பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் தேர்தல் பிரசார பேச்சு...

Added : மே 04, 2021
Share
Advertisement
வீட்டு வராண்டாவில் அமர்ந்து, அன்றைய நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா.மார்க்கெட்டுக்குச் சென்றிருந்த மித்ரா, காய்கறியுடன் வீட்டுக்குள் நுழைந்ததும், ''என்னக்கா, ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு போயிருந்தீங்களே, ஸ்பெஷல் தகவல் வச்சிருப்பீங்களே,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.''அதான், 10 தொகுதியையும் இலைக்கட்சிக்காரங்களே சுளையா அள்ளிட்டாங்களே,''''ஆமாக்கா,

வீட்டு வராண்டாவில் அமர்ந்து, அன்றைய நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா.மார்க்கெட்டுக்குச் சென்றிருந்த மித்ரா, காய்கறியுடன் வீட்டுக்குள் நுழைந்ததும், ''என்னக்கா, ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு போயிருந்தீங்களே, ஸ்பெஷல் தகவல் வச்சிருப்பீங்களே,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.''அதான், 10 தொகுதியையும் இலைக்கட்சிக்காரங்களே சுளையா அள்ளிட்டாங்களே,''''ஆமாக்கா, பக்கத்துல இருக்கற, திருப்பூர் மாவட்டத்துல கூட, மூணு தொகுதியை கோட்டை விட்டுட்டாங்க. நம்ம மாவட்டத்துல, தி.மு.க., வசமிருந்த சிங்கை தொகுதியையும் தட்டிப் பறிச்சிட்டாங்களே,''''மித்து, நாலு அணிக்கு ஓட்டு பிரிஞ்சிருக்கு. அ.தி.மு.க., அதிருப்தி ஓட்டு, நடுநிலை, இளம் வாக்காளர்களது ஓட்டுகளை கமல் கட்சிக்காரங்களும், சீமான் கட்சிக்காரங்களும் வாங்கிட்டாங்க. அ.தி.மு.க., ஓட்டு வங்கியை சேதப்படுத்த நினைச்ச, அ.ம.மு.க., வேட்பாளர்களை, 'சைலன்ட் மோடுல' வச்சிட்டாங்க. அதுதான், கில்லாடித்தனம். தினகரன் கட்சி வேட்பாளர்கள் யாருமே அதிகமான ஓட்டு வாங்கலை; பெருசா பிரசாரமும் செய்யலை,''''ஓ... அப்படியா,'' என்ற சித்ரா, ''தி.மு.க., ஆளுங்கட்சி ஆயிடுச்சு. நம்ம மாவட்டத்துல மட்டும் இவ்ளோ தொகுதியை இலைக்கட்சி ஜெயிச்சு என்ன பிரயோஜனம். தி.மு.க.,வுக்கு பிரதிநிதித்துவமே இல்லாம போயிடுச்சே,''''இன்னொரு விஷயம்...தி.மு.க., ஆட்சிக்கு வந்தா, நம்ம ஊர் அமைச்சர் ஜெயிலுக்கு போறது உறுதின்னு, தேர்தல் பரப்புரைக்கு வந்திருந்த ஸ்டாலின் பேசியிருந்தாரு. அதுக்கான சூழலை உருவாக்காத அளவுக்கு, எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பத்தலாமான்னு பேசிக்கிட்டு இருக்காங்க,''''இலைக்கட்சியில நின்னு ஜெயிச்சவங்க, சென்னைக்கு கெளம்பிட்டாங்களாமே,''''இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., தலைமையில கூட்டம் நடக்கப் போகுதாம்,''''நள்ளிரவு வரைக்கும், இலைக்கட்சி வி.