திருப்பூர்:திருப்பூரில் இயங்கி வரும், 'அக் ஷய பாத்திரம்' அறக்கட்டளை 2019ல் துவங்கி, ஏழைகளின் பசியை போக்கிவருகிறது.
நகரை, 10 பகுதிகளாக பிரித்து, ஆதரவற்ற ஏழைகள், மனநலம் பாதிக்கப்பட்டவர், மாற்றுத்திறனாளிகளுக்கு, தினமும் காலை, மதியம் உணவு வழங்கப்படுகிறது.ஊரடங்கின் போது, மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன், 12 ஆயிரத்துக்கும் அதிகமான ஏழைகளுக்கு, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. வெளிமாநில தொழிலாளர் சொந்த ஊர் திரும்பிய போதும், உணவு பார்சல் வழங்கி சேவையாற்றியது.
முழு ஊரடங்கான நேற்றும், 'அக் ஷய பாத்திரம்' அறக்கட்டளையினர், பொதுமக்களுக்கும், ஆதரவற்றவருக்கும், இலவச உணவு பொட்டலம் வழங்கினர்.அறக்கட்டளை தலைவர் செந்தில்குமார் கூறு கையில், 'உணவு இல்லாமல் யாரும் கஷ்டப்படக்கூடாது என்ற நோக்கில், 70 தன்னார்வலர்கள் இணைந்து, பசி போக்கும் சேவையாற்றி வருகிறோம்.இன்றுடன் (25.04.2021) (நேற்று), 548வது நாளாக, தினமும், 350 முதல், 400 நபர்களுக்கு உணவு பொட்டலம் வழங்கிஉள்ளோம்.
போலீஸ், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தி மருந்து, மாத்திரை வழங்கியுள்ளோம். மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன், தினமும் உணவு வழங்கும் சேவையை செய்து கொண்டிருக்கிறோம்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE