தமிழர் கலாசாரம் காக்க கூட்டமைப்பு உருவாக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'தமிழர் கலாசாரம் காக்க கூட்டமைப்பு உருவாக்கம்

Added : மே 01, 2021 | கருத்துகள் (1)
Share
சென்னை:ஐரோப்பிய நாடுகளில் உள்ள, தமிழர்களின் கலாசாரத்தை பாதுகாக்கும் வகையில், ஐரோப்பிய தமிழர்கள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், நேற்று முன்தினம் பாரதிதாசனின், 130வது பிறந்த நாள், தமிழ் கவிஞர் நாளாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, இணையவழியில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கில், ஜெர்மனியின் முன்சென் தமிழ்ச்சங்க

சென்னை:ஐரோப்பிய நாடுகளில் உள்ள, தமிழர்களின் கலாசாரத்தை பாதுகாக்கும் வகையில், ஐரோப்பிய தமிழர்கள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், நேற்று முன்தினம் பாரதிதாசனின், 130வது பிறந்த நாள், தமிழ் கவிஞர் நாளாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, இணையவழியில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.

கருத்தரங்கில், ஜெர்மனியின் முன்சென் தமிழ்ச்சங்க தலைவர், செல்வக்குமார் பெரியசாமி பேசியதாவது:தமிழர்கள் தனித்த அடையாளம் உடையவர்கள். அவர்களின் பண்பாடு சிதையக்கூடாது. ஐரோப்பிய நாடுகளில் வாழும், தமிழர்களின் கலாசாரத்தை பாதுகாக்கும் வகையில், ஐரோப்பிய தமிழர்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி, அனைத்து நாட்டு தமிழ் அமைப்புகளையும் இணைத்துள்ளோம். இனி, தமிழ் கலாசாரம் உலக அளவில் மேலோங்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.

கருத்தரங்கில், பாரீஸ் பன்னாட்டு உயர்கல்வி நிறுவனத்தின் நிறுவனர் சச்சிதானந்தம் பேசுகையில், ''பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற புதுச்சேரியில் பிறந்த பாரதிதாசனை, பிரெஞ்சு நாடு பெரிதும் மதிக்கிறது. விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் என்ற, பிரெஞ்சு அரசின் கொள்கைகளையே, பாரதிதாசனும் விரும்பினார்,'' என்றார்.

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் ராசேந்திரன் பேசுகையில்,''மலேசிய மக்களிடம், தமிழ் மொழிப் பற்றும், இனப்பற்றும் மேலோங்கி இருப்பதற்கு, பாரதிதாசன் தான் காரணம். அவரின் இன உணர்வு கனவுகளை மீட்க, மலேசிய தமிழர்கள் தொடர்ந்து பாடுபடுகின்றனர்,'' என்றார்.நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் விஜயராகவன், மொழிபெயர்ப்பு இயக்குனர் அருள், பொதிகை தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குனர் பால ரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X