இது உங்கள் இடம்: டிவி செய்தியாளர்களே.. உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்!| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இது உங்கள் இடம்: 'டிவி' செய்தியாளர்களே.. உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்!

Added : ஏப் 28, 2021 | கருத்துகள் (138)
Share
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :ஆ.சீனிவாசன், உடுமலைப்பேட்டையிலிருந்து எழுதுகிறார்: 'கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை, மருத்துவமனையில் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கின்றனர்' என்று, ஏதோ கொலைக் குற்றத்தை கண்டுவிட்டது போல, ஒரு தொலைக்காட்சி செய்தியில் காட்டுகின்றனர். 'மருத்துவமனையில் இடம் இல்லை' என்று
corona patients, lying, floor, treatment


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :


ஆ.சீனிவாசன், உடுமலைப்பேட்டையிலிருந்து எழுதுகிறார்: 'கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை, மருத்துவமனையில் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கின்றனர்' என்று, ஏதோ கொலைக் குற்றத்தை கண்டுவிட்டது போல, ஒரு தொலைக்காட்சி செய்தியில் காட்டுகின்றனர். 'மருத்துவமனையில் இடம் இல்லை' என்று கூறி, நோயாளிகளை திருப்பி அனுப்பாமல், தரையில் படுக்க வைத்தாவது சிகிச்சை அளிக்க முன் வரும் மருத்துவமனைகள், டாக்டர்கள், நர்ஸ்களை பாராட்ட வேண்டுமே தவிர, குற்றம் சொல்லக் கூடாது.

இப்போதைய சூழ்நிலையில், எப்படியேனும் உயிரைக் காப்பாற்றுவது முக்கியம். அதற்கு தரையில் படுத்தால் என்ன, வராண்டாவில் உட்கார வைத்தால் என்ன... உயிர் பிழைக்கிறோமா, நம் உற்றார், உறவினர்களுக்கு எந்த வகையிலேனும் சிகிச்சை கிடைக்கிறதா என்பது தான் முக்கியம். முன்னேறிய நாடுகளில் கூட, கொரோனாவால் மனிதர்கள் கொத்து கொத்தாக மடிந்து கொண்டிருக்கும் சூழலில், இங்கே தரையில் படுக்க வைப்பதெல்லாம் ஒரு குற்றமாகச் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது.

தரையில் படுத்திருப்பதும், படுக்க வைத்திருப்பதும் பஞ்சமாபாதகம் கிடையாது. வீட்டில் கட்டில், மெத்தை இருந்தாலும் விருப்பப்பட்டு தரையில் படுத்துறங்குவோர் ஏராளம். அப்படி இருக்கையில், 'தரையில் படுக்க வைத்து விட்டனரே...' என்று செய்தி வெளியிடுவதெல்லாம், தேவையில்லாத உணர்வுகளைத் துாண்டி, நோயாளிகளின் சிகிச்சையை நிறுத்துவதற்குச் சமம். நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது; உலகின் முன்னேறிய நாடுகளில் என்ன நிலவரம் என்று கொஞ்சம் கூட அறியாத, அறிவிலிகள் தான் இப்படியெல்லாம் செய்தி வெளியிட முடியும்.

சமூக வலைதளங்களில் பொழுது போக்குவோருக்கும், தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கும் பார்வை மாற வேண்டும். உங்கள் குடும்பத்தில் ஒருவர், நெருங்கிய உறவினருக்கு எப்படியாவது சிகிச்சை அளித்து காப்பாற்றியாக வேண்டும் என்ற நெருக்கடி நிலை ஏற்பட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்? அந்த யோசனை இருந்தால், இப்படியெல்லாம் செய்தி சொல்லும் சிந்தனை உங்களுக்கு வராது.


latest tamil news


தனியார் டாக்டர்கள், அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொள்வதாக ஒரு தொலைக்காட்சியில் செய்தி வெளியிடுகின்றனர்.'அவர்களிடம் பணம் இல்லையா?' என்றும் சில அதிமேதாவிகள் கேள்வி எழுப்புகின்றனர். இது என்ன விதமான சிந்தனை என்று தெரியவில்லை. தனியார் டாக்டர்கள், மனிதர்கள் இல்லையா, அவர்கள் மரணித்தால், இப்போதைய சூழலில் என்ன நிலை ஏற்படும்... அவர்கள், மனித குலத்துக்கு ஆற்றும் சேவைக்கு ஈடு செய்ய முடியாமல் போனாலும், 'அட்லீஸ்ட்' இலவசமாக தடுப்பூசி போடலாமே... அதில் என்ன தவறு கண்டுபிடித்து விட்டீர்கள்?

குற்றம் சொல்லுதல் எல்லோருக்கும் எளிது. அவரவருக்கு பாதிப்பு என்று வரும்போது தான், சிரமங்கள் என்னவென்று தெரியும். எனவே தொலைக்காட்சி செய்தியாளர்களே... சமூக வலைதளங்களில் கம்பு சுற்றுவோரே... கொஞ்சம் சமூக சிந்தனை, உலகளாவிய பார்வையோடு, உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் சிந்தனை மட்டம் இன்னும் மேம்பட வேண்டும் என்பதே என் வேண்டுகோள்!

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X