'பெரும்பாலும் எல்லா மாநில அரசுகளும், இலவசமாக தடுப்பூசி வழங்க முன்வந்துள்ள நிலையில், விலை வைத்துள்ளது, தனியார் பயன்பாட்டிற்காகத் தானே; அதற்கும், நம் எதிர்க்கட்சியினர் கூப்பாடு போடுகின்றனரே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: உலகம் முழுக்க கொரோனா தொற்று உள்ளது. அந்த நாடுகளின் கொரோனா தடுப்பூசிகளின் விலையை விட, நம் நாட்டில், கொரோனா தடுப்பூசிக்கு மிகவும்குறைந்த விலை.
'நீங்கள் அவர் என்ன சொல்கிறார் என்றே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்; ஊடகங்கள் அப்படியில்லையே; இவர் போல நிறைய பேர், பிரிவினைவாதத்துடன் பேசுகின்றனர்; அவர்களையும் கவனிக்க வேண்டியுள்ளதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா அறிக்கை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், '1,000 பேர் செத்தாலும் பரவாயில்லை; ஸ்டெர்லைட்டை ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கக் கூடாது' என்கிறார். இவரை புறக்கணிப்போம். அவரின் பேச்சு குறித்து, ஊடகங்கள் மவுனம் சாதிப்பது ஏன்?
'எல்லா நாட்களிலும் முழுதும் அடங்கியிருந்தால், மக்கள் வாழ்வும், 'அடங்கி' விடுமே...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு வெற்றி பெற்றுள்ளது. காக்கை, குருவிகள் கூட ஊரடங்கை மதித்து சாலைகளில் நடமாடவில்லை. மக்களும் இன்று போல் எல்லா நாட்களிலும் ஊரடங்கிலிருந்தால் கொரோனாவை விரைவாக வீழ்த்தி விடலாம்.
'உண்மை தான். ஆனால், மக்களைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பது மத்திய அரசல்ல; மத்திய அரசுக்கு குடைச்சல் கொடுக்கும், எதிர்க்கட்சிகள் தான்...' என, நெத்தியடியாக கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி அறிக்கை: இதுபோன்ற தேசிய பேரழிவு காலத்தில், மத்தியில் எதையும் கண்டுகொள்ளாத கொடூர அரசு இருக்கும் நேரத்தில், மக்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து, சமூக நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும்.
'அறையில் உட்கார்ந்து கொண்டு, பிரதமருடன் பேசியதை, அப்படியே, 'லைவ்'வாக, தன் சோஷியல் மீடியா பக்கத்திலும் போட்டு விட்டார் என சேர்த்து சொல்லுங்கள்...' என, எடுத்துக் கொடுக்கும் வகையில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா அறிக்கை: டில்லியில் எங்கெங்கும் மக்கள், கொரோனாவால் செத்து விழுந்து கொண்டிருக்கின்றனர். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அறையில் அமர்ந்து கொண்டு, தன்னைத் தானே விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார். எந்த மருத்துவமனைக்கும் அவர் சென்றதில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE