பிரைவேட் ஆஸ்பத்திரியில நகை அடகு கடை... கெளம்பத் தயாரா இருக்கு அதிகாரிகள் படை!| Dinamalar

பிரைவேட் ஆஸ்பத்திரியில நகை அடகு கடை... கெளம்பத் தயாரா இருக்கு அதிகாரிகள் படை!

Updated : ஏப் 27, 2021 | Added : ஏப் 27, 2021
பணி நிமித்தமாக, கலெக்டர் அலுவலகம் வந்திருந்த சித்ராவும், மித்ராவும், அருகாமையில் உள்ள பேக்கரிக்குள் நுழைந்தனர்.இஞ்சி டீ, பப்ஸ் ஆர்டர் கொடுத்த சித்ரா, ''என்னப்பா, கொரோனா பரவல் ரொம்பவே ஜாஸ்தியா இருக்கு போலிருக்கே,'' என, ஆரம்பித்தாள்.''ஆமாக்கா, பரவல் அதிகமாகிட்டே போனா, இரவு நேர ஊரடங்குக்கு பதிலா, சாயங்காலம், 6:00ல இருந்து மறுநாள் அதிகாலை, 6:00 மணி வரைக்கும் ஊரடங்கு
 பிரைவேட் ஆஸ்பத்திரியில நகை அடகு கடை...  கெளம்பத் தயாரா இருக்கு அதிகாரிகள் படை!

பணி நிமித்தமாக, கலெக்டர் அலுவலகம் வந்திருந்த சித்ராவும், மித்ராவும், அருகாமையில் உள்ள பேக்கரிக்குள் நுழைந்தனர்.இஞ்சி டீ, பப்ஸ் ஆர்டர் கொடுத்த சித்ரா, ''என்னப்பா, கொரோனா பரவல் ரொம்பவே ஜாஸ்தியா இருக்கு போலிருக்கே,'' என, ஆரம்பித்தாள்.

''ஆமாக்கா, பரவல் அதிகமாகிட்டே போனா, இரவு நேர ஊரடங்குக்கு பதிலா, சாயங்காலம், 6:00ல இருந்து மறுநாள் அதிகாலை, 6:00 மணி வரைக்கும் ஊரடங்கு அமல்படுத்த 'பிளான்' வச்சிருக்காங்களாம்,''

''கொரோனாவை வச்சு, பிரைவேட் ஆஸ்பத்திரியில கரன்சியை பறிக்கிறாங்களாமே,''பப்ஸை சுவைத்த மித்ரா, ''உண்மைதான்ங்கா, சின்ன ஆஸ்பத்திரியில, ஒரு நாளைக்கு, 6,000ல இருந்து, 7,500 ரூபாய் வரைக்கும் வாங்குறாங்க. பெரிய ஆஸ்பத்திரியா இருந்தா, 10 ஆயிரம் வரைக்கும் வாங்குறாங்க. ரொம்ப பெரிய ஆஸ்பத்திரியில, செயற்கையாவே 'பெட்' இல்லைன்னு சொல்லி, 'பேக்கேஜ் சிஸ்டம்' பேசுறாங்க. ஆறு லட்சம் வரைக்கும் பணத்தை பிடுங்குறாங்களாம்,''

''எனக்குத் தெரிஞ்ச நண்பரிடம் வாங்கியிருக்காங்க. இருந்தாலும், உடம்பு பழைய நிலைமைக்கு வரலையாம். மறுபடியும் ஆஸ்பத்திரிக்கு போயிருக்காரு. மறுபடியும் மூணு லட்சத்தை பிடுங்கிட்டாங்களாம்,'' என்றாள்.

''அடப்பாவமே... இதுமாதிரி அவஸ்தையில சிக்காம இருக்கறதுக்காவது, தொற்று வராம, ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்ப்பா,''

''அக்கா, விஷயத்தை முழுசா கேட்டா, இன்னும் ஷாக் ஆயிடுவீங்க,'' என்ற மித்ராவிடம், ''ஏன், என்னாச்சு,'' என கேட்டாள் சித்ரா.

''அதுவா, கொரோனா நோயாளிகள் யாராவது பணம் இல்லாம கஷ்டப்பட்டாங்கன்னா, தங்க நகையை அடகு வைக்கிறதுக்கும், சில பிரைவேட் ஹாஸ்பிட்டல்ல வசதி செஞ்சிருக்காங்க. ஹாஸ்பிடல் வளாகத்துக்குள்ளேயே, அதுக்கான இடமும் ஒதுக்கிக் கொடுத்திருக்காங்கன்னா, நிலைமை எந்தளவுக்கு, விபரீதமா போயிட்டு இருக்குன்னு பாருங்க,

''அதை கேட்டதும் அதிர்ச்சியான சித்ரா, ''என்னப்பா, இவ்ளோ அநியாயமா இருக்குது. புது கலெக்டர் என்னதான் செய்றாரு,'' என, கேட்டாள்.

''தேர்தலுக்காக, எலக்சன் கமிஷன் நேரடியா நியமிச்ச அதிகாரியாச்சே. ஓட்டு எண்ணிக்கையை பிரச்னை இல்லாம முடிக்கிறதுக்கு, 'பிளான்' பண்ணிட்டு இருக்காரு. அப்பப்ப, கொரோனா சம்பந்தமான பிரச்னையில தலையிட்டு, நடவடிக்கை எடுக்குறாரு. அவ்வளவுதான்,''பேக்கரியை விட்டு வெளியே வந்த இருவரும், கலெக்டர் ஆபீஸ் நோக்கி, நடந்து சென்றனர்.

''அதெல்லாம் இருக்கட்டும். கட்சிக்காரங்கள மாதிரி, டி.ஆர்.ஓ.,வும், போலீஸ் துணை கமிஷனரும் தெனமும் ஓட்டு எண்ணுற மையத்துக்கு போயிட்டு வர்றாங்களாமே,''

''அதுவா, மொபைல் டாய்லெட் கன்டெய்னர் பிரச்னை, தேவையில்லாத விமர்சனத்தை உருவாக்குச்சே. அதனால, ரொம்பவே, 'அலர்ட்'டா இருக்கச் சொல்லி, 'அட்வைஸ்' பண்ணியிருக்காங்க. ஏதாச்சும் பிரச்னைன்னா எங்கள்ட்ட சொல்லுங்கன்னு, கட்சிக்காரங்களிடம், உயரதிகாரிகள் பேசியிருக்கிறாங்க. கீழ்மட்ட அதிகாரிகள் லெவல்ல பேசி, காதுக்கு வராம போயிடக் கூடாதுன்னு, உயரதிகாரிகள் தினமும் ஒரு எட்டு போயிட்டு வர்றாங்க,''

''கட்சிக்காரங்களும் பீதியில இருக்காங்களாமே,''

''அக்கா, ஓட்டு எண்ணுற மையத்துக்கு வர்றவங்க, கொரோனா டெஸ்ட் எடுக்கணும்னு சொன்னதுனால, கட்சிக்காரங்க புலம்புறாங்க. எதிர்க்கட்சிக்காரங்களை வர விடாம தடுக்குறதுக்காக, இப்படி செய்றாங்களோன்னு, தி.மு.க., தரப்புல சந்தேகப்படுறாங்க,'' என்ற மித்ரா,

''கரன்சியை தண்ணீயாய் செலவழிச்ச, இலைக்கட்சிகாரங்க 'அப்செட்'டுல இருக்காங்களாமே,'' என, 'ரூட்' மாறினாள்.

''ஆமா மித்து, கவுண்டம்பாளையத்திலும், கிணத்துக்கடவு தொகுதியிலும் பெருந்தொகையை சுருட்டிட்டாங்களாம். கிணத்துக்கடவு தொகுதியில பணம் பட்டுவாடா செஞ்ச இடத்திலும், சாதகமா ஓட்டு விழலையாம்.கமல் கட்சிக்கும், சீமான் கட்சிக்கும் ஓட்டு விழுந்திருக்கறதா சொல்றாங்க. அதனாலதான் 'மூடுஅவுட்','' என்ற சித்ரா,

''டார்ச் லைட் கட்சிக்காரங்க, அடுத்த லெவலுக்கு போயிட்டதா, சொல்றாங்களே'' என, கேட்டாள்.

''ஆமாக்கா, உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுறதுக்கு கட்சிக்காரங்க விரும்புறாங்களாம். களத்துல என்னென்ன பிரச்னையை சந்திச்சீங்கன்னு, ஒவ்வொரு வேட்பாளரிடமும் கமல் தனித்தனியா, மனம் விட்டு பேசிட்டு வர்றாராம்,''

''ஒவ்வொரு வார்டிலும், கட்சிக்காக களப்பணியாற்றிய இளைஞர்களை தேர்வு செஞ்சு, அவுங்களுக்கு கீழே வார்டு கமிட்டி உருவாக்குற வேலையில இருக்காங்க. 'ஸ்லம்' ஏரியாக்களை 'டெவலப்' பண்றதுக்கும் 'பிளான்' வச்சிருக்காங்களாம். எலக்சன் முடிவுக்கு பிறகு, செயல்ல இறங்கப் போறதா சொல்றாங்க,''

''கவர்மென்ட் அதிகாரிகளும் கமலை பார்த்துதான் பயப்படுறாங்களாமே,''

''அதுவா, ஓட்டல்ல வாடிக்கையாளரை போலீஸ் எஸ்.ஐ., தாக்குன விவகாரத்துல அவர் குரல் எழுப்பிய பிறகே, ஆயுதப்படைக்கு மாத்துனாங்க; 'சஸ்பெண்ட்' செஞ்சாங்க. 'ஸ்மார்ட் சிட்டி' சுவர் இடிஞ்சு விழுந்ததும், அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்தாங்கன்னு கேள்வி எழுப்புனாரு. அதுக்கப்புறம், மெமோ கொடுத்தாங்க; 'சஸ்பெண்ட்' ஆர்டர் பறந்துச்சு,''

''நீ சொல்ற ரெண்டு சம்பவத்திலும், கமல் மட்டுமே குரல் கொடுக்கலையே; தி.மு.க., தரப்பிலும் அறிக்கை வெளியிட்டாங்களே,''

''அக்கா, தி.மு.க., தரப்புல, வழக்கம்போல வெளியிடுற அறிக்கை தானேன்னு, அதிகாரிகள் கண்டுக்கலை. கமல் தரப்புல, கடைசி அஞ்சு வருஷம் செஞ்ச அரசாங்க கட்டுமான பணிகளை ஆய்வுக்கு உட்படுத்தணும்னு சொன்னதுனால, அதிகாரிங்க ஆடிப்போயிட்டாங்க,''

''ஏம்ப்பா, அவுங்களே பயப்படுறாங்கன்னா, தரமில்லாமதான் வேலை நடந்திருக்குதா,''
''அக்கா, நம்மூர்ல, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துல பெரும்பாலான வேலையை, 'ஆளுங்கட்சி ஆசி'யுள்ள கம்பெனியே செஞ்சிருக்கு. உயரதிகாரிகளிடம் ஆலோசிக்காமலேயே, சில வேலைகளை தன்னிச்சையா செஞ்சிருக்கு. திட்ட அறிக்கையில இல்லாத வேலையில இறங்கி, ரேஸ்கோர்ஸ் மாடல் ரோடு விவகாரத்துல, சிக்கல்ல மாட்டிக்கிட்டாங்க,''

''எலக்சன் முடிவுக்கு பிறகு, நம்மூரை விட்டு அதிகாரிங்க கெளம்பறதுக்கு ரெடியா இருக்காங்களாமே,'' என, 'ரூட்' மாறினாள் சித்ரா.

''ஆமாக்கா, நானும் கேள்விப்பட்டேன். கலெக்டரும், போலீஸ் கமிஷனரும், புது அரசு அமைஞ்சதும் இட மாறுதலாகி போயிடுவாங்க. 'ஸ்மார்ட் சிட்டி' பணிகளுக்கு பலவிதத்திலும் குடைச்சல் கொடுக்கறதுனால, கார்ப்பரேஷன் உச்ச அதிகாரியும் கெளம்பறதுக்கு தயாரா இருக்காராம்,''

''அடுத்த, 'சிட்டி இன்ஜினியர்' நான்தான்னு, ஒருத்தரு சொல்லிக்கிட்டு இருக்காராமே,''

''நீங்க சொல்றது உண்மைதான்ங்கா! 'ஸ்மார்ட் சிட்டி' அதிகாரிகளை, மாவட்டம் விட்டு மாவட்டம் விரட்டி அடிக்கப் போறதா, ஞானமுள்ள இன்ஜினியர் ஒருத்தரு, சொல்லிக்கிட்டு இருக்காராம். 'பவர்புல்' பதவி, இனி எனக்குதான்னு, தி.மு.க., புள்ளியிடம் இப்பவே நெருக்கம் காட்டுறாராம். அதுக்காகவே, சிங்காநல்லுார் ஏரியாவை சுத்தி வர்றாராம்,''

''மித்து, கொஞ்ச நேரம் இங்கே இரு. நண்பரை பார்த்துட்டு வந்திடுறேன்,'' என்ற சித்ரா, மரத்தடியில் நின்றிருந்த அலுவலரை சந்தித்து, பேசி விட்டு வந்தாள்.

''என்னக்கா, ஏதாச்சும் விஷேசமான தகவலா,''''ஸ்டேஷன்ல கட்டப்பஞ்சாயத்து செய்றதையே வழக்கமா செஞ்சுக்கிட்டு இருக்கீங்களா. இனியும் சும்மா இருக்க மாட்டேன்னு, ஓபன் மைக்குல போலீஸ்காரங்களை, கமிஷனர் 'லாடம்' கட்டுனாராம்,''

''அக்கா, அவரு எப்பவுமே அப்படித்தான். தடாலடியா நடவடிக்கை எடுப்பாரு. லேடி போலீஸ் சொன்ன புகாரை நம்பி, இன்ஸ்.,யை வேறிடத்துக்கு மாத்துனாரு. உண்மையை லேட்டா தெரிஞ்சுக்கிட்ட அவர், லேடி போலீசை, ஓட்டு எண்ணுற மையத்துக்கு துாக்கியடிச்சிட்டாரு,''

''என்ன பிரச்னை, எந்த ஸ்டேஷன்ல நடந்துச்சுன்னு, கொஞ்சம் விளக்கமாச் சொல்லேன்,''

''சிங்காநல்லுார் ஸ்டேஷன்ல வேலைபார்த்த லேடி போலீசுக்கு, கம்ப்யூட்டர் வேலையை தவிர வேறெந்த வேலையும் கொடுக்கக்கூடாதாம். வேறு வேலை செய்யச் சொன்னதால, மெடிக்கல் லீவுல போயிருக்காங்க. வேலைக்குத் திரும்பியதும் மறுபடியும் வேற வேலை கொடுத்திருக்காரு, இன்ஸ்.,''

''உடனே, மன உளைச்சல் தர்றாருன்னு, கமிஷனரிடம் அந்த லேடி போலீஸ் கண்ணீர் விட்டிருக்காங்க. அதை உண்மைன்னு நம்பி, கட்டுப்பாட்டு அறைக்கு இன்ஸ்.,யை மாத்துனாரு கமிஷனர். அதுக்கப்புறம் ஸ்டேஷனுக்கு வந்த அந்த லேடி, 'என்கிட்ட எதுவும் வெச்சுக்காதீங்க; அடுத்த டார்கெட் ஏ.சி.,'ன்னு சவால் விட்டு பேசியிருக்காங்க,''

''இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும், ஓட்டு எண்ணுற மையத்துக்கு லேடி போலீசை மாத்திட்டாங்க. ஸ்டேஷன் டூட்டிக்கு இன்ஸ்., மறுபடியும் வந்துட்டாரு,''ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் மித்ரா.

செஞ்சிலுவை சங்க கட்டடத்தை கடந்தபோது, ஆளுங்கட்சி கொடி கட்டிய கார் பறந்து சென்றது.அதைப்பார்த்த சித்ரா, ''ஆளுங்கட்சி பிரதர், மருத்துவம் படித்த தனது மகனுக்காக, குனியமுத்துார் ஏரியாவுல ஒரு ஆஸ்பத்திரியை விலைக்கு வாங்கிட்டாராம். பக்கத்துல இருக்கற, அம்மன் கோவிலுக்கு தானமா கொடுத்த இடத்தையும் வளைச்சுப் போடுறதுக்கு முயற்சி செய்றாங்களாம்,''

''அப்படியா,'' என, கேட்டபடி, வீட்டை நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X