பேச்சு, பேட்டி, அறிக்கை| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : மே 01, 2021
Share
'உண்மையை உரக்கச் சொல்ல, 'தில்' வேண்டும் என்பது உண்மை தான். அதற்காக, எதற்கெடுத்தாலும் விதண்டாவாதமாக கருத்து தெரிவிப்பதற்கு, பா.ஜ.,வில் சேர வேண்டாமே; தனித்து செயல்பட்டிருக்கலாமே...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி அறிக்கை: பிறரை போல அரசியலில் பெரிய குறிக்கோளுடன் நான் வரவில்லை. இந்தியாவை வளம் மிகுந்த நாடாக மாற்றவும், தேசிய


பேச்சு, பேட்டி, அறிக்கை

'உண்மையை உரக்கச் சொல்ல, 'தில்' வேண்டும் என்பது உண்மை தான். அதற்காக, எதற்கெடுத்தாலும் விதண்டாவாதமாக கருத்து தெரிவிப்பதற்கு, பா.ஜ.,வில் சேர வேண்டாமே; தனித்து செயல்பட்டிருக்கலாமே...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி அறிக்கை: பிறரை போல அரசியலில் பெரிய குறிக்கோளுடன் நான் வரவில்லை. இந்தியாவை வளம் மிகுந்த நாடாக மாற்றவும், தேசிய நோக்குடனும் தான் அரசியலுக்கு வந்தேன். அதனால் தான், யாருக்கும் பயமின்றி உண்மைகளை உரக்கச் சொல்லி வருகிறேன். யாருடைய தயவையும் நான் எதிர்பார்க்கவில்லை.


'இது போன்ற ஆறுதலான வார்த்தைகள் தான், இப்போதைய தேவை. 'டிவி'களை திறந்தால், மாரடைப்பு ஏற்படும் அளவுக்கு, வலி மிகுந்த காட்சிகளை காட்டுகின்றனர். நம்பிக்கை தான் வாழ்க்கை...' என, கூறத் தோன்றும் வகையில், மாநில பொது சுகாதாரத்துறை இயக்குனர், டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம் பேட்டி:
நம் ஒரு நாள் ஆக்சிஜன் உற்பத்தி, 400 டன். நம் ஒரு நாள் தேவை, 250 -- 300 டன். எனவே, தேவைக்கு அதிகமாகவே நம்மிடம் ஆக்சிஜன் இருக்கிறது. நம் ஆக்சிஜன் சேமிப்புத்திறன், 1,200 டன் என்பதால், எதற்கும் கவலைப்படத் தேவையில்லை.


'இப்ப கொஞ்ச நாளாகத் தானே, மோடி, திருக்குறளை சொல்கிறார். அதன் மேன்மையை அறிந்து கொள்ள, அவருக்கு இத்தனை காலம் ஆனதா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., தலைவர் முருகன் பேட்டி:
பிரதமர் மோடி, தமிழை மிகவும் நேசிக்கிறார். உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் முதலில் திறக்குறளைச் சொல்லித் தான் பேச்சையே ஆரம்பிக்கிறார்.தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு, ஒரு எம்.பி., கூட கிடையாது. ஆனாலும், தமிழகத்திற்கு அனைத்துத் திட்டங்களையும் நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம்.


'கொரோனாவுக்கு எதிரான போரில், பிடிவாதத்தை தளர்த்தி, கேரள அரசு வெற்றி பெற்றால் சரி தான்...' என, சொல்லத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிக்கை:
கொரோனா நோயாளிகளின் தேவைக்காக, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், 'ஆக்சிஜன் வார் ரூம்'கள் அமைக்கப்படும். அதில், போலீஸ், சுகாதாரம், போக்குவரத்து, பேரிடர் மேலாண்மை போன்ற துறைகளின் பிரதிநிதிகள் இருப்பர்.


'உங்களைப் போன்ற படித்தவர்களே, இந்த நேரத்தில், மத்திய அரசு மீது குறை கூறலாமா; கூட்டம் சேர்ந்தால் என்ன; சமூக விலகலை கடைப்பிடித்து நின்றால், எந்த பிரச்னையும் வராதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் அறிக்கை:
தடுப்பூசிகள் தட்டுப்பாடு நிலவும் நேரத்தில், மத்திய அரசு, 18 வயது நிரம்பிய அனைவருக்கும், மே 1 முதல், தடுப்பூசி போடப்படும் என அறிவித்துள்ளது. இதனால், தடுப்பூசி மையங்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த கோளாறுக்கு யார் காரணம்?


'அடேங்கப்பா... உங்கள் கூட்டணி, ஆட்சிக்கே இன்னும் வரவில்லை; அதற்குள் இப்படியொரு மிரட்டலா...' என, சொல்லத் தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் அறிக்கை:
நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் தேர்தல் கமிஷன் மற்றும் அரசின் வழிகாட்டுதல்களை ஆதரித்து, அவற்றிற்கு ஒத்துழைக்க உறுதியளிக்கிறோம். அதே சமயம், ஓட்டு எண்ணிக்கை மீது சந்தேகத்தின் நிழல் படியாதபடி, தேர்தல் கமிஷன் நடந்து கொள்ள வேண்டும்.


'நம் தமிழகத்தில், அனைத்து மதத்தினரும், ஜாதியினரும் ஒற்றுமையாக இருக்கின்றனர். அந்த அளவுக்கு சிறப்பான ஆட்சி, மத்தியிலும், மாநிலத்திலும் உள்ளது என்பதை, இப்போதாவது உணர்ந்து கொள்கிறீர்களா...' என, சொல்லத் துாண்டும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:
இலங்கையில் நடந்து வரும் ராஜபக்சே சகோதரர்களின் ஆட்சியில், தமிழர்கள் மீது இன அடிப்படையிலும், முஸ்லிம்கள் மீது மத அடிப்படையிலும் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இரு இனங்களும் ஒன்றுபட்டு, இதை எதிர்க்க வேண்டும்.


'ஒரு ஹிந்தி கல்வெட்டுக்கே, போர்க்களம் புக துடிக்கின்றனரா... தமிழர்களை, உங்களை விட்டால் வேறு யாரும் இவ்வளவு மட்டம் தட்டி பேச முடியாது...' என, சொல்லத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை:
திருச்செந்துார் முருகன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள ஹிந்தி கல்வெட்டால், தமிழர்கள் அனைவரும் கொதித்துப் போயுள்ளனர். போர்க்களம் புக மக்கள் துடிக்கின்றனர். அதற்கு முன், அந்த கல்வெட்டுகளை அகற்ற வேண்டும்.


'மக்களை காக்கத் தான், மத்தியில் மோடி அரசும், மாநிலத்தில், இ.பி.எஸ்.,சும் படாதபாடு படுகின்றனர். வெறுமனே அறிக்கை விடும் உங்களுக்கு, அது எங்கே தெரியப் போகிறது...' என, விரக்தி தெரிவிக்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி அறிக்கை:
மக்களையும், மாநிலங்களையும், கடைசியாக வைரசையும் குறை சொல்லி, தனது பொறுப்புகளிலிருந்து, பிரதமர் நரேந்திர மோடி தப்பி ஓடி விட முடியாது. மக்களைக் காப்பாற்றுங்கள் அல்லது வெளியேறுங்கள்.


'எதிர்க்கட்சிகளாக, இவ்விரு கட்சிகளும் அடிக்கும் லுாட்டியால், தமிழக மக்களுக்கு அல்லவா பீதி அதிகரிக்கிறது. எனவே, எப்போதும், எல்லா விவகாரங்களிலும் அரசியல் வேண்டாமே...' என, கூறத் துாண்டும் வகையில், அ.தி.மு.க., துணை கொள்கை பரப்பு செயலர் நடிகை விந்தியா பேட்டி:
தி.மு.க.,-வினர் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி உண்மையை உரக்கச் சொல்றேன். அதேசமயம், தனிப்பட்ட முறையில் அவங்களை நாங்க யாருமே எதிர்க்க மாட்டோம். கட்சி ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும், அ.தி.மு.க-.,வுக்கு, தி.மு.க., எப்போதும் எதிர்க்கட்சி தான். அந்த நிலைப்பாட்டில் இருந்து எப்போதும் விலக மாட்டோம்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X