு தெரியாமல் இல்லை.பொதுக் கூட்டங்களில் ஆளும் கட்சியினர் தாங்கள் கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை மிகைப்படுத்தி பேசிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் எதிர்க்கட்சியினர் வேறொரு கூட்டத்தில், அவர்கள் செய்த ஊழல்களை பட்டியல் இட்டு ஊதி பெரிதாக்கி விவரித்துக் கொண்டிருக்கின்றனர்.
மக்களுக்கு ஒரு மோசமான பட்டிமன்றத்தை கேட்க நேர்ந்த அனுபவம் ஏற்படுகிறது.காவலர் முதல், காவல் துறை தலைவர் வரை, தேர்தல் ஆணையத்தால் மிக அதிக அளவில் மாற்றப்படுவது, இதுவே முதல் முறை.தரம் தாழ்ந்து பேசியதற்காக பிரசாரத்தில் கலந்து கொள்வதற்கே தடை செய்யப்பட்ட நடவடிக்கையும் முதல் முறையாகத் தான் நிகழ்ந்துள்ளது.தேர்தல் தலைமை கமிஷனராக இருந்த சேஷன் வெளிச்சம் போட்டுக் காட்டிச் சென்ற தேர்தல் ஆணையத்தின் அதிகாரம், தொடர்ந்து முறையாக பயன்படுத்தப்படுவது, உண்மையிலேயே பாராட்டுதலுக்கு உரியது.தேர்தல் தேதி அறிவித்து, விதிமுறைகள் அமலுக்கு வந்த நாள் முதல், அரசின் நிர்வாகப் பொறுப்பு தேர்தல் கமிஷன் கைக்கு வந்து விடுகிறது.
அதன் பின் அரசு எடுக்கும் எந்த முடிவுக்கும் தேர்தல் கமிஷன் ஒப்புதல் பெற்று தான் உத்தரவு பிறப்பிக்க முடியும்.நடிகர் விவேக் இறுதிச்சடங்கில் அரசு மரியாதை, தேர்தல் கமிஷன் அனுமதியுடன் தான் கொடுக்கப்பட்டது. தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஒவ்வோர் அரசு அதிகாரிக்கும் ஓட்டுச்சாவடியில் பணியாற்றும் காவலர் முதல், அனைத்தையும் கண்காணிக்கும் உயர் அதிகாரி வரை, அவர்களின் பணி நிலையான செயல்பாட்டு முறை என்ற அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து அவர்கள் விலகி செயல்பட முடியாது; செயல்பட்டால் கடுமையான நடவடிக்கையைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு நிலையிலும் பொறுப்பு கை மாறும் போது, ஆவணப்படுத்தப்படுகிறது. அதனால் தவறு நடப்பதற்கு வாய்ப்பே இல்லை.அதையும் மீறி நடப்பது மிகமிக அரிதான நிகழ்வு. அத்தகைய நிகழ்வுகள் பெரும்பாலும் வன்முறைக்கு பெயர் பெற்ற சில வட மாநிலங்களில் தான் சாத்தியம்.
அரசியல்வாதி அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திப்பார்; சீர்திருத்தவாதி அடுத்த சந்ததியைப் பற்றி சிந்திப்பார்.கடந்த காலங்களில், தங்கள் தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டிருந்த தலைவர்கள் பலர் இருந்தனர்.ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள அரசியல்வாதிக்கு என, அவரது விசுவாசிகள், தொண்டர்கள் இருப்பர். அவர்களுக்கு ஏதும் தனிப்பட்ட பிரச்னை ஏற்படும்போது அந்த அரசியல்வாதி நியாயமான முறையில் துணை நிற்க வேண்டும். அவர்கள் அதை எதிர்பார்ப்பர். ஓர் அற்பமான புகாரின் அடிப்படையில் விசாரணை செய்யும் நிலையப் பொறுப்பதிகாரி, தானே அவரை எச்சரித்து அனுப்பலாம்.அப்படி அவர் முடிவெடுக்கும் அதிகாரத்தை ஒரு கட்சிக்காரருக்காக பயன்படுத்தும் போது, அவரது நல்லெண்ணத்தையும் நட்பையும்சம்பாதித்துக் கொள்கிறார்.
அந்த நட்பு ஏதாவது ஒரு தருணத்தில் அந்த அதிகாரி சிறப்பாக பணியாற்ற உதவும் வாய்ப்பிருக்கிறது.தேர்தல் காலத்தில் அந்த நிலையப் பொறுப்பு அதிகாரியின் சொல்லுக்கு கட்சிக்காரர்கள் கட்டுப்படுவர். தேர்தல் ஆணையத்திற்கு புகார் கொடுத்து மாற்றல் செய்யப்படும் நிலை அவருக்கு ஏற்பட வாய்ப்பில்லை. நான் பணியாற்றிய காலத்தில், இரண்டு முக்கிய கட்சிகளிலும் அடுத்த இடத்தில் இருந்த கட்சியிலும், தங்கள் தொகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்று, தங்கள் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டவர்கள் இருந்தனர். அவர்கள் தங்களின் அதிக நேரத்தை தங்கள் தொகுதி மக்களுடன் செலவிடுவர். எதிரணியில் இருப்பவர்கள் கூட கட்சியையும், கட்சித் தலைவரையும் விமர்சிப்பார்களே தவிர, மக்கள் செல்வாக்கு மிக்க அந்த தலைவரைப் பற்றி அவதுாறாக பேசத் துணிய மாட்டார்கள்.
அவ்வாறு மக்களின் ஒட்டு மொத்த செல்வாக்கைப் பெற்றவர்கள், தேர்தல் சமயத்தில் தெருத் தெருவாக சென்று காலில் விழுவது, ஆரத்தி எடுக்கச் செய்வது, டீக்கடையில் டீ குடிப்பதை போட்டோ எடுத்து, பத்திரிகையில் விளம்பரம் செய்வது போன்ற நாடகங்களை அரங்கேற்ற வேண்டிய அவசியம் இருக்காது.'கவர்' கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்காது. அப்பாவி இளைஞர்களை பகடைக்காய்களாகவும், சமூக விரோதிகளை பக்க பலமாகவும் பயன்படுத்திக் கொள்ளும் அவசியம் ஏற்படாது. மக்களில் ஒரு சாரார் தங்களின் ஓட்டுரிமையை விற்க பழகிக் கொண்டு விட்டனர். அதனால் அரசியல் வியாபாரமாகி, தேர்தல் வியாபார சந்தையாகி வருகிறது. தேர்தல் ஆணையத்தால் மிகப்பெரிய அளவில் கைப்பற்றப்படும், ரூபாய் நோட்டுகளும் பரிசுப் பொருட்களுமே இதற்கு சாட்சி.சமீபகாலமாக, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சிலர் அரசியலுக்கு வர ஆரம்பித்திருக்கின்றனர்.
வரவேற்பு
இவர்களில் பெரும்பாலும் பணிபுரிந்த காலத்தில் அவர்களது நேர்மைக்கும் திறமைக்கும் மக்களிடம் கிடைத்த வரவேற்பு, அதன் காரணமாக தங்களுக்கு கிடைத்த மதிப்பு மரியாதையால் ஈர்க்கப்பட்டு, சுதந்திரமாக செயல்பட இயலாத அரசு பதவியை விட அரசியலில் இறங்கினால் மக்களின் நன்மதிப்புக்கு பாத்திரமாகி, உயர்ந்த பதவியும், புகழும் கிடைக்கும் என, நம்பி வருகின்றனர் என்று தான், எண்ணத் தோன்றுகிறது.
தங்களை விட கல்வித் தகுதியிலும், திறமையிலும் பின்தங்கியிருப்பவர்களிடம், நாட்டின் நிர்வாகம் சிக்கி சீரழிவதை சகித்துக் கொள்ள முடியாமலும், அவர்களின் சுயநலனுக்காகவும், அரசியல் ஆதாயத்துக்காகவும், தங்களின் அறிவை அடகு வைக்க வேண்டியிருக்கிறதே என்ற ஆதங்கத்தாலும், அவர்கள் அந்த முடிவுக்கு வந்திருக்கலாம். அல்லது அவர்களிடம் காரணமில்லாமல் கடுமையாக நடந்து கொள்ளும் அவர்களின் உயரதிகாரிகள், அரசியல்வாதிகளிடம் பணிந்து போவதைப் பார்த்து அந்த முடிவை எடுக்கின்றனரோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. அல்லது உண்மையிலேயே தங்கள் மனதில் பொதிந்து கிடக்கும் மக்களின் நலனில் அக்கறை கொண்ட பல நல்ல திட்டங்களுக்கு வடிவம் கொடுக்கும் வாய்ப்பை பெறும் முயற்சியா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.பொறுத்திருப்போம் மே, 2ம் தேதி வரை!தொடர்புக்கு: மா.கருணாநிதி காவல் துறை கண்காணிப்பாளர், ஓய்வு இ - மெயில்: spkaruna@gmail.com மொபைல்: 98404 88111