சென்னை: ''ரெம்டெசிவிர் மருந்து உயிர் காக்கும் மருந்தல்ல; மக்கள் அவற்றை தேடி அலைய வேண்டாம்,'' என, பொது சுகாதார துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறினார்.
தமிழகத்தில், கொரோனா நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிப்பு இருந்தால், ரெம்டெசிவிர் ஊசி மருந்து செலுத்த, டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். மருந்தை வெளியில் வாங்கி வரும்படி, தனியார் மருத்துவமனை டாக்டர்கள் பரிந்துரை கடிதம் கொடுத்து அனுப்புகின்றனர். இதனால், டாக்டர்களின் பரிந்துரை சீட்டுடன், தெருத் தெருவாக பொதுமக்கள் அலைந்து வருகின்றனர். இந்நிலையில், 'ரெம்டெசிவிர் உயிர் காக்கும் மருந்தில்லை' என, பொது சுகாதார துறை தெரிவித்துள்ளது.

அதன் இயக்குனர் செல்வ விநாயகம் கூறியதாவது: உலக சுகாதார நிறுவனம், 'ரெம்டெசிவிர்' மருந்து உயிரை காப்பாற்றக் கூடியதல்ல என, தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா தொற்றுக்கான மருந்தாகவும் பரிந்துரைக்கவில்லை. ரெம்டெசிவிர் மருந்தை எடுத்து கொள்வதால், மருத்துவமனைகளில், நோயாளிகள் சிகிச்சை காலம் மட்டுமே குறையும். அனைவருக்கும் அந்த மருந்து தேவைப்படாது. தனியார் மருத்துவமனைகள், தங்களிடம், ரெம்டெசிவிர் மருந்தில்லை என்றால், நோயாளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டாம்.
அவ்வாறு அவசிய தேவை ஏற்பட்டால், மருத்துவமனைகள் வாயிலாக, தமிழக மருத்துவ பணிகள் கழகத்தை தொடர்பு கொண்டு, நோயாளியின் விபரத்தை அளித்தால், ஒரு டோஸ் மருந்து, 783 ரூபாய்க்கு வழங்கப்படும்.எனவே பொதுமக்கள், ரெம்டெசிவிர் மருந்திற்காக அலைய வேண்டாம். டாக்டர்களும் மருந்து குறித்து, நோயாளிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில், தேவையான அளவு மருந்துகள் கையிருப்பில் உள்ளன. தேவைப்படும் நோயாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இவற்றை அனைத்து மருத்துவமனைகளும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE