பெங்களூரு: கர்நாடகாவில் நாளை (ஏப்.,27) இரவு முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வார நாட்களில் இரவு நேர ஊரடங்கும், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனாலும் மாநிலத்தில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. மொத்தம் 13.30 லட்சத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டனர் . அங்கு நேற்று ஒரே நாளில் 34,804 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது, 143 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில், கர்நாடகாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடியூரப்பா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், மாநிலத்தில் 2 வாரங்கள் ஊரடங்கு பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கர்நாடகாவில் நாளை (ஏப்.,27) இரவு 9 மணி முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த முழு ஊரடங்கு நாட்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணிக்கு பிறகு கட்டுமான, உற்பத்தி மற்றும் வேளாண் துறைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும், பொது போக்குவரத்து மூடப்படும் எனவும் முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். மேலும், 18 வயதை கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என அவர் அறிவித்துள்ளார்.