பெண்களின் ஓட்டு யாருக்கு என்பது பற்றி அப்புறம் யோசிக்கலாம்... பா.ஜ.,வுக்கு, தமிழகத்தில் ஓட்டு உண்டா என்பது, மே 2ம் தேதி தெரிந்து விடும் என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., மாநில தலைவர் முருகன் பேட்டி: பெண்களின் ஓட்டு எப்போதும் தி.மு.க.,வுக்கு கிடைக்காது; அதன்படி, கருணாநிதி வரிசையில் ஸ்டாலினும் சேர்ந்துள்ளார்.
கம்யூ., கட்சி சார்பில், மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்தால், நிவாரண நிதி கொடுத்தால் தான் ஆச்சரியப்பட வேண்டும். மத்திய அரசு மீது, ஏதாவது குற்றம் சொல்லிக்கொண்டே இருப்பது தானே, கம்யூ., வழக்கம் என சொல்லத் தோன்றும் வகையில், திருப்பூர் இ.கம்யூ., - எம்.பி., சுப்பராயன் பேட்டி: 'கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடே கிடையாது' என, மத்திய மற்றும் மாநில அரசுகள் பொய் கூறுகின்றன. பல மருத்துவமனைகள் தடுப்பு மருந்து இல்லாமல் திண்டாடுகின்றன. அலைமோதும் கூட்டத்துக்கு தகுந்தாற்போல், மருத்துவ குழுவின் கண்காணிப்பு இல்லாமல், அனைத்து மாநிலங்களிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தலில் தோல்வி அடைந்தால், அதற்கு, தி.மு.க., சொல்வதற்கு ஏதாவது காரணம் இருக்கு... ஆனால், பா.ஜ., தோற்றால், என்ன சொல்லி, மனதை தேற்ற முடியும் எனக் கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா பேட்டி: நாளை தோல்வி அடைந்தவுடன் ஏதாவது காரணம் சொல்ல வேண்டுமல்லவா... அதற்காகத் தான், தற்போது ஓட்டு இயந்திரங்களில் மாற்றம் செய்கின்றனர் என, எதிர்க்கட்சியினர் குறைகூறி வருகின்றனர். தோல்வி உறுதி என்பதை, தி.மு.க., கூட்டணியினர் புரிந்து கொண்டுள்ளனர்.
அ.தி.மு.க., கொஞ்சம் கரிசனம் காட்டி, ச.ம.க.,வை கூட்டணியில் சேர்த்து, இரண்டு, 'சீட்' கொடுத்திருந்தால், இப்படி அறிக்கை கொடுத்திருப்பாரா என, கிண்டலாக சொல்லத் தோன்றும் வகையில், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அறிக்கை: 'ஸ்டெர்லைட்' நிறுவனம், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய விரும்பினால், இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும், ஆலை நிறுவலாம். இதை காரணம் காட்டி, தமிழகத்தில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க, அந்நிறுவனம் முனைப்பு காட்டுகிறது. ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கரிசனம், தமிழகத்திற்கு தேவையில்லை.
தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை கிடையாது. மக்களிடம் பீதியை ஏற்படுத்துபவர், நல்ல அரசியல்வாதியாக இருக்கவே முடியாது எனக் கூற தோன்றும் வகையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: தமிழக மக்களுக்கு, ஆக்சிஜன் தேவை இருக்கும்போது, தமிழக அரசு நிர்வாகத்தை கலந்தாலோசிக்காமல், வெளி மாநிலங்களுக்கு ஆக்சிஜனை அனுப்பும் மத்திய அரசின் முடிவு கண்டனத்திற்குரியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE