வாஷிங்டன்: கொரோனா இரண்டாவது அலையில் சிக்கி தவிக்கும் இந்தியாவுக்கு, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் உதவ முன்வந்துள்ளன.
ஆக்சிஜன் சிலிண்டர் உட்பட, மருத்துவ உபகரணங்களை, தாராளமாக அனுப்பி வருகின்றன.
அமெரிக்கா
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன், பிரதமர் மோடி, மருத்துவ உதவி கோரி, நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசினார்.இதையடுத்து, 'கோவிஷீல்டு' தடுப்பூசி தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்களை, இந்தியாவுக்கு வழங்க, அமெரிக்கா சம்மதித்துள்ளது. இந்தியாவுக்கு தேவையான ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்களை ஏற்பாடு செய்யும் பணியில், ராணுவம் மற்றும் சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க அமைப்பு ஈடுபட்டுஉள்ளது.
மருத்துவமனையிலேயே, 50 முதல், 100 படுக்கைகளுக்கு தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்யும், ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ரெம்டெசிவிர் மருந்துகள், பரிசோதனை கருவிகள், பாதுகாப்பு கவச உடைகள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட உள்ளன.
பிரான்ஸ்
ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் பரிந்துரையை தொடர்ந்து, அந்நாட்டில் இருந்து ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள், திரவ ஆக்சிஜன் கன்டெய்னர்கள் மற்றும் வென்டிலேட்டர் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.முதற்கட்டமாக எட்டு ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள், ஐந்து திரவ ஆக்சிஜன் நிரம்பிய கன்டெய்னர்கள் மற்றும் வென்டிலேட்டர்கள் ஆகியவை, கப்பல் மற்றும் விமானம் வாயிலாக, இந்த வார இறுதிக்குள் அனுப்பி வைக்கப்படும்.

தாய்லாந்து
இந்தியாவுக்கு காலி ஆக்சிஜன் சிலிண்டர்களை, இந்திய விமானப்படை விமானங்கள் வாயிலாக, தாய்லாந்து அனுப்பி வருகிறது. நேற்று மூன்றாவது முறையாக, தாய்லாந்திருந்து, காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள் வந்தன.
சிங்கப்பூர்
மற்றொரு தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரிலிருந்தும், காலி ஆக்சிஜன் டேங்கர்கள், இந்தியாவுக்கு விரைவில் வர உள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான அயர்லாந்தும், மருத்துவ உபகரணங்களை அனுப்பி வைத்துள்ளது.
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய சுகாதார துறை அமைச்சர், கிரேக் ஹன்ட் கூறியதாவது:இந்தியாவுக்கு ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், பாதுகாப்பு உடைகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை அனுப்ப, அரசு முடிவு செய்துள்ளது. தடுப்பூசி மருந்துகளும் போதிய அளவிற்கு உள்ளன. இந்தியா கேட்டுக் கொண்டால், தடுப்பூசி மருந்து அனுப்புவது குறித்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நிறுவனங்கள் உதவிக்கரம்
அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் டோனி பிளின்கின் தலைமையில், இந்திய - அமெரிக்க வர்த்தக சபை கூட்டம் நடந்தது.இதில், கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ள இந்தியாவிற்கு உதவ, சர்வதேச செயல் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்ற, 40 நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், சர்வதேச செயல் திட்டத்தின் கீழ், வரும் வாரங்களில், இந்தியாவுக்கு, 20 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்க முன்வந்துள்ளனர்.4 லட்சம் குப்பி, 'ரெம்டெசிவிர்'அமெரிக்காவின், 'கிலட் சயன்சஸ்' நிறுவனம், கொரோனா சிகிச்சைக்கு, 4 லட்சம் குப்பி, 'ரெம்டெசிவிர்' மருந்தை இலவசமாக, இந்தியாவுக்கு வழங்குகிறது.
மேலும், இந்தியாவில் தன் உரிமம் பெற்ற, ஏழு நிறுவனங்கள், ரெம்டெசிவிர் மருந்து தயாரிப்பை அதிகரிக்க உதவுவதாகவும், கிலட் அறிவித்துள்ளது.