விஞ்ஞானத்தின் துணையோடு நாம் நிலவில் கால் வைத்துவிட்டோம். செவ்வாய் கிரகத்தில் குடியேற, ஆராய்ச்சி துவங்கிவிட்டோம். நமக்கு தற்போது இயற்கையின் சவால் பிறப்பும்,
இறப்பும் மட்டுமே.
அதில், இப்போது பிறப்பையும் கையில் எடுத்துவிட்டோம். செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்தல் மற்றும் அதற்கும் ஒரு படி மேலே, மாதவிடாய் நின்ற பின்பும், ஒரு பெண்ணை குழந்தை பெறச்செய்தல் என, மருத்துவ அறிவியல், பல்வேறு பரிணாம வளர்ச்சியை பெற்று உள்ளது. இது இயற்கைநெறிமுறை வரம்புகளை மீறுகிறதா என்பது பலரது ஐயம்.
ஒரு நிஜ சோக கதை...
கோவையில் ஒரு தம்பதியினர், 'இன்விட்ரோ பெர்ட்டிலைசேஷன் (ஐ.வி.எப்.,)' மூலம், ஒரு குழந்தையைப் பெற முடிவு செய்தபோது தாய்க்கு, 66 வயது; தந்தைக்கு 73 வயது. அவர்
கருத்தரிக்க முடியாததால் மன அழுத்தத்துக்கும், சமூக அவதுாறுக்கும் ஆளானார்.மாதவிடாய் நின்ற பிறகும் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற செய்தி, அவருக்கு கடவுளின் கருணையாகத் தோன்றியது. ஆனால், பிரசவித்த மூன்று ஆண்டுகளுக்குப் பின், அவரது
வயதான கணவர் காலமானார். 69 வயதில் அவர் இப்போது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு
உள்ளார். தற்போது அக்குழந்தைவளர்த்து, பராமரிக்க ஆளின்றி தவிக்கிறது.
தொழில்நுட்பம், 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இயற்கையை எதிர்த்து, கருத்தரிக்க
உதவுகிறது. ஆனால், அத்தகைய பெண்கள் தங்கள் உடல்நிலை மற்றும் குழந்தை பராமரிப்பில் உள்ள, பல பிரச்னைகளை கருத்தில் கொண்டு, இது தேவையா என்பதனை பரிசீலனை செய்ய வேண்டும்.
'இன்விட்ரோ பெர்ட்டிலைசேஷன்' மூலம்,55 அல்லது 60 வயதுக்கு மேற்பட்ட மாதவிடாய் நின்ற,பிந்தைய வயதில் கருத்தரிக்கும் தாய்மார்கள் இப்போது அதிகமாகிவிட்டனர். இது தாய்க்கு பாதுகாப்பானதா? அவர்களின் ஒத்த வயதுள்ளவர்கள் பேரன், பேத்திகளை கொஞ்சும் நேரத்தில், குழந்தை பெறுவது வரைமுறையுள்ள பொறுப்பான முடிவாகுமா என்பது பலரது கேள்வி.
இயற்கைக்கு முரண்?
இனப்பெருக்க ஆண்டுகளில், ஒரு பெண்ணிடம் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன், லுடினைசிங் ஹார்மோன் மற்றும் நுண்ணறை துாண்டுதல் ஹார்மோன் ஆகியவை உற்பத்தியாகின்றன. பொதுவாக, 45 முதல் 55 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு அதாவது, சராசரியாக, 51 வயதில் மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுகிறது. மாதவிடாய் நிற்கும் காலத்தில், குழந்தையை
உருவாக்கும் முட்டையை உற்பத்தி செய்வது என்பது முடியாது.
இருப்பினும், மாதவிடாய் நின்ற பிறகு கூட, ஐ.வி.எப்., முறை தற்போது வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. இதற்கு திரவ நைட்ரஜன் கேன்களில் அடைக்கப்பட்ட உறைந்த
முட்டைகளைப் பயன்படுத்தலாம்; புதிய நன்கொடை முட்டைகளையும் பயன்படுத்தலாம். இந்த
முட்டைகளை கருப்பையில் பொருத்துவதற்கு, உடலைத் தயாரிக்க பெண்ணுக்கு இடைவிடாத ஹார்மோன் சிகிச்சை தேவைப்படுகிறது.
60 வயதுக்கு மேல் கருத்தரிக்கலாமா?
வயதான தம்பதியினர் குழந்தை இல்லாதவர்கள், சட்டப்பூர்வ வாரிசை விரும்புவது, அல்லது ஒரு குழந்தையின் அகால மரணத்துக்கு ஈடுசெய்ய ஒரு குழந்தையைப் பெற முயற்சிப்பது போன்ற சமூக அழுத்தங்களுடன் வரும்போது, அத்தம்பதிகளுக்கு ஐ.வி.எப்., மூலம் குழந்தை பெற வசதி செய்வதற்கான முடிவை பெரும்பாலும் மருத்துவர்கள் எடுக்கின்றனர்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.,) வரைவு மசோதாவை முன்வைத்து, கருவுறுதல் நிபுணர் டாக்டர் கண்ணகி உத்தராராஜ் கூறுகையில்,''ஒரு பெண்ணுக்கு இனப்பெருக்க தொழில்நுட்பத்தை உபயோகிக்க, உயர் வரம்பு 45 ஆண்டுகள் மற்றும் ஒரு ஆணுக்கு 50 ஆண்டுகள். 60 வயதிற்கு மேற்பட்ட மாதவிடாய் நின்ற பெண்களை கருத்தரிக்க அனுமதிப்பது நெறிமுறை ஆகாது.
ஏனென்றால், தம்பதியினருக்கு, குழந்தையை வளர்ப்பதற்கு போதுமான ஆரோக்கியம்
இருக்காது.பள்ளியில் படிக்கும்போது அக்குழந்தைகள் உளவியல்பிரச்னைகளையும் சந்திக்க நேரிடும். அக்குழந்தைகளின் பெற்றோர் தாத்தா, பாட்டி போல தோற்றமளிப்பதால்,குழந்தைகள் பிறரின் கேலிக்கு ஆளாகலாம்,'' என்றார்.
அபாயங்கள் அதிகம்
பெயர் கூற விரும்பாத கருவுறுதல் நிபுணர் ஒருவர் கூறுகையில், 'ஒரு பெண்ணுக்கு இனப்
பெருக்கம் செய்ய முடியும் என்பது மிகுந்த திருப்தி அளிக்கும் உணர்வாக இருந்தாலும், ஐ.வி.எப்., மூலம் மாதவிடாய்க்குப் பிந்தைய காலத்து கருத்தரிப்பு பல ஆபத்துகளையும் உள்ளடக்கியுள்ளது. பெண்கள் கர்ப்பகால நீரிழிவு, கவனமாக கண்காணிக்க வேண்டிய ஒன்று.
'மேலும், அதிக ரத்த அழுத்தம், கருச்சிதைவு அல்லது இறந்தே பிறக்கும் குழந்தை, முன்கூட்டியே அல்லது குறைந்த எடை கொண்டு பிறக்கும் குழந்தை போன்றவை பிரச்னையாக மாறலாம். சிலருக்கு வயது காரணமாக தசைகள் மற்றும் எலும்புகள் வளைந்து கொடுக்காததால், பிரசவத்தில் சிக்கல் ஏற்படலாம். உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும் போது நரம்புகள் வீங்கலாம். நஞ்சுக்கொடி பிரச்னைகளுக்கும் வழிவகுக்கலாம்.அதிகரித்த வயதுகாரணமாக எலும்புகள் வலுவாக இல்லாதபோது, பெண்கள் உடலின்மூட்டுகளில்அதிக எடை போடுவார்கள்' என்றார்.
- நமது நிருபர்-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE