'இதெல்லாம் துரோகங்கள் அல்ல; காங்., அவிழ்த்து விடும் கட்டுக்கதைகள் என்பது, தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். நீங்கள் சொல்லும் கருத்தை, தமிழகத்தில் ஒருவர்கூட நம்ப மாட்டார்...' என, சொல்லத் தோன்றும் வகையில், கரூர் காங்., பெண் எம்.பி., ஜோதிமணி அறிக்கை: தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை, நெருக்கடியான காலகட்டத்தில் கூட, மோடி அரசால் தமிழகத்திற்கு தர முடியாது; பேரிடர் காலத்தில் நிதி தர முடியாது; ஜி.எஸ்.டி.,யை திருப்பித்தர முடியாது; தமிழகத்திற்கு ஏன் இத்தனை துரோகங்கள்... தமிழகம் இந்தியாவில் தானே இருக்கிறது?
'உண்மை தான். கோவில் சொத்துக்களை அபகரித்தால், குலம் நாசமாகும் என, எத்தனை முறை சொன்னாலும், புத்தி வர மாட்டேன் என்கிறதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், புதிய தமிழகம் கட்சி இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி அறிக்கை: அறநிலைய துறையின் கட்டுப்பாட்டிலுள்ள, 37 ஆயிரம் கோவில்களுக்கு சொந்தமாக நிலங்கள், வணிக கட்டடங்கள் உள்ளன. இவற்றிலிருந்து ஆண்டுக்கு, 50 கோடி ரூபாய் மட்டுமே வருமானம் கிடைப்பதாக கூறப்படுகிறது. முறையாக வருமானம் பெற்றால், வரியின்றி மாநில பட்ஜெட்டே போடலாம்.
'அண்டை மாநிலங்களுக்கே, ஆபத்தான நேரத்தில் ஆக்சிஜன் வழங்க மறுத்த தமிழக முதல்வரின் செயல், கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் அறிக்கை: ஆக்சிஜன் விவகாரத்தில், என் தெலுங்கு சகோதரர்களுக்கு உதவ மாட்டேன் என்று சொல்லும் தமிழனாக இருப்பதை நினைத்து, தலைகுனிந்து நிற்கிறேன். 'தமிழன் என்று சொல்லடா; தலை குனிந்து நில்லடா' என்று செய்து விட்டாரே நம் முதல்வர்.
'தி.மு.க.,வினர் நடத்தும் பள்ளிகள், அக்கட்சி தலைவர்களின் தொழிற்சாலைகளில் இதுபோன்ற ஏற்பாடுகளை செய்துள்ளனரா...' என, கேட்கத் தோன்றும் வகையில், ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு அறிக்கை: ஈஷா வித்யா பள்ளி வளாகங்களை, 990 படுக்கை வசதியுடன் கூடிய, கோவிட் மையங்களாக பயன்படுத்திக் கொள்ள, தமிழக அரசுக்கு கொடுக்கிறோம். இந்த சவாலிலிருந்து வெளிவர நம் சமூகம் ஒன்றிணைந்து, நிர்வாகத்தின் கரங்களை பலப்படுத்த வேண்டும்.
'உண்மை தான், சுகாதாரப் பணியாளர், மருத்துவ பணியாளர்களுக்கு ஓய்வளிக்க வேண்டும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை: தொடர்ந்து பல மாதங்கள் ஓய்வில்லாமல் உழைத்து, சோர்ந்திருக்கும் மருத்துவர், செவிலியருக்கு மாற்று ஏற்பாடுகள் செய்வது பற்றி அவசரமாக திட்டமிட வேண்டும். இத்துறையில் ஓய்வுபெற்றவர்களை பணியமர்த்தி பயிற்சி அளிக்கலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE