அண்மையில், 'யுடியூப்' சமூக வலைதள சேனல் ஒன்றில், 'ஜாதிகள் தேவையா?' என்ற தலைப்பில், பொதுமக்களின் கருத்துகளை வெளியிட்டுஇருந்தனர். அதில் பெரும்பாலான மக்களின் கருத்து, 'ஜாதிகள் தேவை இல்லை. அரசியல் கட்சிகள் தான், தங்கள் ஆதாயத்துக்காக, ஜாதி வேற்றுமைகளை ஊதி பெரிதாக்குகின்றன' என்பதே!
'ஜாதி இரண்டொழிய வேறில்லை' என்று அவ்வையும், 'பறைச்சி போகம் வேறதோ? பனத்தி போகம் வேறதோ?' என்று சித்தரும், 'ஜாதிகள் இல்லையடி பாப்பா - குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்' என்று பாரதியும் பாடினர்.
வேதனை
வள்ளலார் ஆன்மிக உணர்வூட்டிய மண்ணில், 'இருட்டறையில் உள்ள தடா உலகம் - ஜாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே' என்று பாரதிதாசன் மனம் வெதும்பிய இந்தத் தமிழ் மண்ணில், அந்த ஆன்றோர்கள் மறைந்து பல தசாப்தங்களுக்குப் பிறகும் ஜாதியம் முன்பை விடவும் வேரோடியிருக்கிறது என்பது வேதனைஅளிக்கிறது.
இந்திய அரசியல் சாசன கர்த்தாவும், ஆய்வியல் அறிஞருமான டாக்டர் அம்பேத்கரின் முதல் நுால், 1916-ல் வெளியான, 'இந்தியாவில் ஜாதிகள்' என்ற நுால்.
அதில் அம்பேத்கர், 'ஆதி காலத்தில் மனிதர்கள் அவரவர் சவுகர்யங்களுக்கு ஏற்ப, தனித்தனிக் குழுக்களாக வாழ்ந்து வந்தனர். 'அப்படியாக வாழ்ந்து வந்த குழுக்களில், தங்கள் மகனுக்கோ - மகளுக்கோ திருமணம் செய்யும் போது, அடுத்த குழுவில் மணமகளை - மணமகனை நாடிச் செல்லாமல், தங்களது குழுவிலேயே மணப்பெண்ணும், மாப்பிள்ளையும் எடுத்தனர்.'இது போன்றே சில குழுக்கள் வழக்கமாக வைத்திருப்பதைப் பார்த்து, மற்ற குழுவினரும் அதையே கடைப்பிடித்து, பிற குழுவினருக்குக் கதவடைத்து விட்டனர். காலப்போக்கில் அவையே ஜாதிகள் ஆயின' என்கிறார்.
மேலும், அந்த நுாலில் அம்பேத்கர், 'இப்படி ஜாதிகளாகப் பிரிந்திருக்கும் வரை, நமக்கு என்ன அநீதி நடைபெற்றாலும், அதை எதிர்த்துப் போராடுவதற்கு, மக்களை ஒன்று திரட்ட முடியாது. தேசிய இனத்தை உருவாக்க முடியாது. ஒழுக்கப் பண்புகளை உருவாக்க முடியாது.'எந்தத் திருமண முறைகளால் ஜாதியம் வேர் கொண்டதோ, அதே திருமண முறையை மாற்றுவதன் மூலமாகவே ஜாதிப் பாகுபாடுகளை ஒழிக்க முடியும். எனவே, ஜாதி மறுப்புத் திருமணங்கள் பெருக வேண்டும்' என்கிறார்.ஈ.வெ.ரா.,வை பலரும் சமூக நீதி, இட ஒதுக்கீட்டின் அடையாளமாக மட்டுமே பார்க்கின்றனர். ஆனால், அவரின் பல பரிமாணங்களில், ஜாதி ஒழிப்பும் முக்கியமானது.
நிதியுதவி
கடந்த நுாற்றாண்டின் மத்தியில், அவரின் சமூக சீர்திருத்தங்களின் விளைவாக, மனிதர்கள் தம் ஜாதிப் பெயரை வெளியே சொல்லக் கூசிய மனித விழுமியம் மலர்ந்தது. இதை உணர்ந்து தான், தி.மு.க., ஆட்சியில் கருணா நிதி, ஜாதி ஒழிப்பு என்ற லட்சியத்தை நோக்கிப் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டார். அதில் ஒன்று தான், 'டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம்!'இத்திட்டத்தின்படி தாழ்த்தப்பட்ட வகுப்பினரையோ, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையோ பிற ஜாதியினர் திருமணம் செய்து கொண்டால், அத்தம்பதிக்கு அரசின் நிதியுதவி கிடைக்கும்.
அது போன்று அரசின் நிதியுதவியில், ஆகம நியமங்களின்படி செயல்படும் கோவில்களில் உயர் ஜாதியினர் மட்டுமே அர்ச்சகராகப் பணியாற்ற முடியும் என்ற, ஜாதி பாகுபாட்டைக் களைய, 'அரசு செலவில் ஆகமக் கல்வி துவங்கி, அதில் கற்றுத் தேர்ச்சி பெறும் எந்தச் ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்' என்ற சட்டமும், தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.
எனினும், ஆகமம் பயின்றவர்கள், இன்னமும் அர்ச்சகர் ஆக முடியாத நிலை தொடர்கிறது.
ஒரு மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருக்கும் ஜாதியைச் சேர்ந்தவருக்கு மாவட்டச் செயலர் பதவி தருவது, தேர்தல்களில் வேட்பாளராக நிறுத்துவது போன்று இலைமறை காயாக இருந்த ஜாதி அரசியல், மிக அண்மைக் காலத்தில் தான், தன் கோர முகத்தைக் காட்டத் துவங்கி விட்டது.
தமிழகத்தில் அண்மையில் ஆட்சி பீடத்தில் இருந்தவருக்கு நெருக்கமாக இருந்தவர், தன் ஜாதியினருக்கே அரசியலிலும், அதிகார வர்க்கத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வாங்கித் தரும் ஜாதிய அரசியலை முன்னெடுத்துச் சென்றார்.
வருத்தம்
இது, மற்ற ஜாதியினரைச் சீண்டி பார்ப்பதாகவும், ஒருவித பாதுகாப்பு இன்மையை ஏற்படுத்துவதாகவும் மாறி, அவர்கள் தத்தமது ஜாதிக் குடையின் கீழ் வேகமாக அணி திரளத் துவங்கினர். இதன் விளைவு, இன்றைய தேர்தல்களில், ஜாதி அரசியல் வெளிப்படையாகவே விவாதிக்கப்படும் ஒன்றாகி விட்டது.
ஒரு முக்கிய தலைவர், சட்டசபை தேர்தலுக்கு முன், தன் ஜாதியைச் சேர்ந்த பிரமுகர்களைச் சந்தித்து, தேர்தலில் தன்னை ஆதரிக்கும்படி கேட்டிருப்பதாகச் செய்தி வந்தது. சாதனையைச் சொல்லி ஓட்டு கேட்க வேண்டியவர்கள், ஜாதியைச் சொல்லி ஓட்டு கேட்குமளவு கீழிறங்கிப் போவது வருத்தம் அளிக்கிறது.
தமிழகத்திற்கு வந்த பிரதமர் மோடி, 'தேவேந்திரகுல வேளாளர்கள்' என, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்தவர்களின் ஜாதி பெயரை மாற்றி, 10 நிமிடங்களுக்கு மேல் ஜாதியம் பேசியுள்ளார்.
அமைதியான நம் நாட்டில், ஜாதி பகைமைகள் தலைதுாக்கக் கூடாதென்பதே நம் கவலை. 'மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வருவோம்' என்று தேர்தல் அறிக்கையில் சொல்லும் பா.ஜ., ஜாதி மாற்றத்துக்கு வித்திடுவோம் என்பது, என்ன வகையான அரசியலோ!
கடந்த, 2019 லோக்சபா தேர்தலின் போது, ஆளும் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தது பா.ம.க., இரண்டு ஆண்டுகளாக மவுனமாக இருந்து விட்டு, சட்டசபை தேர்தல் அறிவிக்கப்படும் சமயம் பார்த்து, 'வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு கொடுத்தால் மட்டுமே, அ.தி.மு.க., வுடன் கூட்டணி' என்று அறிவித்தார், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ். வன்னியர் ஓட்டுகளை வளைத்துப் போடத் துடித்த முதல்வர் இ.பி.எஸ்., தேர்தல் அறிவிப்பு வெளியாகும் நாளில், அவசர அவசரமாக, 'மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கென இருக்கும், 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு, 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு தரப்படும்' என்று அறிவித்து விட்டார்.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில், 108 ஜாதிகள் உள்ளன. அத்தனை ஜாதிகளுக்கும் சேர்த்து வழங்கப்பட்டு வந்த, 20 சதவீத இட ஒதுக்கீட்டில், பாதிக்கும் மேலாக வன்னியர்களுக்கு அறிவித்திருப்பதை எதிர்த்து, பிற ஜாதியினர் போர்க்கொடி துாக்கி இருக்கின்றனர். இந்த வன்னியர் உள்ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.பொறுப்பான அரசியல் சாசனப் பதவியில் இருப்பவர்களே, இது போன்று அரசியல் ஆதாயத்துக்காக, எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற ரீதியில், ஜாதியத் தீயில் எண்ணெய்வார்ப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
விழிப்புணர்வு
இதெல்லாம் எங்கே போய் முடியுமோ என்று கவலையாக இருக்கிறது. தன் குடிமக்களுக்கு, மூன்று வேளை உணவு, உழைத்துப் பிழைக்க ஒரு வேலை, குடியிருக்க வீடு, நல்ல கல்வி, தரமான இலவச மருத்துவம், சுத்தமான குடிநீர், துாய்மையான காற்று ஆகிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாதவர்களே, ஜாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் அரசியல் செய்கிறவர்களாக இருக்கின்றனர். மக்கள் தான் விழிப்புணர்வுடன் இருந்து, சமூக பதற்றங்கள் எழாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
'எல்லார்க்கும் எல்லாமும் என்கிற இடம்நோக்கி நடக்கிறது இவ்வையம்' என்ற புரட்சிக் கவியின் வாக்கு, எப்போது நிறைவேறுமோ!'எட்டுக் கோடி முகமுடையாள் - தமிழ் இனத்தின் இதயம் ஒன்றுடையாள்' எனச் சொல்லத் தோன்றுகிறது!
திலகவதி ஐ.பி.எஸ்.,
தொடர்புக்கு:
இ - மெயில்: thilakavathiips@gmail.com