காங்., ஆட்சியை பறி கொடுத்தது ஏன்? புதுச்சேரியில் கட்சியினர் மனக்குமுறல்| Dinamalar

காங்., ஆட்சியை பறி கொடுத்தது ஏன்? புதுச்சேரியில் கட்சியினர் மனக்குமுறல்

Added : மே 03, 2021
Share
புதுச்சேரி:புதுச்சேரி காங்., கட்சி ஆட்சியை பறிகொடுத்ததற்கான முழு காரணம் தெரிய வந்து உள்ளது.புதுச்சேரி மாநிலத்தில், 1964, 1985, 1991, 2001, 2006, 2016 என ஆறு முறை காங்., ஆட்சி புரிந்தது. இம்முறை, 15வது சட்டசபை தேர்தலில், தோல்வியை சந்தித்து, ஆட்சியை பறி கொடுத்துள்ளது.நாராயணசாமி தலைமையிலான காங்., அரசு, ஆட்சிக் காலம் முடிவதற்குள்ளாக கவிழ்ந்த நிலையில், புதுச்சேரியில் ஆட்சியை பிடிக்க, பா.ஜ., தீவிரம்

புதுச்சேரி:புதுச்சேரி காங்., கட்சி ஆட்சியை பறிகொடுத்ததற்கான முழு காரணம் தெரிய வந்து உள்ளது.புதுச்சேரி மாநிலத்தில், 1964, 1985, 1991, 2001, 2006, 2016 என ஆறு முறை காங்., ஆட்சி புரிந்தது. இம்முறை, 15வது சட்டசபை தேர்தலில், தோல்வியை சந்தித்து, ஆட்சியை பறி கொடுத்துள்ளது.

நாராயணசாமி தலைமையிலான காங்., அரசு, ஆட்சிக் காலம் முடிவதற்குள்ளாக கவிழ்ந்த நிலையில், புதுச்சேரியில் ஆட்சியை பிடிக்க, பா.ஜ., தீவிரம் காட்டியது. இதற்காக, அ.தி.மு.க., - என்.ஆர்.காங்., கட்சிகளுடன் வலுவான கூட்டணியை அமைத்தது. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் அனைத்துமே புதுச்சேரியில் என்.ஆர்.காங்.,- பா.ஜ., கூட்டணி 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டது.

அப்படி இருந்தும், காங்., - தி.மு.க., கூட்டணியில் வெற்றிக்கான தேர்தல் வியூகம் . தேர்தலுக்கு முன்பாக தோல்வி என்ற மனநிலைக்கு காங்., வந்து விட்டது. 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்., கட்சி, 21 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் இந்த முறை, ஆறு தொகுதிகளை குறைத்து, 15 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது.

இது, தேர்தலுக்கு முன்பாகவே தோல்வியை ஒப்புக்கொள்ளும் அளவிற்கு வந்துவிட்டது. ஒவ்வொரு சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, காங்., கரைந்து வருவது வாடிக்கையாகி விட்டது.இந்த முறையும் காங்., - எம்.எல்.ஏ.,க்களையும் தக்க வைக்கவில்லை.அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், தீப்பாய்ந்தான், லட்சுமி நாராயணன் என வரிசையாக அடுத்தடுத்து ராஜினாமா செய்து, பிற கட்சியில் இணைந்து விட்டனர்.

அந்த தொகுதியில், குறுகிய நாட்களில், வேறு வேட்பாளர்களை தேட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.பல தொகுதிகளில் கூண்டோடு கட்சி நிர்வாகிகளும் ராஜினாமா செய்தனர். அந்த தொகுதிகளுக்கு வேட்பாளர் இல்லாத நிலையில், கூட்டணி கட்சிக்கு தொகுதியை ஒதுக்க வேண்டியதாகி விட்டது. புதுச்சேரியில் காங்.,- - தி.மு.க., கூட்டணி ஆட்சி நடந்தாலும், அவ்வப்போது ஆளும் காங்., அரசை வெளிப்படையாக தி.மு.க., நிர்வாகிகள் விமர்சித்தனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக காங்., நடத்திய போராட்டத்தை, கூட்டணிக் கட்சியான தி.மு.க., புறக்கணித்ததுடன், தனியாக திருக்கனுாரில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியது. சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில், தி.மு.க-.,வின் இந்தப் புறக்கணிப்பு, காங்.,கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது.

கசப்புகளை மறந்து மீண்டும் காங்., - தி.மு.க., கூட்டணி போட்டியிட்டாலும், அடிமட்டத்தில் இரண்டு கட்சி தொண்டர்களும் இணைந்து பணியாற்றவில்லை. புதுச்சேரி மாநில கவர்னராக கிரண்பேடி பொறுப்பேற்றது முதல் அவருக்கும், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும் இடையே பனிப்போர் நிலவியது.புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் அரசால் கொண்டு வரப்படும் அனைத்து திட்டங்களுக்கும் கவர்னர் ஒப்புதல் தர வேண்டும்.

ஆனால், கவர்னர் கிரண்பேடி, அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்த அனுமதி தரவில்லை என்று முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டி வந்தார். கவர்னர் - ஆட்சியாளர் மோதலால், மாநிலத்தில் இலவச அரிசி, தீபாவளி பொருட்கள், பொங்கல் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை வழங்க முடியவில்லை.முதியோர் உதவித்தொகை கூட உயர்த்தி தர முடியவில்லை. அரசு ஊழியர்களுக்கு, பல மாதமாக சம்பளம் போடவில்லை.

இதனால், மாநிலம் முழுதும் ஆளும் கட்சி மீது கடும் அதிருப்தி ஏற்பட்டது. கவர்னர் தான் எல்லாவற்றையும் தடுத்தார் என்ற குற்றச்சாட்டை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.கடந்த நான்கரை ஆண்டுகள் ஆட்சி பொறுப்பை காங்., கட்சியிடம் வழங்கிய போதும், மக்கள் நலத்திட்டங்களை செய்ய முடியவில்லை.

மத்தியில் இன்னும், 3.5 ஆண்டுகள் பா.ஜ., ஆட்சி உள்ளது. அப்படி இருக்கும் போது, வெற்றி பெற்றால் கூட மாநில வளர்ச்சி என்ன நடந்துவிட போகிறது என்று மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருக்கும் வகையில், என்.ஆர்.காங்., - பா.ஜ.,கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பளித்து இந்த முறை ஓட்டு போட்டுள்ளனர்.கட்சி தொண்டர்கள் சிலர் கூறியதாவது:

கட்சிக்காக உழைப்பவர்களுக்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதில்லை. கடைசி நேரத்தில் வரும் வியாபாரிகளுக்கு தான் சீட் கொடுத்தனர்.அதற்கான விலையை தான், இந்த தேர்தலில் காங்., கட்சி கொடுத்துள்ளது.அவர்கள், கடைசி நேரம் வரை, காங்., கட்சியில் பதவி சுகத்தை அனுபவித்து, பிற கட்சிகளுக்கு ஓடிவிட்டனர். இப்போது, காங்., கூட்டணியை எதிர்த்தே வெற்றி பெற்றுள்ளனர். இதில் இருந்து பாடம் கற்காவிட்டால், படுபாதாளத்திற்கு காங்., கட்சி போய் விடும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


6 சுயேச்சைகள் வெற்றி

புதுச்சேரியில் பிரதான கட்சிகளில் சீட் கிடைக்காத அதிருப்தியாளர்கள் பலர், சுயேச்சையாக களம் இறங்கினர். அந்தந்த பகுதிகளில் செல்வாக்கு உள்ள பிரமுகர்களும் சுயேச்சையாக களம் இறங்கினர். தேர்தல் முடிவுகள் அறிவித்த நிலையில், திருபுவனை தொகுதியில் அங்காளன், முத்தியால்பேட்டையில் பிரகாஷ்குமார், உருளையன்பேட்டையில் நேரு, ஏனாமில் கொல்லப்பள்ளி சீனிவாசன், திருநள்ளாறு தொகுதியில் பி.ஆர். சிவா, உழவர்கரை தொகுதியில் சிவசங்கரன் என ஆறு சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.

இதில், ஏனாம் கொல்லப்பள்ளி சீனிவாசனை தவிர்த்து, அனைவருமே என்.ஆர்.காங்., ஆதரவாளர்கள். கடந்த, 1964ல் நடந்த சட்டசபை தேர்தலில், 39 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் ஐந்து பேர் வெற்றி பெற்றனர்.அதன்பின், 1977, 1991, 2006 ஆண்டுகளில் அதிகபட்சமாக தலா, மூன்று சுயேச்சைகள் வெற்றி பெற்றனர். தற்போது, 57 ஆண்டுகளுக்கு பின், அதிகபட்சமாக, ஆறு சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X