4 பேருக்கு துணை முதல்வர் பதவி ஸ்டாலினுக்கு சிவகாமி வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

4 பேருக்கு துணை முதல்வர் பதவி ஸ்டாலினுக்கு சிவகாமி வலியுறுத்தல்

Added : மே 03, 2021
Share
சென்னை:''தமிழகத்தில் நான்கு பேருக்கு, துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும்,'' என, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், சமூக சமத்துவ படை தலைவருமான சிவகாமி வலியுறுத்தி உள்ளார்.சென்னையில், அவர் அளித்த பேட்டி:சட்டசபை தேர்தலில், அமோக வெற்றி பெற்ற தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். அவருக்கு, பட்டியலின பெண்கள் சார்பில், எங்களின் கோரிக்கைகளை முன்வைக்கிறோம். ஆந்திர முதல்வர்

சென்னை:''தமிழகத்தில் நான்கு பேருக்கு, துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும்,'' என, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், சமூக சமத்துவ படை தலைவருமான சிவகாமி வலியுறுத்தி உள்ளார்.

சென்னையில், அவர் அளித்த பேட்டி:

சட்டசபை தேர்தலில், அமோக வெற்றி பெற்ற தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். அவருக்கு, பட்டியலின பெண்கள் சார்பில், எங்களின் கோரிக்கைகளை முன்வைக்கிறோம். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, நான்கு துணை முதல்வர்களை உருவாக்கியது போல, தமிழகத்திலும் நான்கு துணை முதல்வர்களை நியமிக்க வேண்டும்.


தனி சட்டம்

அவர்களில் பட்டியலினத்தவர், சிறுபான்மையினர், பெண் ஆகியோர் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். பட்டியலின மக்களின் விகிதாச்சார அடிப்படையில், ஐந்து பேருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்.சிறப்புக்கூறு நிதி மற்றும் பழங்குடியினர் நிதியை முறையாக செலவு செய்யும் வகையில், தனி சட்டத்தை உருவாக்க வேண்டும். தமிழகத்தில், எஸ்.சி., - எஸ்.டி., ஆணையத்தை உருவாக்க வேண்டும். ஏழைகளுக்கு, 2 ஏக்கர் நிலம் என்ற திட்டத்தை, மறுபடியும் செயல்படுத்த வேண்டும்.

பஞ்சமி நிலத்தை மீட்க புதிய சட்டம் உருவாக்க வேண்டும். பஞ்சமி நில மீட்பு ஆணையத்தை, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்க வேண்டும்.வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் அமலாக்கத்தை, ஒவ்வொரு ஆண்டும், முதல்வரே நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும், அரசு கல்லுாரிகளையும், இலவச விடுதிகளையும் உருவாக்கி, பட்டியலின மாணவர்களின் உயர்கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும். மத்திய அரசின், 'அனைவருக்கும் வீடு' திட்டத்தை, ஆண்டுதோறும் செயல்படுத்த, தேவையான நிலத்தை ஆர்ஜிதம் செய்ய வேண்டும்.

கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை பெருக்க, மகளிர் சுய உதவி குழுக்களின் வாயிலாக, விவசாய நிலம் வழங்க வேண்டும். அரசு நிதியில், 33 சதவிகிதத்தை மகளிருக்காக ஒதுக்கி, திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.


நிதியுதவி

போட்டி தேர்வுகளில், மகளிர் வெற்றிபெறும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும், அரசு பயிற்சி மையங்களை உருவாக்க வேண்டும். மாவட்டத்துக்கு, 50 பேர் வீதம், ஒவ்வொரு ஆண்டும், தொழில் வல்லுனராக்கும் பயிற்சியும், நிதியும் அளிக்க வேண்டும்.

அதேபோல, அனைத்து கிராமங்களிலும், மகளிர் தொழில் கூடம், முதியோர் மருத்துவமனை, விளையாட்டு மைதானத்தை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், மாவட்டம்தோறும் தலா, 50 பெண்களுக்கு தொழில் வல்லுனராக பயிற்சியும், நிதியுதவியும் அளிக்க வேண்டும். இவ்வாறு, சிவகாமி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X