மீண்டும் மம்தா ஆட்சி பா.ஜ.,வின் சவாலை முறியடித்து ஹாட்ரிக்| Dinamalar

மீண்டும் மம்தா ஆட்சி பா.ஜ.,வின் சவாலை முறியடித்து 'ஹாட்ரிக்'

Added : மே 03, 2021 | கருத்துகள் (1)
Share
கோல்கட்டா:பா.ஜ.,வின் கடும் போட்டியை முறியடித்து, மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி, 66, தலைமையிலான, திரிணமுல் காங்., தொடர்ந்து, மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து, 'ஹாட்ரிக்' அடித்துள்ளது.மேற்கு வங்கத்தில் உள்ள, 294 தொகுதிகளுக்கு, எட்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில், வேட்பாளர்கள் உயிரிழந்ததால், இரண்டு தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கவில்லை.மற்ற, 292
 மீண்டும் மம்தா ஆட்சி பா.ஜ.,வின் சவாலை முறியடித்து 'ஹாட்ரிக்'

கோல்கட்டா:பா.ஜ.,வின் கடும் போட்டியை முறியடித்து, மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி, 66, தலைமையிலான, திரிணமுல் காங்., தொடர்ந்து, மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து, 'ஹாட்ரிக்' அடித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள, 294 தொகுதிகளுக்கு, எட்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில், வேட்பாளர்கள் உயிரிழந்ததால், இரண்டு தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கவில்லை.மற்ற, 292 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. அனைத்து கட்ட ஓட்டுப் பதிவின்போதும் வன்முறையை சந்தித்த நிலையில், மாநிலத்தில் ஓட்டு எண்ணிக்கை அமைதியாக நடந்தது.

துவக்கம் முதலே, திரிணமுல் காங்., முன்னிலையில் இருந்தது. அதே நேரத்தில், பா.ஜ.,வும் பல தொகுதிகளில் முன்னிலை பெற்று, கடும் போட்டியை கொடுத்தது.முதல் சில கட்டங்களில், இரு கட்சிகளும் சம நிலையில் இருந்தன. அதன்பின், திரிணமுல் காங்.,கின் முன்னிலை தொடர்ந்து அதிகரித்தது.பெரும்பான்மைக்கு, 148 இடங்கள் தேவை என்ற நிலையில், 202 இடங்களில், திரிணமுல் காங்., அமோக வெற்றி பெற்றது.

கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், 211 தொகுதிகளில் திரிணமுல் வென்றிருந்தது.கடந்த சட்டசபை தேர்தலில், மூன்று இடங்களில் மட்டுமே வென்ற, பா.ஜ., இந்த தேர்தலில், 81 இடங்களை கைப்பற்றி, மாற்று சக்தியாக உருவெடுத்து உள்ளது.சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே, திரிணமுல் காங்.,கில் இருந்து, பல மூத்த தலைவர்கள் விலகி, பா.ஜ.,வில் இணைந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., முன்னாள் தலைவருமான அமித் ஷா, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சர்கள் பலரும், இங்கு பிரசாரம் செய்தனர்.இந்த தேர்தலில் வென்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக, திரிணமுல் காங்., ஆட்சி அமைத்தாலும், அதிக தொகுதிகளில் பா.ஜ., வென்றுள்ளது, முக்கிய அரசியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து, 34 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த, தங்கள் கோட்டை என்று கூறி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்த முறை கோட்டை விட்டது. கடந்த தேர்தலில், 26 இடங்களில் வென்ற மார்க்சிஸ்ட், தற்போது ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதேபோல் அதனுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்.,கும், ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. கடந்த தேர்தலில், காங்., 44 தொகுதிகளில் வென்றிருந்தது.

பா.ஜ.,வின் கடும் சவாலுக்கு இடையே, மிகப் பெரிய வெற்றியை பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் திரிணமுல் காங்கிரசுக்கு, பல்வேறு கட்சிகள் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து உள்ளன. பா.ஜ.,வின் தேசிய பொதுச் செயலர் கைலாஷ் விஜயவர்கியாவும், 'திரிணமுல் வென்றதற்கு மம்தா மட்டுமே காரணம்' என, வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்த தேர்தலில், திரிண முல் காங்.,குக்கு, 48.3 சதவீத ஓட்டுகளும்; பா.ஜ., வுக்கு, 38.7 சதவீத ஓட்டுகளும் கிடைத்துஉள்ளன.


மம்தா தோல்விகடந்த, 2011ல், பவானிபுர் தொகுதியில் இருந்து முதல் முறையாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்க பட்ட மம்தா பானர்ஜி, 2016ல், அதே தொகுதியில், 25 ஆயிரத்து, 301 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.இந்த தேர்தலின்போது, திரிணமுல் காங்.,கில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்த, மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி, தன் தொகுதியான நந்திகிராமில், தன்னை எதிர்த்து போட்டியிடும்படி, மம்தாவுக்கு சவால் விடுத்தார்.

ஐந்து மாநில தேர்தல் முடிவுகளை விட, இந்த தொகுதிக்கான முடிவு, நாடு முழுதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.துவக்கத்தில் இருந்தே, பா.ஜ., சார்பில் போட்டியிட்ட அதிகாரி, இங்கு முன்னிலையில் இருந்தார். மாலையில், கடைசி சுற்றில் தான், மம்தா முன்னிலை பெற்றார். இந்த தொகுதியில், மம்தா வென்றதாக, பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், 8,700 ஓட்டுகள் வித்தியாசத்தில், மம்தா பின்னடைவில் உள்ளதாக, தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. இறுதியில், 1,736 ஓட்டு வித்தியாசத்தில் மம்தா தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இது குறித்து மம்தா கூறுகையில், ''நந்திகிராமில், தோல்வியை ஏற்கிறேன். ஆனால், இதில் சதி நடந்துள்ளது. இதை எதிர்த்து, கோர்ட்டுக்குச் செல்வேன்,'' என்றார்.இதற்கிடையே, இன்று கவர்னரை சந்தித்து, ஆட்சி அமைக்க, மம்தா பானர்ஜி உரிமைகோர உள்ளதாக தகவல் வெளியானது.'மேற்கு வங்கத்துக்கான வெற்றி'தேர்தல் பிரசாரத்தின்போது, மார்ச், 10ம் தேதி நந்திகிராமில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு மம்தா சென்றார். அப்போது தாக்கப்பட்டதாகவும், காலில் காயமேற்பட்டதாகவும் அவர் கூறினார்.

அதன்பின், காலில் கட்டுப் போட்டு, 'வீல்சேரில்' இருந்தபடியே, பிரசாரத்தில் ஈடுபட்டார்.நேற்று தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், காலில் கட்டு இல்லாமல், வீல்சேர் உதவி இல்லாமல், தன் வீட்டுக்கு வெளியே காத்திருந்த தொண்டர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவை, மேற்கு வங்கம் காப்பாற்றியுள்ளது. இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி.இரட்டை இன்ஜின் என்று கூறி, பா.ஜ., பொய் பிரசாரத்தில் ஈடுபட்டது. அப்போதே, இரட்டை சதம் அடிப்பேன் என்று நான் கூறினேன்.இது, மேற்கு வங்கத்துக்கு கிடைத்துள்ள வெற்றி. இது உங்களுக்கு கிடைத்துள்ள வெற்றி.

மேற்கு வங்கத்தின் கலாசாரம், பாரம்பரியம் பாதுகாக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்துவதே நம்முடைய முக்கிய பணி. இவ்வாறு அவர் கூறினார்.


'தாக்கத்தை ஏற்படுத்தும்'பா.ஜ.,வில் ஏற்பட்ட அதிருப்தியால், அதில் இருந்து விலகிய, முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, திரிணமுல் காங்.,கில் இணைந்தார். கட்சியின் துணைத் தலைவரான, அவர் கூறியதாவது:இந்த தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

கட்சி பொறுப்புகளில் இருந்து, தேசிய பொதுச் செயலர் கைலாஷ் விஜயவர்கியா, மாநில தலைவர் திலீப் கோஷ் விலக வேண்டும்.இந்த தேர்தல் முடிவு, உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் மற்றும் 2024ல் நடக்கும் லோக்சபா தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மத்தியில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர். அதை புரிந்து, நரேந்திர மோடி, அமித் ஷா பதவி விலக வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X