ஐ.பி., ஓட்டு எண்ணுற மையத்துல இருந்தாராமே,''''அதுவா, கிணத்துக்கடவு ரிசல்ட் சொல்றதுக்கு பிரச்னையாயிடுச்சு. ரெண்டு மெஷின் ரிப்பேர் ஆனதா, எலக்சன் அதிகாரிங்க சொன்னாங்க. அப்புறம், விவி பேட் இயந்திரத்துல இருந்த ரசீதை எடுத்து, ஒன்னொன்னா எண்ணி, முடிவு சொல்றதுக்கு, நைட், 2 மணியாகிடுச்சு,''''சூரிய கட்சிக்காரங்க ஏதாச்சும் செஞ்சிடக்கூடாதுன்னு, இலைக்கட்சி வி.ஐ.பி., அங்கேயே முகாம் போட்டுட்டாரு. மத்தவங்களும் அவரை சுத்தி உட்கார்ந்து, அரசியல்ல அடுத்த கட்ட 'மூவ்' பத்தி பேசிட்டு இருந்தாங்க,''''ஆனா, ரெண்டு தரப்பிலும் சந்தோஷம் இல்லையே,''''ஆமாக்கா, இலைக்கட்சிக்காரங்க, 10 தொகுதியை ஜெயிச்சிருக்காங்க; ஆனா, ஆட்சி கை நழுவி போயிடுச்சு. 10 வருஷத்துக்கு பிறகு, ஆட்சியை சூரிய கட்சி கைப்பத்தியிருக்கு; ஆனா, ஒரு தொகுதி கூட ஜெயிக்க முடியாம போயிடுச்சேன்னு, ரொம்பவும் 'அப்செட்'டுல இருக்காங்க,''''மாஜி எம்.எல்.ஏ., கார்த்திக் ரொம்பவே நொந்து போயிட்டாராமே,'' என கேட்டபடி, சமையலறைக்குள் நுழைந்தாள் சித்ரா.''ஜெயிச்சிட்டா, இந்த தடவை அமைச்சர் பதவி கிடைக்கும்னு, ரொம்பவும் நம்பிக்கையா இருந்தாரு. தெனமும் காலையிலும், நைட்டும் ஜி.சி.டி.,க்கு போயி, ஏஜன்ட்களை பார்த்து பேசிட்டு வந்தாரு. முடிவு இப்படியாகிடுச்சேன்னு, உடன்பிறப்புகள் வருத்தத்துல இருக்காங்க,''''சூரிய கட்சி தோல்விக்கு, கமல் கட்சிதான் காரணம்னு சொல்றாங்களே,''''அதுவும் ஒரு காரணம்னு சொல்லலாம். அஞ்சு தொகுதியில, குறைஞ்ச எண்ணிக்கையிலதான், அ.தி.மு.க., ஜெயிச்சிருக்கு. அ.தி.மு.க., அதிருப்தி ஓட்டு, கமல் கட்சிக்கு விழுந்திருக்கலாம்னு சொல்றாங்க,''இஞ்சி டீ, பக்கோடாகொடுத்த சித்ரா, ''கமல் ஜெயிச்சிடுவாருன்னு நெனைச்சேன்; கடைசியில, தோத்துட்டாரே,'' என, கவலைப்பட்டாள்.''ஆமா, கெம்பட்டி காலனி, உக்கடம், ராம்நகர், சாயிபாபா காலனின்னு சில முக்கியமான ஏரியாக்களை கமல் கண்டுக்காம விட்டுட்டாரு. இந்த இடங்கள்ல ஓட்டு வங்கி அதிகமா இருக்கு,''பக்கோடாவை சுவைத்த மித்ரா, ''இருந்தாலும், 1.87 லட்சம் ஓட்டு வாங்கியிருக்காங்களே,'' என்றாள்.''ஆமாப்பா, நீ சொல்றது உண்மைதான்! மேட்டுப்பாளையத்திலும் அவுங்க கட்சி வேட்பாளர் போட்டியிட்டிருந்தா, 2 லட்சம் ஓட்டை தாண்டியிருப்போம்னு, மய்ய கட்சிக்காரங்க சொல்றாங்க,'' என்றபடி, டீயை உறிஞ்சினாள் சித்ரா.''ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுனால, அதிகாரிகளும் மிரட்சியில இருக்காங்களாமே,''''மித்து, அதிகாரத்துல இருக்கற அதிகாரிங்க, இலைக்கட்சிக்காரங்க சிபாரிசுல பதவியில ஒட்டிக்கிட்டு இருக்காங்க. அவுங்க எப்படி சூரிய கட்சி ஆட்சிக்கு ஒத்தாசையா இருப்பாங்க. ஆட்சி அமைஞ்சதும் ஒவ்வொரு அதிகாரியா மாத்துவாங்கன்னு எதிர்பார்க்குறாங்க,''''இதுல, சூரிய கட்சி ஆதரவு அதிகாரிங்க, யாரை பார்த்தா, அதிகாரமிக்க பதவியை கைப்பத்தலாம்னு, பிளான் போட்டுட்டு இருக்காங்க. இன்னும் சில அதிகாரிங்க, நம்மூர்ல அந்தக்கட்சிக்கு பிரதிநிதி இல்லாததால, கவர்மென்ட் விழாக்களை எப்படி நடத்துறதுன்னு தெரியலையேன்னு, புலம்பிட்டு இருக்காங்க,''''ஏம்ப்பா, அரசு விழா நடத்துறதுல என்ன சிக்கல் வரப்போகுது,''''என்னக்கா, இப்படி கேட்டுட்டீங்க. பாலம் திறப்பு விழா, ஸ்மார்ட் சிட்டி குளம் திறப்பு விழா நடத்த, மக்கள் பிரதிநிதிகளை கூப்பிடனும். நம்மூர்ல எதிர்க்கட்சிக்காரங்க தானே ஜெயிச்சிருக்காங்க. தி.மு.க., ஆட்சியில, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை கூப்பிட்டு, சிறப்பு விருந்தினரா மேடை ஏத்தி, விழா நடத்துனா என்னாகும்னு, இப்பவே, மண்டைய போட்டு உடைச்சிட்டு இருக்காங்க,''அதற்கு மித்ரா, ''மேட்டுப்பாளையத்துல சூரிய கட்சிக்காரங்க சரியா வேலை பார்க்காததால, ஜெயிக்க முடியாம போயிடுச்சுன்னு சொல்றாங்களே, உண்மையா,'' என, கிளறினாள்.''அதுவா, அந்த தொகுதியில சுற்றுக்கு சுற்று ஓட்டு வித்தியாசம் மாறிக்கிட்டே வந்துச்சு. மதியம் வரைக்கும், தி.மு.க., வேட்பாளரே முன்னிலையில இருந்தாரு. மேட்டுப்பாளையம் சிட்டியில ஓட்டு குறைஞ்சிருக்கு. எம்.பி., எலக்சன்ல, அ.தி.மு.க., வேட்பாளரை விட, 9,000 ஓட்டு கூடுதலா கெடைச்சிருக்கு. இப்ப, 3,000 ஓட்டுதான் கெடைச்சிருக்காம். அதனால, கட்சி நிர்வாகிகளை களையெடுக்கணும்னு பேசிக்கிட்டு இருக்காங்க,'' என்ற சித்ரா, ''கார்ப்பரேசன் ஆபீசுக்கு போகணும் வர்றீயா,'' என, கேட்டாள்.''இதோ, வந்துட்டேன்,'' என்றபடி, முக கவசம், ஹெல்மெட் அணிந்து வந்த மித்ரா, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தபடி, ''ஜெயிச்ச பிறகுதான், மூன்றெழுத்து இனிசியல் இலைக்கட்சி பிரமுகர் நிம்மதி பெருமூச்சு விட்டாராமே,'' என, கொக்கி போட்டாள்.''அதுவா, நம்ம மாவட்டத்துல இருக்கற தொகுதிகள்ல அதுதான் ரொம்ப பெருசு; ஓட்டு எண்ணுற சுத்தும் ஜாஸ்தி. கருத்துக்கணிப்புல அ.தி.மு.க., தோத்துரும்னு சொன்னதுனால, ரொம்பவே 'அப்செட்'டுல இருந்தாரு. தோத்துட்டா, கட்சி பதவியையும் பறிச்சிடுவாங்களோன்னு பயந்துக்கிட்டு இருக்காங்க. ஆனா, சுற்றுக்கு சுற்று முன்னேறி, கெத்து காட்டிட்டாரு,''ஒசூர் ரோட்டில் வந்தபோது, தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுக்கான அலுவலகத்தை பார்த்த மித்ரா, ''வானதி ஜெயிப்பாங்கன்னு, தாமரை கட்சிக்காரங்க கூட எதிர்பார்க்கலையாமே,'' என கேட்டாள்.''ஆமா, மித்து! மத்த கட்சி மாதிரியே, அவுங்க கட்சியிலும் காலை வாரி விடுறதுக்கு நெறைய பேரு இருந்திருக்காங்க. நிறைய பிரமுகர்கள் ஒத்துழைக்கவும் செய்யலையாம். கடைசி நேரத்துல, இலைக்கட்சிக்காரங்க, தாங்கிப் பிடிச்சு, மலர வச்சிருக்காங்க,''''ஆமாக்கா, எம்.பி., எலக்சன்ல சி.பி.ஆர்., வாங்குனதை விட அதிகமான ஓட்டு வாங்கியிருக்காங்க. தபால் ஓட்டும் கமலை விட கூடுதலா பதிவாகியிருக்கு,'' என்ற மித்ரா, ''தேர்தல் நடத்துற அதிகாரியை, கடைசி நேரத்துல மாத்திட்டாங்களாமே,'' என, கேட்டாள்.''அது, தெற்கு இல்லை; தொண்டாமுத்துார் தொகுதி. கார்ப்பரேசன்ல வேலை பார்த்த, ஒரு அதிகாரியை, தேர்தல் அலுவலரா நியமிச்சிருந்தாங்க. அவரை மாத்தணும்னு, தி.மு.க., தரப்புல பல தடவை கம்ப்ளைன்ட் கொடுத்தாங்க,''''ஓட்டு எண்ணுற சமயத்துல, அவருக்கு உடல் நிலை சரியில்லைன்னு சொல்லி, சப்-கலெக்டர் அந்தஸ்துல வேறொரு அதிகாரியை நியமிச்சு, வேலையை கச்சிதமா முடிச்சிருக்காங்க. ஆனா, அவரும், கார்ப்பரேஷன்ல வேலைபார்த்த அதிகாரிதான்,''கலெக்டர் அலுவலகத்தை கடந்த மித்ரா, ''அதெல்லாம் இருக்கட்டும். செங்கல் சூளை விவகாரத்துல என்ன நடக்கப் போகுதுன்னு தெரியலையே,'' என, 'ரூட்' மாறினாள்.''ஆமா, மித்து! அது, சிக்கலான விஷயம். எலக்சன் பிரசாரத்துல, தி.மு.க., ஜெயிச்சா, சூளையை திறக்க அனுமதி கொடுப்போம்னு, ஸ்டாலின் பேசியிருக்காரு. இந்த விவகாரத்துல, கலெக்டர் நடவடிக்கை எடுக்கறதுக்கு, கோர்ட்டு உத்தரவு போட்டிருக்கு.அனுமதி இல்லாத, 148 சூளைகளை திறக்கக் கூடாது; செங்கற்களை எடுத்துட்டு போகக் கூடாதுன்னு கலெக்டரும், கடுமையா 'வார்னிங்' பண்ணி, அறிக்கை வெளியிட்டு இருக்காரு. தி.மு.க., அரசு அமைஞ்சதும் என்ன செய்றாங்கன்னு பார்ப்போம்,''டவுன்ஹாலை கடந்து, கார்ப்பரேஷன் ஆபீசுக்கு வந்து, ஸ்கூட்டரை ஓரங்கட்டிய மித்ரா, ''உச்ச அதிகாரியும், சூரிய கட்சிக்காரங்களும் நெருக்கமாமே,'' என, கொளுத்திப் போட்டாள்.''மித்து, சூரியக்கட்சியில இருக்கற முக்கிய நிர்வாகி, உச்ச அதிகாரிக்கு நெருக்கமான உறவு. அதனால, அவரை கை வைக்க மாட்டாங்கன்னு பேசிக்கிறாங்க. ஆனா, 'ஸ்மார்ட் சிட்டி' நிதி முறைகேடு விவகாரத்தை தோண்டுனா, எத்தனை அதிகாரிகளை துாக்குவாங்கன்னு தெரியலை,'' என்ற சித்ரா, மூலிகை உணவகத்தில் காத்திருந்த தோழியை பார்க்கச் சென்றாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X