இப்போது கொள்ளை அடிக்கலாமா?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

இப்போது கொள்ளை அடிக்கலாமா?

Added : மே 01, 2021
Share
இப்போது கொள்ளை அடிக்கலாமா? பா.விஜய், மெக்லீன், அமெரிக்காவிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கொரோனா கொடுந்தொற்று தமிழகத்தைக் கதிகலங்கச் செய்யும் நிலையில், சில தனியார் மருத்துவமனைகளின் செயல்பாடு, அருவருப்பை வரவழைக்கிறது. தமிழகத்தில், சென்னைக்கு அடுத்த பெருந்தொழில் நகரமாக விளங்குவது, கோயம்புத்துார். கொரோனாவுக்குச் சிகிச்சை அளிக்க, 6,000 ரூபாய் முதல், 6


இப்போது கொள்ளை அடிக்கலாமா?பா.விஜய், மெக்லீன், அமெரிக்காவிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கொரோனா கொடுந்தொற்று தமிழகத்தைக் கதிகலங்கச் செய்யும் நிலையில், சில தனியார் மருத்துவமனைகளின் செயல்பாடு, அருவருப்பை வரவழைக்கிறது. தமிழகத்தில், சென்னைக்கு அடுத்த பெருந்தொழில் நகரமாக விளங்குவது, கோயம்புத்துார். கொரோனாவுக்குச் சிகிச்சை அளிக்க, 6,000 ரூபாய் முதல், 6 லட்சம் ரூபாய் வரை, கோயம்புத்துாரில் உள்ள சில மருத்துவமனைகள் வசூலிப்பதாக வரும் செய்திகள், மிகுந்த வருத்தத்தையும், கோபத்தையும் வரவழைக்கின்றன.
மருத்துவமனையின் தரத்திற்கேற்ப, நோயாளிகளிடம் பணத்தை கறந்து விடுகின்றனராம்.கொரோனா காலத்தில், தங்கள் உயிரை துச்சமாக மதித்து, மக்கள் சேவையாற்றும் சுகாதாரப் பணியாளர்களையும், மருத்துவர்களையும், தெய்வங்களாக எண்ணி போற்றுகிறோம்.இந்நிலையில், மருத்துவமனையில் நடக்கும் கொள்ளை, அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சில தனியார் மருத்துவமனைகளின் உள்ளேயே, நகை அடகு வைப்பதற்கான கடைகளும் திறக்கப்பட்டுள்ளனவாம்.கையில் பணமின்றி, அவசரச் சிகிச்சை பெற வரும் மக்களின் கழுத்தில், காதில் போட்டிருப்பதையும் அபகரித்துக் கொள்ளும், இந்த மருத்துவமனைகளை என்னவென்று சொல்வது?
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக, மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து, வயிற்றுப்பாட்டிற்கே பெரும் சிரமத்தைச் சந்திக்கின்றனர்.அவர்களிடம் இரக்கமும், கருணையும் காட்டி, அன்பு இல்லமாக செயல்பட வேண்டிய மருத்துவமனைகள் இப்படி, 'அமீனா'க்களாகி, 'எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம்' என்ற மனோபாவத்துடன் செயல்படுவது, எந்த விதத்திலும் நியாயமே இல்லை.
கொரோனா என்பது பேரிடர். இதிலும், பணம் பார்க்க எண்ணும் சில மருத்துவமனைகளின் நிர்வாகத்தை, சாக்கடையோடு ஒப்பிட்டாலும் தவறில்லை.தனியார் மருத்துவமனைகள் மீதும், அரசு தீவிர கண்காணிப்பை செலுத்த வேண்டும். கொரோனா நோயாளிகளிடம் கொள்ளையடிக்கும் மருத்துவமனைக்கு, 'பூட்டு' போட வேண்டும்!


இனியும் தாமதம் வேண்டாம்!அ.குணசேகரன், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்திய அரசு எடுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கை மூலம், கொரோனா முதல் அலையை, நாம் வெற்றிகரமாக சமாளித்தோம். அது மட்டும் அல்லாமல், நோய் தொற்றுக்கு எதிராக எப்படி யுத்தம் நடத்த வேண்டும் என, உலகுக்கே பாடம் எடுத்தோம்.கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்து, தயாரித்து, பல வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைத்து, உதவிக்கரம் நீட்டினோம்.தற்போது கொரோனாவின், இரண்டாவது அலை வீச ஆரம்பித்து, நம் நாடு பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது.முதல் அலையின் போது, அரசுக்கு ஒத்துழைத்த மக்கள், இரண்டாம் அலையின்போது அலட்சியம் காட்டுகின்றனர். கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற மறுக்கின்றனர்.கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள, பலரும் தயக்கம் காட்டுகின்றனர். சமூக விரோதிகள், தடுப்பூசி குறித்து தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர்.இதனால், தமிழகத்திற்கு இலவசமாக மத்திய அரசால் வழங்கப்பட்ட தடுப்பூசிகளை கூட, நாம் முழுமையாக பயன்படுத்தி கொள்ளவில்லை.கடந்த, 11ம் தேதி வரையில், 54 லட்சத்து, 28 ஆயிரத்து, 950 தடுப்பூசிகளில், 12.10 சதவீதம் வீணடித்துள்ளோம். இதில், நாட்டிலேயே முதலிடத்தில், தமிழகம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில், வெறும், 8 சதவீதம் பேருக்கு தான், முதல் தடுப்பூசியும்; 1 சதவீதம் பேருக்கு தான், இரண்டாவது தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடப்படுவதில், நாம் செல்ல வேண்டிய துாரம் மிகவும் அதிகம்.தடுப்பூசி போட்டுக் கொள்ள, அனைவரும் முன்வர வேண்டும். 'கோவின், ஆரோக்கிய சேது' போன்ற மொபைல்போன் செயலியின் மூலமாக, முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.
தமிழகத்தில், சில நாட்களுக்கு முன் வரை, 48.68 லட்சம் பேருக்கு தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை, 6.28 கோடி.இதை பார்க்கும்போது, நாம் எந்தளவுக்கு விழிப்புணர்வு இல்லாமல், அலட்சியமாக இருக்கிறோம் என்பது தெரிய வருகிறது.நம் அமைச்சர்கள் முதல், எதிர்க்கட்சி தலைவர் வரை அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இனியும், நாம் தாமதம் செய்ய வேண்டாம். தடுப்பூசி போட்டுக் கொள்வதில், நாட்டிலேயே முதல் இடம் பெறுவோம்.


'காரியத்துக்காக' எதிர்க்கின்றனர்!வை.அய்யப்பன், புதுபாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசு கூட்டிய, அனைத்து கட்சி கூட்டத்தில், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது, மகிழ்ச்சியான விஷயம்.எனினும், தி.மு.க.,வின் தோழமை கட்சிகளான, ம.தி.மு.க., மற்றும் வி.சி., போன்ற கட்சிகளின் எதிர்ப்பு, வியப்பை அளிக்கிறது.தாமிர தயாரிப்பால் வெளியாகும் என சொல்லப்படும் நச்சுக்காற்று, மக்களைப் பாதிக்கிறது என்பதால், அவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்க்கவில்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது. நிச்சயம், அதற்கு வேறு காரணங்கள் உள்ளன!அப்படி இல்லையெனில், சுற்றுப்புற மாசு ஏற்படுத்தாத, மக்களின் உயிர் காக்கும் ஆக்சிஜன் தயாரிப்பை ஏன் எதிர்க்க வேண்டும்?பிற்காலத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம், தாமிர தயாரிப்பை கைவிட்டு, வேறு ஏதேனும், மாசில்லாத உற்பத்தி துவங்கினாலும், இவர்கள் அதையும் எதிர்ப்பர் என்பதில், எந்த சந்தேகமும் இல்லை.இவர்கள் எதிர்ப்புக்கு காரணம், உற்பத்தியாகும் பொருள் அல்ல அந்த நிறுவனம். அரசியல்வாதிகள் தங்கள், 'காரியத்துக்காக' ஸ்டெர்லைட் ஆலையை எதிர்க்கின்றனர் என்ற உண்மையை, மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


அவர்கள் திருந்தவே மாட்டார்கள்!என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கொரோனா தொற்று, தினந்தோறும் பாதிப்பு, 3.5 லட்சம் என்ற எண்ணிக்கையைத் தொட்டு, அமெரிக்காவைப் பின்னுக்கு தள்ளி, நம் நாடு முதலிடத்தை பிடித்துள்ளது.இந்த ஆண்டு, நம் நாட்டில், ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் டில்லியில், 25 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்; ஆங்காங்கே பலர் இறந்தும் வருகின்றனர்.இங்கிலாந்து, ரஷ்யா ஆகியவை, நம் நாட்டிற்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.இந்த இக்கட்டான சூழ்நிலையில், துாத்துக்குடியில் உள்ள, 'ஸ்டெர்லைட் காப்பர்' நிறுவனம், தினமும், 1,000 டன் ஆக்சிஜனை தயாரித்து, இலவசமாக சப்ளை செய்ய முன்வந்துள்ளது.
இதைப் பாராட்டிய உச்ச நீதிமன்றம், 'ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்து, ஆக்சிஜன் தயாரிக்க, தமிழக அரசு அனுமதி அளிக்கலாமே' என, ஆலோசனை சொன்னது.அம்புடுத் தான் போங்க!தமிழகத்திலுள்ள, 'மக்கள் சேவகர்கள்' கொதித்து எழுந்து, 'கொரோனாவால், எவ்வளவு மக்கள் செத்தாலும் பரவாயில்லை; ஆனால், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க விட மாட்டோம்' என சூளுரைத்துள்ளனர்.மக்களின் உயிரை விட, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதில் தான், இந்த சுயநல அரசியல் வியாபாரிகள் தீவிரமாக இருக்கின்றனர் என்பது, வெட்ட வெளிச்சமாகி விட்டது.'மகன் இறந்தாலும் பரவாயில்லை; மருமகள் விதவை ஆக வேண்டும்' என, கேவலமாக நடந்து கொள்ளும் சில மாமியார் போல, ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆக்சிஜன் தயாரிக்க தடை போடும் செயல் உள்ளது.கொரோனாவால், தினமும் பலியாகும் உயிர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. தமிழக அரசு, அனைத்து கட்சிக் கூட்டம் கூட்டி, ஆக்சிஜன் எவ்வளவு முக்கியம் என, பாடம் எடுத்த பின், அந்த அரசியல் வியாபாரிகளுக்கு ஏதோ
புரிந்திருக்கிறது.இந்த அரசியல்வாதிகள், சீக்கிரம் புரிந்து கொண்டனரே என, கொஞ்சம் மகிழ்ச்சியாக உள்ளது.


அது அம்பேத்கர் சொன்னது!எஸ்.சுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அம்பேத்கரின், 130வது பிறந்த நாள் விழா, ஏப்., 14ம் தேதி, நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கும் மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள, தேசிய சட்ட பல்கலையில் புதிய கட்டட திறப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது.முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடந்த அந்த விழாவில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே உள்ளிட்டோர், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்றனர்.அதில், தலைமை நீதிபதி பாப்டே பேசியது தான், முக்கியத்துவம் வாய்ந்தது.'இந்த விழாவில், எந்த மொழியில் பேசுவது என்பது குறித்து தீவிரமாக யோசித்தேன். நம் அன்றாட வாழ்க்கையில் பேசும் மொழிக்கும், பணியின் போது பயன்படுத்தும் மொழிக்கும் நீண்ட நாட்களாக உள்ள முரண் குறித்து நினைவு வந்தது. இதை, அம்பேத்கர் முன்பே எதிர்பார்த்துள்ளார்.'எனவே தான் அவர், நாட்டின் தேசிய மொழியாக, சமஸ்கிருதத்தை அறிவிக்க பரிந்துரைத்தார். வட மாநிலத்தவர், தமிழை தேசிய மொழியாக ஏற்க மாட்டார்கள். அதே போல, தென் மாநிலத்தவர்கள், ஹிந்தியை ஏற்க மாட்டார்கள் என்பதை, அம்பேத்கர் அன்றே உணர்ந்துள்ளார்.'சமஸ்கிருதத்திற்கு, இரு பகுதிகளிலும் எதிர்ப்பு இருக்காது என்பதால், இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளார்; ஆனால், அது வெற்றி பெறவில்லை' என, பாப்டே பேசி இருக்கிறார்.நம் நாட்டில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராட்டி, ஒரியா, பெங்காலி, போஜ்புரி, அஸ்ஸாமி, காஷ்மீரி, பஞ்சாபி, ராஜஸ்தானி, கொங்கணி, ஹிந்தி என, பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன.இவ்வளவு மொழிகள் நாட்டில் உலவும் போதும், தலைமை நீதிபதி, தமிழையும், ஹிந்தியையும் தான் உதாரணம் காட்டிப் பேசி இருக்கிறார்.காரணம், மற்ற மாநில மக்கள், தங்கள் தாய் மொழியை கற்பதோடு, ஹிந்தியையும் விருப்பத்தோடு கற்றுக் கொள்கின்றனர். ஆனால், தமிழகத்தில் மட்டும் தான், இந்த திராவிட அரசியல் கட்சிகளால், ஹிந்திக்கு முழு மூச்சாக எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தெரிவித்திருக்கும் இந்த கருத்தை, வேறு யாராவது கூறி இருந்தால், தமிழகத்தில் இருந்து கண்டன குரல்களும், போராட்ட அறிவிப்புகளும் சுழன்றடித்து இருக்கும்.மேலும் முக்கியமான குறிப்பு, அது அம்பேத்கரின் கருத்து என்பது தான். அதனால், திராவிட அரசியல்வாதிகள், 'திருடனுக்கு தேள் கொட்டியது போல', இப்போது முழிக்கின்றனர்.


அரசு பணியாக மாற்றுங்கள்!எஸ்.செபஸ்டின், சிவகாசி, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கிராமப் பகுதியில் இறந்தவர் உடலை அடக்கம் செய்வதில், பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.பாதை இல்லாமல், வயல்வெளியில் உடலை சுமந்து செல்கின்றனர். ஜாதிக்கொரு சுடுகாடு என்ற பேதமும்; ஒரே நாளில் இருவர் இறந்தால், எரியூட்டுவதில் சிக்கலும் ஏற்படுகின்றன.ஈமச்சடங்கு வேலை யை, சில குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தோர் மட்டுமே செய்து வருகின்றனர். இதனால் அவர்கள், தீண்டத்தகாதோராக நடத்தப்படுகின்றனர்.இந்நிலையை மாற்ற வேண்டும். அதற்கான ஒரே வழி, அனைத்து மாணவர்களுக்கும் ஒரே அரசு பள்ளி அமைந்து இருப்பதை போல, அனைத்து ஜாதி, மத மக்களுக்கும் ஒரே இடுகாடு மற்றும் சுடுகாடு ஏற்
படுத்த வேண்டும்; அதில், அனைத்து வசதிகளும் செய்யப்பட வேண்டும்.மது விற்பனை செய்வதற்கு, அரசு பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது போல, சுடுகாடு பணியையும், அரசு வேலையாக மாற்ற வேண்டும்.விருப்பப்படும் யார் வேண்டுமானாலும், அப்பணியை செய்யலாம் என அறிவித்தால், ஜாதி பேதமும், சண்டை சச்சரவுகளும் பெருமளவு குறையும்.இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு ஏற்படும். மேலும், இடுகாட்டில் கட்டடம் கட்டுவதை தடை செய்ய வேண்டும். இதனால், நிலம் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்க முடியும்.அமையும் புதிய அரசு, இத்திட்டத்தை செயல்படுத்த முன்வர வேண்டும்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X