புதுடில்லி: கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை, நாடு முழுதும் தீவிரமாக உள்ளது. பல மாநிலங்களில், ஆக்சிஜன், மருந்துகள், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு உள்ளது. இந்த பிரச்னைகள் குறித்து, தானாக முன்வந்து, உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:
தேசிய நெருக்கடியான விவகாரங்களில், நாங்கள் வெறும் பார்வையாளராக இருக்க மாட்டோம். கொரோனா தொடர்பான வழக்குகளை, உயர் நீதிமன்றங்கள் விசாரித்து வருகின்றன. இதை மாற்ற விரும்பவில்லை.
தங்களின் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிறப்பாக கண்காணிக்க, உயர் நீதிமன்றங்களால் தான் முடியும். எனினும், அவசியமான நேரத்தில், உச்ச நீதிமன்றம் தலையிடும். அதிகார வரம்பு தொடர்பான விவகாரங்களில், உயர் நீதிமன்றங்களுக்கு பிரச்னை ஏற்பட்டால், உச்ச நீதிமன்றம் தலையிட்டு உதவி செய்யும்.
கொரோனா தடுப்பூசிக்கு மூன்று விதமான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதற்கான காரணத்தை, மத்திய அரசு விளக்க வேண்டும். அதேபோல், மாநிலங்களுக்கு ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகள் வினியோகம் செய்வதற்கான நடவடிக்கைகள் பற்றியும், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE