சென்னை: முதன்முறையாக சட்டசபை பொதுத்தேர்தலில் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, வெறும் ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்.,6ம் தேதி நடைபெற்ற சட்டசபை பொதுத்தேர்தலில், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நடிகர் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, தினகரன் தலைமையில் அமமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி என ஐந்து முனையாக போட்டியிட்டனர். இதற்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (மே 2) காலை முதல் நடைபெற்று வருகிறது. தற்போது வரையில் திமுக கூட்டணி 159 இடங்களிலும், அதிமுக கூட்டணி 74 இடங்களிலும், மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.

தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிருத்திய கமல், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து முதன்முறையாக சட்டசபை பொதுத்தேர்தலை சந்தித்தார். இதில், கோவை தெற்கு தொகுதியில் கமல் போட்டியிட்டார். தற்போதுள்ள முன்னணி நிலவரங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி, கமல் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியை தவிர்த்து அனைத்து இடங்களிலும் மோசமான நிலையில் உள்ளது. சில இடங்களில் திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு அடுத்தப்படியாக 3வது இடமும், சில இடங்களில் நாம் தமிழர் கட்சிக்கு அடுத்ததாக 4வது இடத்திலும், இன்னும் ஒருசில இடங்களில் அமமுக.,விற்கும் கீழாக 5வது இடத்தில் சுயேட்சைகள் மற்றும் நோட்டா ஆகியவற்றுடன் போட்டிப்போட்டுக்கொண்டிருக்கின்றன.
கோவை தெற்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரசும், அதிமுக கூட்டணி சார்பில் பா.ஜ.,வும் போட்டியிடுவதாலும், நடிகர் என்ற செல்வாக்காலும் அவருக்கு மக்கள் ஓட்டளித்திருக்கலாம். தன் முதல் தேர்தலிலேயே கட்சி இந்தளவிற்கு பரிதாப நிலையில் சென்றாலும், தன்னுடைய வெற்றி மட்டுமே கமலுக்கு ஆறுதலாக இருக்கும். தேமுதிக தலைவர் விஜயகாந்தும் முதல் தேர்தலில் தான் மட்டும் வெற்றிப்பெற்றாலும், அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்துக்கு உயர்ந்தார். அதேபோல் கமல்ஹாசன் தன் கட்சியை உயர்த்துவாரா அல்லது அடுத்தடுத்த தேர்தல்களில் காணாமல் போவாரா என்பதற்கு இனிவரும் காலம் தான் பதில் சொல்லும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE