வைக்கோல் விற்பனை விறுவிறு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வைக்கோல் விற்பனை விறுவிறு

Added : மே 04, 2021
Share
ஆனைமலை : ஆனைமலை ஒன்றிய பகுதிகளில் நெல் அறுவடைப்பணிகள் தீவிரமாக நடந்து வருவதால், வைக்கோல் விற்பனை அதிகரித்து, விலையும் உயர்ந்துள்ளது.ஆழியாறு அணையில் இருந்து, பழைய ஆயக்கட்டு பாசன திட்டத்துக்கு வழங்கப்படும் நீரை பயன்படுத்தி, இரண்டு போகத்தில் நெல் சாகுபடி நடக்கிறது. இரண்டாம் போகத்தில் விவசாயிகள், 1,200 ஏக்கரில், டிச., துவக்கத்தில் சன்ன ரகம் மற்றும் குண்டு ரக நெல் சாகுபடி

ஆனைமலை : ஆனைமலை ஒன்றிய பகுதிகளில் நெல் அறுவடைப்பணிகள் தீவிரமாக நடந்து வருவதால், வைக்கோல் விற்பனை அதிகரித்து, விலையும் உயர்ந்துள்ளது.

ஆழியாறு அணையில் இருந்து, பழைய ஆயக்கட்டு பாசன திட்டத்துக்கு வழங்கப்படும் நீரை பயன்படுத்தி, இரண்டு போகத்தில் நெல் சாகுபடி நடக்கிறது. இரண்டாம் போகத்தில் விவசாயிகள், 1,200 ஏக்கரில், டிச., துவக்கத்தில் சன்ன ரகம் மற்றும் குண்டு ரக நெல் சாகுபடி செய்தனர்.தற்போது, நெல் அறுவடை பருவத்தை அடைந்துள்ளதால், இந்த மாதம் துவக்கம் முதல், அறுவடைப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், போதிய மழையின்றி கால்நடை தீவனப்பயிர்கள் சாகுபடி குறைந்ததால், வைக்கோலுக்கான தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது.

ஆனைமலையில் கிடைக்கும் வைக்கோல், உள்ளூர் பகுதிகள் மட்டுமின்றி, பழநி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் பகுதிகளுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.விவசாயிகள் கூறியதாவது:கடந்தாண்டு ஒரு ஏக்கரில் கிடைத்த வைக்கோல், ஐந்தாயிரம் ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது, வைக்கோலுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதால், இந்தாண்டு விலை உயர்ந்துள்ளது.

தற்போது, 5,500 முதல் ஆறாயிரம் ரூபாய் வரையில் வைக்கோல் விற்பனையாகிறது. இம்மாத இறுதியில், தீவனத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இன்னும் விலை உயருமென எதிர்பார்க்கப்படுகிறது.பழநி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் நடப்பாண்டு மழை குறைந்து, நெல் சாகுபடி நடக்கவில்லை. மானாவாரி பயிர் சாகுபடியும் குறைந்துள்ளது. அப்பகுதிகளில் வைக்கோலுக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளதால், ஆனைமலை ஒன்றியத்தில் இருந்து விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X