
சென்னை அயப்பாக்கம் சுற்று வட்டாரத்தில் உள்ள சின்ன சின்ன நிழல்களில் சிலர் முடங்கிக்கிடக்கின்றனர்.
அவர்களில் பலர் வயதானவர்கள்,மாற்றுத்திறனாளிகள்.
அனைவரது முகத்திலும் வெயிலின் தாக்கமும் சாப்பாட்டிற்கான ஏக்கமும் தென்படுகிறது.யாரையோ எதிர்பார்த்து எட்டி எட்டிப் பார்க்கின்றனர்.
அவர்கள் எதிர்பார்த்தவரும் மோட்டார் பைக்கில் வருகிறார் அவர்கள் அருகே வந்து தனது பையில் இருந்து எடுத்த உணவு பொட்டலத்தை கொடுக்கிறார் கூடுதலாக நாலு வார்த்தை அன்பொழுக பேசுகிறார் பிறகு அவர்களிடம் விடைபெற்று அடுத்த இடத்தை நோக்கி பைக்கில் விரைகிறார்.
யார் இவர்?

ஒரேழுத்து கவிஞர் என்று எழுத்துலகில் அறியப்பட்டவர் ஆனால் எழுத்து இவரது தொழில் அல்ல நீர்கசிவு மேலாண்மை நிபுணர் ,பொறியியல் படித்தவர், கார்ப்பரேட் நிறுவனங்களின் ஒப்பந்தக்காரர்.வாசியோகம் என்ற ஒன்றை கற்றுக்கொள்ளும் வரை கணக்கு வழக்கு தவிர வேறு எதற்கும் பேனா பிடிக்காதவர்.வாசி யோகத்தில் முழ்கியிருந்த ஒரு நாள் அதிகாலை வேளையில் பேனா எடுத்தவர் புத்தகத்திற்கு தேவையான கவிதைகளை ஒரே மூச்சில் எழுதி முடித்தார்.
ஒரு அதிசயமான விஷயம் என்னவென்றால் இந்த கவிதைகள் அனைத்தும் ஒரே எழுத்தில் ஆரம்பித்து எழுதியதுதான்
உதாரணமாக ஒரு ஓரெழுத்து கவிதையை பார்ப்போம்
இரப்பவர்களிடம்இல்லை-போன எனஇயல்பாய் இயம்புகிறோம்இன்னம் உலகில் இறக்காமலேயேஇருந்துவிடுவோமெனஇறுமாப்புடன் வாழ்கிறோம்இம்யைில் ஈயாததுஇருந்தென்ன லாபம்இருப்பு ஏற ஏறஇம்சைதான் வரும்இரக்கம் காட்டினால்இன்பம் இரட்டிப்பாகுமே
கவிதை இப்படி போகிறது அடுத்த கவிதையில் அடுத்து ஒரு எழுத்தை எடுத்துக் கொள்கிறார் இப்படியே புத்தகம் முழுவதும் ஓரெழுத்து ஆட்சி செய்கிறது.

முதல் முறையாக தமிழில் எழுதுவதே படு சிரமம் என்ற நிலையில் இவர் கவிதை எழுதுகிறார் அதுவும் ‛எழுத்து வர்த்தனம்‛ ‛சித்தரக்கவி' வகையில் பல ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டு தற்போது புழக்கத்தில் இல்லாத இவ்வகை கவிதை இவருக்கு வந்தது அரிய விஷயமே. இதில் என் முயற்சி எதுவும் இல்லை எனக்குள் இறங்கிய இறையருளால்தான் இது சாத்தியமானது என்று இவரது கவிதையைப் படித்து பாராட்டியவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

இறையருளால் இது சாத்தியம் என்றால் இறைவனாய் போற்றப்படுபவர்களையும் இறைவனாகவே வணங்கப்படுவர்களையும் பற்றி எழுதலாமே என்று சிலர் உற்சாகம் தர அதில் பிறந்ததுதான் ‛ஓரெழுத்தில் அறுபத்துமூவர்' என்ற புத்தகம். உதாரணத்திற்கு கண்ணப்ப நாயனார் பற்றிய சரித்திரத்தில் க என்ற எழுத்திலேயே துவங்கி அவரது முழு வரலாறையும் க வரிசையிலேயே முடித்திருக்கிறார் இது சாதாரண விஷயமல்ல நாயான்மார்கள் பற்றிய கதையை ஓரெ எழுத்தில் ஆரம்பித்து கருத்து சிதையாமல் சுவராசியம் குறையாமல் சொல்வதென்பது அபூர்வ விஷயமே என்று சொல்லேரு உழவர் என்று பாராட்டப்டும் சுகிசிவம் போன்ற தமிழில் கரைகண்டவர்களே பாராட்டினர்.

சைவத்தில் காட்டிது போல எங்கே வைணவத்தில் உன் திறன் காட்டு என்று சிலர் சொல்ல ‛ஓரெழுத்தில் ஆழ்வார்கள்' என்ற புத்தகம் உருவாகியது. அதுவும் ஆழ்வார் ஆராய்ச்சி மையம் நடத்திவரும் ஜெகத்ரட்சன் போன்றவர்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.
இவரது இந்த வித்தியாசமான ஆன்மீக பதிவைக் படித்த, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளிவரும் திருக்கோவில் புத்தக ஆசிரியர் சசிகுமார், திருக்கோவில் புத்தகத்தில் வெகுஜன உரைநடையில் எழுத வாய்ப்பு கொடுத்தார் ‛அறுபத்து மூவர் சரித்திரத்தில் ஆச்சரியமூட்டும் பெண்கள் ' என்ற தலைப்பில் தொடராக எழுதினார் அதுவும் புத்தகமாக வந்துள்ளது.

தற்போது ‛ஓரெழுத்தில் கெளமாரம்' என்ற தலைப்பில் முருகப்பெருமானைப் பற்றி எழுதிக்கொண்டு இருக்கிறார்.ஒவ்வொரு புத்தகமும் தலைமுறை தாண்டி நிற்கவேண்டும் நிலைக்க வேண்டும் என்பதால் நீண்ட காலம் எடுத்துக் கொள்கிறார் 63 நாயன்மார் புத்தகம் எழுதி முடிக்க மூன்றரைஆண்டுகாலமானது.எழுது என்று உள்ளூணர்வு ஆணையிட்டதும் எழுது துவங்குகிறார் அதுவரை சராசரி தொழில் முனைவராக உலா வருகிறார்.
எழுதி முடித்ததும் எழுதிய பாடலை இறைவன் சன்னதியில் பாடி சமர்ப்பிப்பது இவர் வழக்கம் பல சன்னதிகளில் இறைவன் ஆசீர்வாதம் கிடைத்ததற்கு அறிகுறியாக இவர் தன்னிலை மறந்து மயங்கியிருக்கிறார்.
இப்படி இவர் எழுதிய நான்கு புத்தகங்களை பற்றியும் இவரைப்பற்றியும் சென்னையில் உள்ள இவரது நண்பர் செல்லா வைத்தியநாதன் சொல்ல அவரது வீட்டிலேயே அறுசுவை உணவுடன் அறிமுகம் நடைபெற்றது.
கவிதைகள்,தொழில்,புத்தகம் பற்றி பேசிக்கொண்டிருந்தவர் தனது எதிர்கால லட்சியம் என்பது தன் சொந்த ஊரான துாத்துக்குடி ஏரல் அருகில் உள்ள ஆயிரத்தெண் விநாயகர் அருள்பாலிக்கும் ஆறுமுகமங்கலத்தில் தாய்-தந்தையான கண்ணம்மாள்-பகவதி பெயரில் நித்திய அன்னதான கூடம் நடத்த வேண்டும் என்பதுதான்.இதற்காக யாரிடமும் ஒரு பைசா நன்கொடை வாங்காமல் முழுக்க முழுக்க என் சொந்த பணத்திலேயே நடத்த வேண்டும் என்பதால் கொஞ்சம் தாமதமாகிவிட்டது இப்போது அதற்கான காரியம் கைகூடவிருக்கிறது கொரோனா முடிந்து இயல்பு நிலைக்கு நாடும் நாமும் திரும்பியதும் எனது முதல் வேலை அதுதான் அதற்கான முன்பணியாக நான் தற்போது இருக்கும் இடத்திலேயே நானே சமைத்து தேவைப்படுபவர்களுக்க தேடிப்போய்க் கொடுத்துவிடுகிறேன் என்றார்.
இப்போது கட்டுரையை ஆரம்பித்த இடத்திற்கே கொண்டு வந்துவிட்டேன்தானே.ஜெயக்குமாரிடம் பேசுவதற்கான எண்:98405 89222.
-எல்.முருகராஜ்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE