தமிழ்நாடு

ஒட்டு மொத்தமாக அள்ளியது அ.தி.மு.க., ! மீண்டும் தங்கள் கோட்டையென நிரூபித்தது

Added : மே 04, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, உடுமலை மற்றும் மடத்துக்குளம் என, ஐந்து தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெற்று தனது செல்வாக்கை மீண்டும் நிரூபித்துள்ளது.பொள்ளாச்சி தொகுதியில், எட்டு பேர் போட்டியிட்டாலும் அ.தி.மு.க., வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன், தி.மு.க., வேட்பாளர் டாக்டர் வரதராஜன் இடையே கடும் போட்டி நிலவியது.அ.தி.மு.க., வேட்பாளர், 80,567 ஓட்டுக்களும்; தி.மு.க., வேட்பாளர், 78,842
ஒட்டு மொத்தமாக அள்ளியது அ.தி.மு.க., ! மீண்டும் தங்கள் கோட்டையென நிரூபித்தது

பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, உடுமலை மற்றும் மடத்துக்குளம் என, ஐந்து தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெற்று தனது செல்வாக்கை மீண்டும் நிரூபித்துள்ளது.

பொள்ளாச்சி தொகுதியில், எட்டு பேர் போட்டியிட்டாலும் அ.தி.மு.க., வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன், தி.மு.க., வேட்பாளர் டாக்டர் வரதராஜன் இடையே கடும் போட்டி நிலவியது.அ.தி.மு.க., வேட்பாளர், 80,567 ஓட்டுக்களும்; தி.மு.க., வேட்பாளர், 78,842 ஓட்டுக்களும் பெற்றனர். 7,549 ஓட்டுக்கள் பெற்று மூன்றாவது இடத்தை ம.நீ.ம.,பெற்றது.ஓட்டுக்களை பிரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட அ.ம.மு.க., 1,141 ஓட்டுக்களை மட்டும் பெற்று ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

வால்பாறை தொகுதியில், ஆறு பேர் களத்தில் இருந்தனர். அ.தி.மு.க., அமுல் கந்தசாமி, 71,672 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இ.கம்யூ., வேட்பாளர் ஆறுமுகம், 59,449 ஓட்டுக்கள் பெற்று தோல்வியடைந்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர், 7,632 ஓட்டுக்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றார்.

கிணத்துக்கடவு தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் வேட்பாளராக தாமோதரனும், தி.மு.க., சார்பில் பிரபாகரனும், இடையே கடும் போட்டி நிலவிய சூழலில், கடைசி சுற்றில் ஓட்டுகள் கிடைக்க அ.தி.மு.க., வெற்றி பெற்றது. அ.தி.மு.க., வேட்பாளர், 1,01,537 ஓட்டுக்கள் பெற்று, வெற்றி பெற்றார். தி.மு.க., வேட்பாளர் பிரபாகரன், 1,00,442 ஓட்டுக்கள் பெற்றார். ம.நீ.ம., வேட்பாளர் மூன்றாமிடம் பெற்றார்.

உடுமலையில் அ.தி.மு.க., வேட்பாளர் ராதாகிருஷ்ணன், காங்., வேட்பாளர் தென்னரசு போட்டியிட்டனர். தி.மு.க., கூட்டணியில் காங்., கட்சிக்கு இத்தொகுதி ஒதுக்கிய போதே அ.தி.மு.க., வேட்பாளர் வெற்றி உறுதி என, கட்சியினர் கொண்டாடினர்.தி.மு.க.,வினர் போதிய ஒத்துழைப்பு இல்லாததால், அதிக ஓட்டுகள் பெற்று அ.தி.மு.க., வெற்றி பெற்றது. அ.தி.மு.க., வேட்பாளர், 95,583 ஓட்டுக்கள், காங்., வேட்பாளர், 73,487 ஓட்டுக்கள் பெற்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர், 8,410 ஓட்டுக்கள் பெற்றார்.

மடத்துக்குளம் தொகுதியில், அ.தி.மு.க., - தி.மு.க., - அ.ம.மு.க., என மும்முனை போட்டி நிலவியது. மூன்று கட்சி வேட்பாளர்களும் பலத்தை காட்ட தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். கடந்த தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற்றார். இந்த முறை அ.தி.மு.க., வெற்றி பெற்று தொகுதியை தக்க வைத்துள்ளது.அ.தி.மு.க., வேட்பாளர் மகேந்திரன், 63,034 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க., ஜெயராமகிருஷ்ணன், 54,460 ஓட்டுக்கள் பெற்றார். அ.ம.மு.க., வேட்பாளர் சண்முகவேலு, 4,587 ஓட்டுக்கள் மட்டுமே பெற்று 3வது இடத்தை பிடித்தார்.

லோக்சபா தேர்தலில் தி.மு.க.,விடம் கோட்டை விட்ட அ.தி.மு.க., சட்டசபை தேர்தலில் வெற்றியை கட்டாயம் பெற வேண்டும் என, திட்டமிட்டது. அதற்கேற்ப கட்சியினர் ஒருங்கிணைந்து களப்பணியாற்றி, மீண்டும் அ.தி.மு.க.,வின் கோட்டை என நிரூபித்துள்ளனர்.

இந்த ஐந்து தொகுதிகளில், மூன்றில் அ.தி.மு.க., - தி.மு.க., நேருக்கு நேரும், உடுமலையில் காங்., உடனும், வால்பாறையில், இ.கம்யூ., உடன் மோதி வென்றதுள்ளது. தி.மு.க., வினரிடையே நிலவும் கோஷ்டி பூசல், தேர்தல் பணியில் சுணக்கம், விமர்சனங்களை மட்டும் வைத்து ஓட்டு சேகரித்தது போன்ற காரணங்கள், தி.மு.க.,வுக்கு சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது.

10வது முறை வெற்றி!

பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க.,வின் கோட்டையாக உள்ளது. இங்கு, காங்., கட்சி மூன்று முறையும், தி.மு.க., மூன்று முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த, 1977, 80, 84, 89 (அ.தி.மு.க., ஜெ.,), 91, 2001, 06, 11, 16, என அ.தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. பொள்ளாச்சியில், நான்கு முறை போட்டியிட்டு, மூன்று முறை பொள்ளாச்சி ஜெயராமன் வெற்றி பெற்றார். நடந்து முடிந்த தேர்தலில், ஐந்தாவது முறையாக பொள்ளாச்சி ஜெயராமன் போட்டியிட்டு, வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று, கிணத்துக்கடவு தொகுதியில், 2001 முதல், இதுவரை அ.தி.மு.க.,வே வெற்றி பெற்று வருகிறது. தற்போது வெற்றி பெற்றுள்ள தாமோதரன், நான்காவது முறையாக எம்.எல்.ஏ., ஆகிறார். உடுமலை தொகுதி, 2001 முதல் அ.தி.மு.க., வசமே உள்ளது. ராதாகிருஷ்ணன் 2வது முறையாக எம்.எல்.ஏ., ஆகிறார். பொள்ளாச்சி எம்.பி., யாக இருந்த மகேந்திரன், தற்போது, மடத்துக்குளத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

- நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X