புதுடில்லி: நாட்டில் ஆக்சிஜன், தடுப்பூசி பற்றாக்குறை இல்லை என மத்திய அரசு பொய் சொல்வதாக காங்கிரஸ் எம்பி., சிதம்பரம் கூறிய கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்டானது.
இந்தியாவில் கொரோனா 2வது அலை காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. அதேபோல், தடுப்பூசி பற்றாக்குறையும் இருப்பதாக பல மாநில முதல்வர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், ‛ரெம்டெசிவிர் மருந்து, கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜன் போன்றவற்றிற்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை' எனக் கூறியிருந்தார். இதனை காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.,யுமான ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: நாட்டில் ஆக்சிஜன், தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதும், உத்தர பிரதேசத்தில் ஆக்சிஜன், தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என அம்மாநில முதல்வர் கூறியதும் திகைப்பாக உள்ளது. இது தொடர்பாக அனைத்து தொலைக்காட்சிகள் போலியான காட்சிகளை ஒளிபரப்புகின்றனவா? அனைத்து பத்திரிகைகளும் தவறான செய்திகளை வெளியிடுகின்றனவா? அனைத்து மருத்துவர்களும் பொய் சொல்கின்றனரா? நோயாளிகளின் குடும்பத்தினர் பொய் சொல்கின்றனரா? இதுகுறித்து வெளியான வீடியோக்கள், படங்கள் போலியானதா? தொடர்ந்து, இந்திய மக்களை முட்டாளாக கருதும் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழ வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
சிதம்பரத்தின் இந்த பதிவு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பீதியில் மக்கள் அல்லாடும் இந்த நேரத்தில் அதை வைத்து அரசியல் செய்வதாக அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், மக்களிடம் கிளர்ச்சியை தூண்டும் விதமாக பேசிய சிதம்பரத்தை கைது செய்ய வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதனையடுத்து சமூக வலைதளமான டுவிட்டரில் #ArrestPChidambaram என்னும் ஹேஸ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகியுள்ளது. இது குறித்து நெட்டிசன்கள் அளித்த சில கருத்துகள்...

* கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் அதனை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் சிதம்பரம் போன்ற காங்கிரஸ் கட்சியினருக்கு இது ஒன்றும் புதிது அல்ல.
* சிதம்பரம் கூறியதில் தவறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை என செய்திகள் வரும் நிலையில் மத்திய அரசு மட்டும் எந்த தட்டுப்பாடும் இல்லை என கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
* மத்திய அரசு பொய் சொல்கிறதா, நீங்கள் பொய் சொல்கிறீர்களா என்பதை சுய பரிசோதனை செய்யுங்கள். சில நாட்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக மருத்துவமனைகள் கூறி வந்தன. ஆனால், இப்போது எங்கோ ஒருசில இடங்களில் மட்டும் தான் அது பற்றிய செய்தி வருகிறது. இப்போது எல்லாம் சீராக போய் கொண்டிருக்கும் நிலையில், பொய் கூறி மக்களை திசை திருப்பும் சிதம்பரத்தை கைது செய்ய வேண்டும்.
* போராட்டத்தை தூண்டும் வகையில் பேசினால் அனைவரையும் கைது செய்யும் அரசு, இப்போது சிதம்பரத்தையும் கைது செய்ய வேண்டும். மக்களை குழப்பி குளிர்காய்வதே இவருக்கு வாடிக்கை.
* சிதம்பரத்தின் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியது தான். ஆனால் கிளர்ச்சியை தூண்டுவதை யாரும் ஏற்க மாட்டார்கள்.
* மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு தேவையான அளவிற்கு ஆக்சிஜன் அனுப்பியுள்ளது. சில மாநிலங்களில் தேவை அதிகரித்துள்ளதால் பற்றாக்குறை நிகழ்ந்திருக்கலாம். அதுவும் சீக்கிரமே சரி செய்யப்பட்டுள்ளது. அதனைதான் மத்திய அரசு தட்டுப்பாடு இல்லை என கூறியுள்ளது. இதில், மத்திய அரசிடம் என்ன தவறு இருக்கிறது?
* சிதம்பரத்தை உடனடியாக கைது செய்யுங்கள். மத்திய அரசு மீது பொய் குற்றச்சாட்டையே முன்வைத்து பேசி வரும் சிதம்பரம் இப்போது மேலும் ஒரு பொய் செய்திகளை கூறி மக்களை போராட தூண்டுகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE