சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திண்டிவனத்தை அதிர வைத்த துப்பாக்கி கொள்ளையர்கள் மூவர் கைது!

Added : மே 01, 2021
Share
Advertisement
மயிலம்: திண்டிவனம் மற்றும் மயிலம் பகுதிகளில் ஒரே இரவில் 6 வீடுகளில் புகுந்து துப்பாக்கியை காட்டி கொள்ளை அடித்த முகமூடி கொள்ளையர்கள் மூவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் காமராஜ் நகரை சேர்ந்தவர் பிலவேந்திரன்,59; இவரது வீட்டில் கடந்த 19ம் தேதி அதிகாலை 1:30 மணிக்கு முன்பக்க கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த முகமூடி ஆசாமிகள் மூவர்
திண்டிவனத்தை அதிர வைத்த துப்பாக்கி கொள்ளையர்கள் மூவர் கைது!

மயிலம்: திண்டிவனம் மற்றும் மயிலம் பகுதிகளில் ஒரே இரவில் 6 வீடுகளில் புகுந்து துப்பாக்கியை காட்டி கொள்ளை அடித்த முகமூடி கொள்ளையர்கள் மூவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் காமராஜ் நகரை சேர்ந்தவர் பிலவேந்திரன்,59; இவரது வீட்டில் கடந்த 19ம் தேதி அதிகாலை 1:30 மணிக்கு முன்பக்க கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த முகமூடி ஆசாமிகள் மூவர் துப்பாக்கியை காட்டி மிரட்டி, பிலவேந்திரன் மகன் அருண்குமார் அணிந்திருந்த 2 சவரன் செயினை பறித்தனர். தடுக்க முயன்ற பிலவேந்திரனை இரும்பு ராடால் தாக்கிவிட்டு காரில் தப்பினர். பின்னர் அந்த கும்பல், ஜக்காம்பேட்டை, கூட்டேரிப்பட்டு பகுதிகளில் வீடு புகுந்து திருடியது.

பின்னர், கன்னிகாபுரத்தில், ஞானசேகரன் வீட்டில் புகுந்து திருட முயன்றது. வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிடவே கிராம மக்கள் ஓடி வந்தனர். அதனைக் கண்ட கொள்ளையர்கள் காரை விட்டுவிட்டு வயல் வழியாக தப்பிச் சென்றனர்.இதுகுறித்து திண்டிவனம் மற்றும் மயிலம் போலீசார் தனித்தனியே வழக்கு பதிவு செய்தனர். மேலும், எஸ்.பி., உத்தரவின் பேரில், டி.எஸ்.பி., கணேசன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் வீரமணி, மூர்த்தி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை போலீசார், கொள்ளையர்கள் விட்டு சென்ற காரை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

வயலில் மர்ம நபர்கள்!

இந்நிலையில் நேற்று காலை, 6:00 மணி அளவில் மயிலம் அடுத்த கன்னிகாபுரத்தில், விஜயன் என்பவரின் நிலத்தில் சந்தேக நபர்கள் மூவர் எதையோ தேடிக் கொண்டிருந்தனர். தகவலறிந்த தனிப்படை போலீசார் விரைந்து சென்று மூவரையும் பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் திருவள்ளூர் மாவட்டம் மாகரல் கிராமத்தை சேர்ந்த குமார் மகன் யுவராஜ் (எ) டேனி,28; சென்னை, எண்ணுார் காமராஜர் நகரை சேர்ந்த ஆனந்தன் மகன் அசோக் வயது,22; ஆந்திர மாநிலம் நல்லுார் தடாமண்டலம், காரூர் கிராமத்தை சேர்ந்த கோபி மகன் கார்த்திக்,19; என்பது தெரிந்தது.

இவர்கள் தங்கள் கூட்டாளியான கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சங்கருடன் சேர்ந்து கடந்த 19ம் தேதி அதிகாலை திண்டிவனம் மற்றும் மயிலம் பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்ததும், பொதுமக்கள் விரட்டவே, கையில் வைத்திருந்த துப்பாக்கி மற்றும் நகைகளை வயலில் உள்ள மின்மோட்டார் கொட்டகை அருகில் மறைத்து வைத்துவிட்டு சென்றதும், அதனை எடுத்துச் செல்ல வந்தது தெரிய வந்தது.

டில்லியில் வாங்கிய துப்பாக்கி!

தொடர் விசாரணையில் மூவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலம்:யுவராஜிற்கும், கும்மிடிப்பூண்டியை சேர்ந்த பரத் என்பவருக்கும் முன்விரோதம் உள்ளது. பரத் துப்பாக்கி வைத்துள்ளதால், தானும் அதுபோல் துப்பாக்கி வாங்குவதற்காக யுவராஜ் தனது கூட்டாளிகளான அசோக், சங்கர் ஆகியோருடன் ரயிலில் கடந்த மாதம் டில்லி சென்றேன். அங்கு, ஏற்கனவே சிறையில் அறிமுகமான இந்துாரை சேர்ந்த சுல்தான் என்பவரிடம் துப்பாக்கி வாங்கிக் கொண்டு லாரி மூலம், கடந்த 17ம் தேதி நாக்பூர் டோல் பிளாசாவிற்கு வந்தோம்.

கொள்ளையடிக்கப்பட்ட கார்!

அப்போது அவ்வழியாக வந்த எச்.ஆர்.29.ஏபி.7722 பதிவெண் கொண்ட எக்ஸ். யு.வி., மகேந்திரா காரில் 'லிப்ட்' கேட்டு மூவரும் காரில் ஏறினோம்.சற்று துாரம் வந்ததும் மூவரும், காரின் உரிமையாளரான அஜய் மற்றும் அவரது நண்பர் வம்சி இருவரையம் துப்பாக்கியை காட்டி மிரட்டி காரில் இருந்து இறக்கிவிட்டு, காரில் தமிழகத்திற்கு தப்பினோம். கடந்த 18 ம் தேதி சென்னை, ஆதம்பாக்கம் வந்ததும் நண்பர் ஆந்திர மாநிலம், நல்லுாரை சேர்ந்த கார்த்தி மூலம் கிளவுஸ் மற்றும் மாஸ்க் வாங்கிக் கொண்டு, அவரையும் காரில் ஏற்றிக் கொண்டு திருச்சி நோக்கி காரில் புறப்பட்டோம்.

வழியில் பஞ்சர் கடையில் காரை நிறுத்தி, காற்று பரிசோதனை செய்தோம். அப்போது, கடைக்காரருக்கு தெரியாமல், அங்கிருந்த இரும்பு ராடு, திருப்புளி, கத்தி ஆகியவற்றை திருடினோர். பின்னர் அன்று இரவு 11:30 மணி அளவில் ஓங்கூர் டோல் பிளாசா அருகில் காரை நிறுத்தி, நம்பர் பிளேட்டை கழற்றி வைத்துவிட்டு, திண்டிவனம் மற்றும் மயிலம் பகுதியில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டோம். மேலும், மூவர் மீதும் கொலை, கொலை மிரட்டல் உள்ளிட்ட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

போலீசாருக்கு பாராட்டு!

அவர்கள் அளித்த தகவலின் பேரில், அவர்கள் கொள்ளை அடித்து பதுக்கி வைத்திருந்த ராயல் என்பீல்டு பைக், தங்க செயின், வெள்ளி கொலுசு, துப்பாக்கி, திருப்புளி, இரும்பு ராடு மற்றும் கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் மூவரையும் திண்டிவனம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கும்மிடிப்பூண்டி சங்கரை தேடிவருகின்றனர். திண்டிவனம் மற்றும் மயிலம் பகுதி மக்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கிய கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்களை விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாரை, எஸ்.பி., ராதாகிருஷ்ணன் பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X