சென்னை: தமிழகத்தில் தேர்தல் வந்து விட்டால், மேடை ஏறிவிட்டால், மைக் கையில் கிடைத்து விட்டால், பலருக்கு என்ன பேசுவது என்றே தெரிவதில்லை. முன்பெல்லாம் எங்கோ ஒரு மூலையில் பேசுகிற பேச்சு, அந்த எல்லைக்குள் மட்டுமே விளைவை ஏற்படுத்தும். இப்போது எல்லோர் கையிலும், 'ஆண்ட்ராய்டு' போன் இருப்பதால், தப்பித்தவறி நா பிறழ்ந்து ஒரு வார்த்தை தவறாகப் பேசினாலும், அது அடுத்த நிமிடமே, உலகின் எல்லா மூலையிலும் எதிரொலிக்க ஆரம்பித்து விடுகிறது.
பிரசாரத்தின்போது, தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் பேசிய பேச்சு, இப்படித்தான் அதிர்வுகளை ஏற்படுத்தியது. கொங்கு மண்டலத்தில் தி.மு.க., படுதோல்வி அடைந்ததற்குக் காரணம், தி.மு.க., எம்.பி., ஆ.ராசா பேசியதுதான் காரணமென்று இப்போதும் பேசப்படுகிறது. அவர் நேரடியாகத் தேர்தலில் நிற்காவிட்டாலும், அவர் பேசிய பேச்சு மற்றவர்களை தோல்வியடையச் செய்ததாக, தி.மு.க.,வினரே புலம்புகின்றனர்.
ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் டாக்டர் எழிலன் பேசிய பேச்சும், சமூக ஊடகங்களில் பரவி மிகக்கடுமையான எதிர்ப்பலையை உருவாக்கியது. அவர் தேர்தலில் நிறுத்தப்பட்டதும், இதுவே பிரசார ஆயுதமாகவும் பயன்படுத்தப்பட்டது. அவரை எதிர்த்து பா.ஜ., வேட்பாளராக குஷ்பு களமிறக்கப்பட்டார். அவரும் ஒரு காலத்தில் சர்ச்சைப் பேச்சில் கொடிகட்டிப் பறந்தவர்தான். இதனால் இருவரில் யார் ஜெயிப்பார் என்ற எதிர்பார்ப்பு பெரிதாக எழுந்தது. இதில் எழிலன், 32 ஆயிரத்து 200 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அரவக்குறிச்சியில் பா.ஜ.,வேட்பாளராக நிறுத்தப்பட்ட அண்ணாமலை, அந்தத் தொகுதியில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பள்ளபட்டி பகுதிக்குள் வரக்கூடாது என்று ஜமாத் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது பேசிய அண்ணாமலை, 'பள்ளபட்டி பாகிஸ்தானுக்குள் இல்லை. கண்டிப்பாக எங்கள் வாகனம் அங்கு போகும்' என்று எச்சரித்தார். அதன்பின் ஜமாத் அந்த அறிவிப்பை வாபஸ் பெற்றது.
அதேபோல, தி.மு.க.,வின் செந்தில் பாலாஜியை, துாக்கிப் போட்டு மிதிப்பேன் என்றார். இதனால் அண்ணாமலைக்கு ஆதரவு பெருகியதாகக் கருதப்பட்டது. ஆனால், அவர் 24 ஆயிரத்து 816 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தி.மு.க. ,வேட்பாளர் இளங்கோவிடம் தோற்றார்.பணப்பட்டுவாடா குறித்து ஆபாசமாகப் பேசிய கே.என்.நேரு, திருச்சி மேற்கு தொகுதியில் வெற்றி பெற்றார். சர்ச்சைப் பேச்சில் கொடிகட்டிப் பறந்த ராஜேந்திர பாலாஜி, ராஜபாளையம் தொகுதியில் தோல்வியடைந்தார்.
உளறிக் கொட்டுவதில் உச்சம் தொட்ட திண்டுக்கல் சீனிவாசன், செல்லுார் ராஜூ இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். சர்ச்சையாகவும், உளறலாகவும் பேசிய விஷயங்களையெல்லாம் தேர்தல் நாளில் மக்கள் மறந்து விட்டார்களா அல்லது மறக்காமல் தோற்கடித்தார்களா என்பதே பெரும் குழப்பமான கேள்வியாகவுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE