மறக்க மனம் கூடுதில்லையே! மாளாத கவலையில் மய்யம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மறக்க மனம் கூடுதில்லையே! மாளாத கவலையில் 'மய்யம்'

Added : மே 04, 2021
Share
கோவை:கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், எதிர்பாராத விதமாக, தோல்வியை தழுவினார். இதற்கான காரணங்கள், பலவிதமாக பேசப்படுகின்றன.கோவை தெற்கு தொகுதியில், பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், காங்., மாநில நிர்வாகி மயூரா ஜெயகுமார், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் உள்ளிட்ட, 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.இரு தேசிய கட்சி வேட்பாளர்களுக்கும்

கோவை:கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், எதிர்பாராத விதமாக, தோல்வியை தழுவினார். இதற்கான காரணங்கள், பலவிதமாக பேசப்படுகின்றன.

கோவை தெற்கு தொகுதியில், பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், காங்., மாநில நிர்வாகி மயூரா ஜெயகுமார், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் உள்ளிட்ட, 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.இரு தேசிய கட்சி வேட்பாளர்களுக்கும் எதிராக, கமல் களமிறங்கியதால், அனைவரது கவனமும் அவர் மீது திரும்பியது. நாத்திகவாதி என்ற முத்திரையை அழிக்க, ஆதீனங்களிடம் ஆசி பெற்றார்.

இஸ்லாமிய சமுதாய பெரியோர், கிறிஸ்துவ பிரமுகர்களை நேரில் சந்தித்தார். பல தரப்பட்ட மக்களையும் நேரில் பார்த்து பேசினார். அவரது அணுகுமுறை, கோவை மக்களை வெகுவாக கவர்ந்தது. அது மட்டுமே தேர்தலில் வெற்றியை தேடித்தராது என்பதை, இப்போது, மய்யம் கட்சியினர் உணர்ந்திருக்கின்றனர். ஏனெனில், 51, ஆயிரத்து, 481 ஓட்டுகள் பெற்று, கமல் இரண்டாமிடம் பெற்றிருந்தாலும், இது, கமலுக்கான ஓட்டு வங்கி அல்ல.

அ.தி.மு.க., - தி.மு.க., அதிருப்தி ஓட்டுகள், பா.ஜ., வேட்பாளரை விரும்பாதவர்கள் ஓட்டுகள், கமல் மீதான ஈர்ப்பு ஓட்டுகள், நடுநிலை, இளம் வாக்காளர்கள் ஓட்டுகள் என, பலவகை ஓட்டுகளும் இணைந்திருக்கின்றன. கட்டமைப்புகமல் கட்சிக்கு, வார்டு அளவில், 'பூத்' வாரியாக கமிட்டி, உட்கட்டமைப்பு இல்லை. முக்கிய நிர்வாகிகள் மட்டுமே இருக்கின்றனர். அலுவலகங்கள் கூட இல்லை.

'கார்ப்பரேட்' கம்பெனி போலவே, கட்சி நிர்வாகம் நடத்தப்படுகிறது. ஓட்டலில் தங்கியிருந்தே, தேர்தல் பணிகளை கவனித்தார். பா.ஜ., வேட்பாளரை, 'துக்கடா' என விமர்சித்ததை, கோவை மக்கள் பலரும் ரசிக்கவில்லை என்பதை, தேர்தல் முடிவு உணர்த்தியிருக்கிறது.

உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் வருகையின்போது எழுந்த சர்ச்சை, தேவையற்ற பதற்றத்தை உருவாக்கியது. அவசரப்பட்டு அதில், மூக்கை நுழைத்து, மற்றொரு சாரார் ஓட்டுகளை, கமல் இழப்பதற்கான வாய்ப்பை உருவாக்கி விட்டது.மய்யம் கட்சியினரிடம் பேசும்போது, 'கமல் மட்டும் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என எதிர்பார்த்தோம். எதனால் தோல்வி ஏற்பட்டது என அலசுவோம். ஆயினும், இந்த தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை' என்றனர்.

தன் எதிர்பார்ப்புக்கு ஏற்ற சரியான கட்டமைப்பு இல்லாததால், கட்சி துவங்காமலேயே, ரஜினி ஒதுங்கினார். இன்றைய யுகத்தில், சினிமா நடிகர் மீதான ஈர்ப்பு ஒன்றே வெற்றியை தேடித் தராது என்பதை, கமல் இப்போது உணர்ந்திருப்பார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X