இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : மே 02, 2021 | Added : மே 02, 2021
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்பாலிவுட் நடிகர் பலிமும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில், 'அதாலத் டிவி' நிகழ்ச்சி வாயிலாக புகழ் பெற்ற, பாலிவுட் திரைப்பட நடிகர் பிக்ரம்ஜித் கன்வர்பால், 52, கொரோனா தொடர்பான பாதிப்புகளால், மும்பை மருத்துவமனையில் நேற்று காலமானார்மருத்துவமனையில் தீ: குஜராத்தில் 18 பேர் பலிபரூச்: குஜராத்தில், மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில்,
today, crime, round up, இன்றைய, கிரைம், ரவுண்ட் அப்


இந்திய நிகழ்வுகள்


பாலிவுட் நடிகர் பலி

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில், 'அதாலத் டிவி' நிகழ்ச்சி வாயிலாக புகழ் பெற்ற, பாலிவுட் திரைப்பட நடிகர் பிக்ரம்ஜித் கன்வர்பால், 52, கொரோனா தொடர்பான பாதிப்புகளால், மும்பை மருத்துவமனையில் நேற்று காலமானார்


latest tamil news



மருத்துவமனையில் தீ: குஜராத்தில் 18 பேர் பலி
பரூச்: குஜராத்தில், மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், கொரோனா நோயாளிகள், 18 பேர், உடல் கருகி இறந்தனர்.குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமை யில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

இங்கு, பரூச் நகரில் உள்ள தனியார் மருத்துவ மனை ஒன்றில், அவசர சிகிச்சை பிரிவில், 50க்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். நேற்று அதிகாலையில், நோயாளிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நோயாளிகள் அலறி அடித்தபடி, அறையை விட்டு வெளியே ஓடினர்; சிலர் தீயில் சிக்கினர். தீயணைப்பு படையினர், ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி, தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைத்தனர்.

அப்போது, ஸ்டிரெச்சர், படுக்கை ஆகியவற்றில் கருகிய நிலையில் கிடந்த, 12 சடலங்கள் மீட்கப்பட்டன.தீக்காயத்தால் பாதிக்கப்பட்டோர், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதில், சிகிச்சை பலனின்றி, ஆறு பேர் இறந்தனர்.தீ விபத்தில் இறந்தோரின் உறவினர்கள், மருத்துவமனை முன் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.அதைவிட, பல உடல்கள், முழுக்க கருகி விட்டதால், அடையாளம் காண முடியாமல் உறவினர்கள் தவித்தது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக, போலீசார் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே, தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு வேதனை அளிப்பதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


தமிழக நிகழ்வுகள்

மலைப்பாதையில் கவிழ்ந்த ஆட்டோ

கூடலுார்: வேலுாரைச்சேர்ந்த ஜெயக்கண்ணன் 45, குமுளியில் இருந்து ஆட்டோவில் லோயர்கேம்ப் வந்தார். லோயர்கேம்பைச் சேர்ந்த ரவி 35, ஓட்டி வந்தார். மலைப்பாதையில் மாதா கோயில் அருகே கட்டுப்பாடு இழந்த ஆட்டோ தடுப்புக்கம்பியில் மோதி கவிழ்ந்தது. காயமடைந்த இருவரும் கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தடுப்புக்கம்பி இல்லாவிட்டால் ஆட்டோ 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபரீதம் ஏற்பட்டிருக்கும்.

4 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் போலீசார் நடத்திய சோதனையில் தடை மீறி விற்பனை செய்ததாக 4 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மே தினம், ஞாயிறு ஊரடங்கால் டாஸ்மாக் மதுபான கடைகளை 2 தினங்களுக்கு திறக்க அரசு அனுமதி மறுத்தது. இதையடுத்து மது விற்போரை கண்காணிக்க எஸ்.பி., ரவளிப்பிரியா உத்தரவிடடார்.இந்நிலையில் திண்டுக்கல் பஸ்ஸ்டாண்டில் அனுமதியின்றி மது விற்றாக அய்யன்குளம் எட்வர்ட் ராஜாவும் 40, ரவுண்ட் ரோடு பகுதியில் தோட்டனுத்து முருகனும் 50, விவேகானந்தா நகரில் காளிதாஸ் 41, என்பவரும் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 83 பாட்டில்கள், இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாவட்ட அளவில் 161 வழக்குகளில் 4109 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

8 கடைக்காரர்கள் மீது வழக்கு

ராமநாதபுரம்: கொரோனா பரவலை தடுக்க 3000ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான், ராமேஸ்வரம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக நகைக்கடைகள், வணிக வளாகம், திருமண மண்டபத்தில் ஜவுளி வியாபாரம் நடந்தது. 8 கடைகளின் நிர்வாகத்தினர் மீது வழக்கு பதிவு செய்து கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

தாயை தாக்கிய மகன் மீது வழக்கு

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே தாயைத் தாக்கிய மகன் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.ஆலடி அடுத்த குருவன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் மனைவி ராஜகுமாரி, இவரது மகன் வீரமணி, 36; இவர், நேற்று முன்தினம், ராஜகுமாரியை திட்டி, தாக்கினார்.புகாரின் பேரில், வீரமணி மீது ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


latest tamil news




மனைவியை துன்புறுத்திய கணவன் கைது

கள்ளக்குறிச்சி: மனைவியை அடித்து துன்புறுத்திய கணவரை போலீசார் கைது செய்தனர். மேலும், இருவரை தேடிவருகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த கீழ்குப்பத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு,47; இவரது மனைவி சந்திரா,40; திருமணமாகி 20 ஆண்டாகும் இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.இந்நிலையில், திருநாவுக்கரசு, வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்து கொண்டு மனைவி சந்திராவை அடித்து, துன்புறுத்தி வந்தார். கடந்த 23ம் தேதி சுயமாக தொழில் துவங்க வேண்டும் என்று கூறி ரூ.10 லட்சம் பணம், 20 சவரன் தங்க நகைகள் வாங்கி வருமாறு கூறி, சந்திராவை அடித்து துன்புறுத்தினார். அதற்கு, பானையங்காலை சேர்ந்த ராமலிங்கம் மனைவி தெய்வநாயகி, வாசுதேவன் மனைவி மகேஸ்வரி ஆகியோர் உடந்தையாக இருந்தனர்.இது குறித்து சந்திரா கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து திருநாவுக்கரசை கைது செய்தனர். மற்ற இருவரை தேடிவருகின்றனர்.

பெண் குளிப்பதை எட்டிப் பார்த்த வாலிபர் கைது

மணலி, : மணலி அருகே, இளம்பெண் குளிப்பதை எட்டி பார்த்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.மணலியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், நேற்று முன்தினம் இரவு குளிக்கும் போது, அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும், கவுதம் மோனிஷ், 28, என்பவர் எட்டிப் பார்த்துள்ளார்.

இதை கவனித்த அப்பெண் கூச்சலிடவே, அவர் தப்பியோடி விட்டார். இது குறித்து, மணலி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.வழக்கு பதிவு செய்த போலீசார், கவுதம் மோனிஷை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.கவுதம் மோனிஷ், வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, சி.பி.சி.எல்., நிறுவனத்தில், ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிகிறார்.

ரசாயனத்தில் பழுக்க வைத்த 1.7 டன் மாம்பழம் அழிப்பு

சேலம்:ரசாயனம் மூலம் பழுக்க வைத்த, 1.7 டன் மாம்பழம், குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அடுத்த மேட்டுப்பட்டி தாதனுாரில், ரசாயன மாம்பழங்கள் விற்பதாக புகார் எழுந்தது. உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் அதிகாரிகள், ஒரு குடோனில் நேற்று சோதனை செய்தனர். அதில் ரசாயன தெளிப்பான் மூலம், மாம்பழம் பழுக்க வைத்திருப்பது கண்டுபிடித்தனர்.

மொத்தம், 1.7 டன் கிலோ பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 7 லிட்டர் ரசாயன திரவமும் சிக்கியது.பறிமுதல் பழங்கள், ரசாயனம், குப்பைக்கிடங்கில் கொட்டி அழிக்கப் பட்டது. அதன் மதிப்பு, 1.40 லட்சம் ரூபாய். இது தொடர்பாக பழக்கடை உரிமையாளர் வெங்டேசன், 45, மீது, உணவு பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆந்திராவில் இருந்து தப்பிய 1000 கொரோனா நோயாளிகள்

வேலுார்:ஆந்திராவில் இருந்து தப்பிய, 1,000த்திற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளை பிடிக்க போலீசார் வேலுாரில் முகாமிட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம், சித்துார், கடப்பா, திருப்பதியில், மார்ச்சில் 9,123 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதில், 3,400 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த வாரம், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்கள் விபரத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அதில், 1,214 பேர் மாயமானதும், மொபைல், முகவரி போலியானதும் தெரிந்தது. அவர்களை பிடிக்க, ஆந்திர சுகாதார துறை சார்பில், 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. விசாரணையில், ஆந்திர மாநிலம், சித்துார், திருப்பதி, கடப்பாவை சேர்ந்தவர்கள், தங்கள் பெண்களை, வேலுார், ஆம்பூரில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

இதனால், தங்கள் கணவர், குழந்தைகளோடு அடிக்கடி ஆந்திராவுக்கு பெற்றோர் வீட்டுக்கு சென்று வந்தபோது, கொரோனா பாதித்து, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். சிகிச்சையில் திருப்தி இல்லாததால், அங்கிருந்து தப்பி, வேலுார் சென்றுள்ளனர்.ஆந்திராவில் இருந்து வேலுாரில், பெண் கொடுத்தவர்கள் விபரத்தை வைத்து, தலைமறைவான கொரோனா நோயாளிகளை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.


உலக நிகழ்வுகள்

இந்திய வம்சாவளி சகோதரர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை
லண்டன்: பிரிட்டன் நீதிமன்றம், இந்திய வம்சாவளி சகோதரர்கள் மூவருக்கு, கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து, நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.

ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனின் ஆக்டன் பகுதியைச் சேர்ந்தவர், ஒஸ்வால்டோ டி. கார்வால்ஹோ, 22. அதே பகுதியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமல் சோஹல், 23, குடும்பத்தினருக்கும், ஒஸ்வால்டோவுக்கும் முன்பகை இருந்து வந்தது.இதனால் ஆத்திரம்அடைந்த கமல் சோஹல் மற்றும் அவரது சகோதரர்கள் சுக்மிந்தர் சோஹல், 25.மைக்கேல் சோஹல், 28, அவர்களது நண்பர் அன்டோயின் ஜார்ஜ், 24, ஆகியோர், 2019ல், ஒஸ்வால்டோவை கொலை செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை, தெற்கு லண்டனில் உள்ள குரோய்டன் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிவில், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானது. இதையடுத்து, சகோதரர்கள் மூவருக்கும், நேற்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.இதற்கான உத்தரவில், கமல் சோஹல், 22 ஆண்டுகளும், அவரது சகோதரர்கள் இருவரும், தலா, 19 ஆண்டுகளும், சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என, கூறப்பட்டு உள்ளது.கொலைக்கு உதவியாக இருந்த, அவர்களது நண்பர் அன்டோயின் ஜார்ஜுக்கு, ஒன்பது ஆண்டு சிறை தண்டனை விதிக்கப் பட்டது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X