சென்னை: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய டில்லி அணி 'சூப்பர் ஓவரில்' வெற்றி பெற்றது.

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., தொடருக்கான லீக் போட்டியில் டில்லி, ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த டில்லி அணிக்கு பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. கலீல் அகமது வீசிய முதல் ஓவரில் 'ஹாட்ரிக்' பவுண்டரி விளாசினார் பிரித்வி ஷா. இவருக்கு ஒத்துழைப்பு தந்த தவான், சுசித் வீசிய 8வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்தார். அபாரமாக ஆடிய பிரித்வி ஷா, 35 பந்தில் அரைசதமடித்தார். முதல் விக்கெட்டுக்கு 81 ரன் சேர்த்த போது ரஷித் கான் 'சுழலில்' தவான் (28) போல்டானார். பிரித்வி ஷா (53) 'ரன் அவுட்' ஆனார்.
பின் இணைந்த கேப்டன் ரிஷான் பன்ட், ஸ்டீவ் ஸ்மித் ஜோடி பொறுப்பாக விளையாடியது. மூன்றாவது விக்கெட்டுக்கு 58 ரன் சேர்த்த போது சித்தார்த் பந்தில் ரிஷாப் (37) வெளியேறினார். கலீல் வீசிய கடைசி ஓவரில் ஸ்மித், தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார்.டில்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 159 ரன் எடுத்தது. ஸ்மித் (34), ஸ்டாய்னிஸ் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.
வில்லியம்சன் அரைசதம்
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ஐதராபாத் அணிக்கு கேப்டன் டேவிட் வார்னர் (6) ஏமாற்றினார். நான்கு சிக்சர் பறக்கவிட்ட ஜானி பேர்ஸ்டோவ் (38) நம்பிக்கை தந்தார். அடுத்து வந்த விராத் சிங் (4), கேதர் ஜாதவ் (9) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். அமித் மிஸ்ரா வீசிய 9வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்த கேன் வில்லியம்சன் அரைசதமடித்தார். அக்சர் படேல் 'சுழலில்' அபிஷேக் சர்மா (5), ரஷித் கான் (0) சிக்கினர். விஜய் சங்கர் (8) சோபிக்கவில்லை.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன் தேவைப்பட்டது. ரபாடா வீசிய 20வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 15 ரன் கிடைத்தது. ஐதராபாத் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 159 ரன் எடுக்க, போட்டி 'டை' ஆனது. இது, இந்த சீசனில் 'டை'யில் முடிந்த முதல் போட்டியானது. வில்லியம்சன் (66), சுசித் (14) அவுட்டாகாமல் இருந்தனர்.
இதனையடுத்து போட்டி 'சூப்பர் ஓவருக்கு' சென்றது. இதில் இரு அணிகளுக்கும் தலா ஒரு ஓவர் வழங்கப்பட்டது. டில்லி சார்பில் அக்சர் படேல் வீசிய ஓவரில் ஐதராபாத் அணி 7 ரன் எடுத்தது. சுலப இலக்கை விரட்டிய டில்லிக்கு எதிராக ரஷித் கான் பந்துவீசினார். இதில் டில்லி அணி 8 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE