வாக்காளர்களே இறுதி எஜமானர்கள்

Added : ஏப் 29, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஜனநாயக முறையில் மக்கள் தங்கள் நம்பிக்கையைத் தெரிவிப்பதுதான் தேர்தல். இதன் வாயிலாகத்தான் மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். இதில் தவறேதும் நடந்து விடாத அளவிற்குப் பார்த்துக் கொள்ள வேண்டியது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கடமை. அதனால்தான், தேர்தல் ஆணையம் அவ்வப்போது தேர்தல் நடைமுறையில் பற்பல சீர்திருத்தங்களைக் கொண்டு வருகிறது. அப்படிப்பட்ட, தேர்தல்
 வாக்காளர்களே இறுதி எஜமானர்கள்

ஜனநாயக முறையில் மக்கள் தங்கள் நம்பிக்கையைத் தெரிவிப்பதுதான் தேர்தல். இதன் வாயிலாகத்தான் மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். இதில் தவறேதும் நடந்து விடாத அளவிற்குப் பார்த்துக் கொள்ள வேண்டியது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கடமை.

அதனால்தான், தேர்தல் ஆணையம் அவ்வப்போது தேர்தல் நடைமுறையில் பற்பல சீர்திருத்தங்களைக் கொண்டு வருகிறது. அப்படிப்பட்ட, தேர்தல் சீர்திருத்தங்களில் ஒன்றுதான் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர முறை.1989 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் திருத்தப்பட்டு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டது. சோதனை முயற்சியாக 3 மாநிலத் தேர்தல்களில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.அதன்பின்னர்தான் 1999 கோவா மாநிலத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அவை பயன்படுத்தப்பட்டன. இதன்பிறகு படிப்படியாக தொடர்ந்து 2000-லிருந்து அனைத்துத் தேர்தல்களிலும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.ஓட்டுச்சீட்டு முறை

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு முன்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும், ஓட்டுச்சீட்டு முறையே நடைமுறையில் இருந்தது. அதனால் கள்ள ஓட்டுக்களின் பதிவுகளும் அதிகளவில் இருந்தது. இதனால், பல இடங்களில் தேர்தல் நடக்கும்; ஓட்டுச்சாவடிகள் கைப்பற்றப்பட்டு, ஒரே வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டுகள் பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகள் நடந்தேறின.

பல தொகுதிகளில் மோசடியும் நடைபெற்றன.கூடுதல் சுமையாக வாக்குப்பதிவு முடிந்தபின் ஓட்டுச் சீட்டுகளைப் பாதுகாப்பதிலும், தேர்தல் ஆணையத்திற்கு சிக்கல்கள் ஏற்பட்டன. இவை மட்டுமல்லாமல், ஓட்டுச்சீட்டுகளை எண்ணுவதிலும் தவறுகள் ஏற்படுவதாக தேர்தல் ஆணையமே கணித்திருந்தது. தேர்தல் முடிவுகளை அறிவிப்பதிலும், தேர்தல் ஆணையத்திற்கு அதிக சிரமம் ஏற்பட்டது.மின்னணு இயந்திரங்களைப் பயன்படுத்த தொடங்கிய பின்னர், வழக்கமாக நடைபெறும் தேர்தல் மோசடிகள் பெருமளவு குறைந்தன.ரோஸ் சிஸ்டர் பல்கலை நடத்திய ஆய்வில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களால், இந்தியத் தேர்தல்களில் செல்லாத வாக்குகள் தவிர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மின்னணு இயந்திரத்தில் ஒரு நிமிடத்தில் ஐந்து ஓட்டுகளை மட்டுமே பதிவு செய்ய முடியும். அதனால் ஓட்டுச்சாவடிகளைக் கைப்பற்றி ஓட்டுப்பதிவு செய்வது மிகவும் கடினமானது.மேலும் மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்திய பிறகு, வாக்களிப்பதற்காக நீண்ட நேரம் வரிசையில் நிற்கத் தேவையில்லை என்று ஆகிவிட்டது.


எல்லாம் எளிதுதேர்தல் முடிவுகளை அறிவிப்பதும், மின்னணு இயந்திரங்களால் எளிதாக்கியிருக்கிறது.ஓட்டுப்பதிவு நேரமும், ஓட்டு எண்ணிக்கை நேரமும் பெரிய அளவில் குறைந்து விட்டதால், நம்முடைய தேர்தல் நடைமுறை அடுத்தகட்டத்தை நோக்கி பயணப்பட்டிருக்கிறது. ஆனால் சில கட்சிகள் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதைக் கைவிட்டு மீண்டும் ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோருகின்றன.மின்னணு இயந்திரங்களின் மூலம் மோசடிகள் நடைபெறுகின்றன என்ற தவறான கருத்தையே மீண்டும், மீண்டும் கூறி வருகின்றன.மின்னணு இயந்திரம் என்பது ஏறக்குறைய ஒரு கால்குலேட்டரைப் போலத்தான். நாம் பதிவு செய்ததையே மீண்டும் அது சுட்டிக்காட்டுகிறது. அதை ஹேக் செய்வதோ, தொலைவில் இருந்து இயக்கி, அதை மாற்றி அமைப்பதோ முடியாத காரியம். இதனை சில கட்சிகள் உணராது இருப்பது வேடிக்கை. இப்படிப்பட்டவர்கள் மக்களுக்கான மாற்றத்தை எப்படி முன்வைப்பார்கள்.


குழந்தைத்தனமான குற்றச்சாட்டுமின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தி தேர்தலில் எவ்வாறு வெல்ல முடியும்? வாக்களிப்பதற்காக ஒரு சின்னத்தின் பட்டனை அழுத்தினால், அந்த ஓட்டு வேறொரு சின்னத்திற்குப் போகிறது என்பது கட்சியினரின் குழந்தைத்தனமான குற்றச்சாட்டு, இவர்கள் எந்தக்காலத்தில் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்வதற்கு குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவனம் உதவி செய்கிறது என்று ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்கள். ஆனால், அதனை நிரூபிப்பதற்குத் தேவையான ஆதாரங்களை முன்வைக்கத் தவறி விட்டார்கள்.சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ், ஆம் ஆத்மி, காங்கிரஸ் போன்ற கட்சிகள் இயந்திரங்களில் மோசடிகள் நடைபெறுகின்றன என்கிற குற்றச்சாட்டை முன்வைத்தன. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பாரத் எலக்ட்ரானிக் லிமிடெட் மற்றும் ஈசிஐஎல் நிறுவனங்களின் மிகுந்த பாதுகாப்புடனும், தீவிரக் கண்காணிப்புடனும் தயாரித்திருக்கின்றன. அவற்றை ஹேக் செய்வது என்பது சாத்தியமே இல்லை என்று அந்நிறுவனங்கள் உறுதிபடக் கூறுகின்றன.
தேர்தலில் தோற்றுப் போனால், அதற்கு இப்படி ஒரு காரணத்தைக் கூறுவது என்பது சில கட்சிகளின் தந்திரமாகஇருக்கிறது. தோல்விக்கான பழியை மக்கள் மீது போட்டால், அவர்களின் தீராத வெறுப்புக்கு ஆளாகி விடுவோம் என்கிற அச்சத்தில், அக்கட்சிகள் மின்னணுஇயந்திரங்களின் மீது பழிபோட்டு தப்பிக்கப் பார்க்கின்றன.தமிழகத்தில் ஏப்ரல் ஆறாம் தேதியன்று சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. ஏறக்குறைய ஒரு மாத காத்திருப்பிற்குப் பின், மே 2ஆம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட இருக்கின்றன.சென்னை வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட 92-வது எண் ஓட்டுச்சாவடியில் மூன்று வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒருவர் இருசக்கர வாகனத்தில் எடுத்துச்சென்றதை கவனித்த சில அரசியல் கட்சியினரும், பொதுமக்களும், அவரை மடக்கி விசாரித்த சம்பவம் மாநிலம் முழுதும் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சையைத் தொடர்ந்து அந்த 92-வது எண் ஓட்டுச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.
சர்ச்சைகள்தென்காசி மாவட்டத்தில் ஒரு கல்லுாரி வளாகத்தின் அருகே கன்டெய்னர் ஒன்று தற்செயலாக நிறுத்தப்பட்டதை சர்ச்சையாக்கியன கட்சிகள்.'தமிழகத்தின் 12 பகுதிகளில் நவீன வசதியுடன் கூடிய கன்டெய்னர்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களின் முன் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், நவீன வசதிகளுடன் கூடிய கன்டெய்னரில் அமர்ந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளை ஹேக் செய்து தங்களுக்கு சாதகமான முடிவுகளை அறிவிக்கப் போகிறார்கள்' என்று எதிர்க்கட்சிகள் சொன்ன போது, சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன. அந்த இரண்டு பகுதிகளையும், ஒரு நீளமான கேபிள் மூலம் இணைத்திருப்பார்கள். இரண்டையும் எப்போதும் செயல்பாட்டிலேயே வைத்திருப்பார்கள். வாக்காளரின் அடையாள அட்டையை அலுவலர் சரிபார்த்து உறுதி செய்யும் வரை யாராலும் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் எதுவும் செய்ய முடியாது.அவர் உறுதிப்படுத்தியதும், ஒரு விளக்கு ஒளிரும். அப்போது வாக்காளர் ஓட்டளிக்கலாம். இது மின்னணு இயந்திரமாகவே இருந்தாலும், மின்சாரம் தேவையில்லை. பேட்டரிகள் மூலமாகவே இந்த இயந்திரம் இயங்கும். அது மட்டுமன்றி, கள்ள ஓட்டுகளைத் தவிர்க்க, இதில் பல தொழில்நுட்பங்களை வடிவமைத்திருக்கிறார்கள். ஒரு இயந்திரத்தில் 3,840 ஓட்டுகள் வரை பதிவு செய்யலாம். தேர்தலுக்கு முன்னால் இயந்திரத்தில் ஏற்கெனவே சேமிப்பில் இருக்கும் ஓட்டுகளை அழித்து விடுவார்கள். ஒரு சோதனை வாக்கெடுப்பு நடத்தி, முடிவுகளையும் பரிசோதிப்பார்கள்.


டிஜிட்டலாக மாற்ற முடியாதுமின்னணு இயந்திரம்தான் என்றாலும்,இதில் பதிவாகும் ஓட்டுகளை டிஜிட்டலாக மாற்ற முடியாது. ஒருவேளை ப்ரீ புரோகிராம் செய்து, முன்கூட்டியே தங்களுக்கு சாதகமாக ஓட்டு எண்ணிக்கை செய்து வைக்க முடியுமா என்றால், அதற்கும் வழியில்லை. ஏனெனில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வந்து இறங்கிய பிறகே வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.ஆகவே பட்டியலில் எத்தனையாவது இடத்தில் நாம் இருக்கிறோம் என்பது வேட்பாளருக்கே தெரியாத போது, அவரால் பட்டனை ப்ரீ புரோகிராம் செய்ய முடியாது.அதுமட்டுமின்றி ஓட்டு இயந்திரங்கள், மாவட்ட அளவிலும், தொகுதி அளவிலும் இரண்டு முறை சீரற்ற முறையில் கலக்கப்படும். இதனால், எந்த மின்னணு ஓட்டு இயந்திரம், எந்த வாக்குச்சாவடிக்கு செல்லும் என்பதை யாராலும் கூற முடியாது.

அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் இருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஓட்டுகளை முன்கூட்டியே புரோகிராம் செய்வதும் சாத்தியமில்லை. எனவே, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தைச் சுற்றிச் சுழலும் சர்ச்சைகளில் சிறிதும் உண்மை இல்லை. அவையெல்லாம் ஆதாரமற்றவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வாக்காளர்களே இறுதி எஜமானர்கள் என்பதை எல்லா அரசியல் கட்சிகளும் ஒப்புக்கொள்ள வேண்டிய தருணம் இது.- முனைவர் வைகைச்செல்வன்தமிழக முன்னாள் அமைச்சர்mlamailid@gmail.com

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
05-ஜூலை-202115:58:55 IST Report Abuse
karutthu வைகை செல்வன் தோற்றது தான் வேதனையாக உள்ளது
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் நான்தான் வெல்ல வேண்டும் நான்தான் ஆள்வேன் என்றால் ஒட்டு பெட்டி எதற்கு? ஒரு அப்பாவி காத்திருந்தார் ஐந்தாண்டுகள் காத்திருந்தார் - சபா நாயகர் ஆக
Rate this:
Cancel
P.Narasimhan - Tirupattur, Tirupattur Dist,இந்தியா
29-ஏப்-202112:52:42 IST Report Abuse
P.Narasimhan வாக்காளர்களே இறுதி எஜமானர்கள், ஆனால் அதை மாற்றும் சர்வ வல்லமை பொருந்தியவர்கள் உள்ளனர். உதாரணம் : ராதாபுரம் தொகுதி முடிவு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X