தமிழ்நாடு

எட்டு தொகுதிகளில் எட்டப்பட்ட வெற்றி! போகும் பாதை சுலபமா... கடினமா?

Added : மே 04, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில், அ.தி.மு.க., ஐந்து இடங்களையும், தி.மு.க., மூன்று இடங்களையும் வென்றது. வெற்றி வேட்பாளர்கள் கடந்துவந்த பாதை, இதோ...திருப்பூர் வடக்குதிருப்பூர் வடக்கு தொகுதியில், இரண்டாவது முறையாக களமிறங்க வேண்டுமா என்ற எண்ணத்துடன், முதலில், அ.தி.மு.க., வேட்பாளராக மீண்டும் போட்டியிட்ட விஜயகுமார் இருந்ததாக கூறப்பட்டது.
 எட்டு தொகுதிகளில் எட்டப்பட்ட வெற்றி!  போகும் பாதை சுலபமா... கடினமா?

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில், அ.தி.மு.க., ஐந்து இடங்களையும், தி.மு.க., மூன்று இடங்களையும் வென்றது. வெற்றி வேட்பாளர்கள் கடந்துவந்த பாதை, இதோ...


திருப்பூர் வடக்கு

திருப்பூர் வடக்கு தொகுதியில், இரண்டாவது முறையாக களமிறங்க வேண்டுமா என்ற எண்ணத்துடன், முதலில், அ.தி.மு.க., வேட்பாளராக மீண்டும் போட்டியிட்ட விஜயகுமார் இருந்ததாக கூறப்பட்டது. மிண்டும் 'சீட்' பெற்ற விஜயகுமார், தன்னை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூ., வேட்பாளர் ரவியை, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தினார்; ஒவ்வொரு சுற்றிலும், முன்னேறினார். எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது தான் செய்த திட்டங்களை பட்டியலிட்ட இவர், குடிநீர் பிரச்னைக்கு தீர்வு உள்ளிட்ட எதிர்கால திட்டங்களையும் பிரசாரத்தின்போது முன்வைத்தார். இவரது மென்மையான அணுகுமுறை, சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளாதது போன்றவை, இவர் எளிதாக வெற்றி பெற்றதற்கு காரணம்.


திருப்பூர் தெற்கு


திருப்பூர் தெற்கு தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் செல்வராஜ் போட்டியிட்டார். மேயராக இருந்த இவரது கனவு, எம்.எல்.ஏ., ஆக வெற்றி பெறுவதாக இருந்தது. கடந்த முறை, போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த முறை, வெற்றி பெற அனைத்து வியூகங்களையும் செயல்படுத்தினார். கடந்த முறை வென்ற அ.தி.மு.க., வேட்பாளர் குணசேகரன், கடும் போட்டியாளராக திகழ்ந்தார். இழுபறிக்கிடையே, கடைசி சுற்றுகளில் முன்னேறி, செல்வராஜ், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டு வித்தியாசத்தில், வெற்றியை ஈட்டினார்.


பல்லடம்


கடந்த பார்லிமென்ட் தேர்தலில், திருப்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அ.தி.மு.க., வேட்பாளர் ஆனந்தன், பல்லடம் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் இருந்தது. திருப்பூர் தெற்கு, வடக்கு 'சீட்', 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், இவருக்கு பல்லடம் தொகுதியில் போட்டியிட வேண்டிய கட்டாயம். அதிருப்தியாளர்களுடன் சமாதானப்போக்கை கடைபிடித்தார். துவக்கத்தில், பிரசாரம் சுறுசுறுப்பாக அமையாவிட்டாலும், போகப்போக, வெற்றி வியூகங்களை செயல்படுத்தினார். ம.தி.மு.க., வேட்பாளர் முத்துரத்தினத்தை, துவக்கத்தில் இருந்தே பின்னுக்குத் தள்ளி, 22 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில், இலையை துளிர்க்க செய்தார், ஆனந்தன்.


அவிநாசி


ஆறு முறை சட்டசபை தேர்தலில் வென்ற மூத்த அரசியல்வாதி என்பதை நிரூபித்தார், அவிநாசி அ.தி.மு.க., வேட்பாளராக களம் கண்ட, தனபால்; ஆதி தமிழர் பேரவை வேட்பாளரை, அரை லட்சம் ஓட்டுகளுக்கு மேல் அதிகம் பெற்று, வென்று காட்டினார். அவிநாசி தொகுதி அ.தி.மு.க., கோட்டை என்பது வெற்றிக்கு முக்கிய காரணம் என்றாலும், தொகுதிக்கு இவர் மூலம், கிடைத்த நன்மைகளும், வாக்காளர் மத்தியில் பேசப்பட்டது.


காங்கயம்


அ.தி.மு.க.,வின் கோட்டையாக வர்ணிக்கப்பட்டு வந்த காங்கயத்தில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் சாமிநாதனுக்கு கிடைத்த வெற்றி குறிப்பிடக்கூடியது. தொகுதிக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர் என்பதோடு, அ.தி.மு.க.,வில் நிலவிய கோஷ்டிப்பூசல்களும், இவரது வெற்றிக்கு உதவியது. முதலில் இருந்தே, ஓட்டு எண்ணிக்கையில் முன்னேறி வந்த சாமிநாதன், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டு வித்தியாசத்தில், அ.தி.மு.க., வேட்பாளர் ராமலிங்கத்தை வென்று காட்டினார்.


தாராபுரம்

தாராபுரம் தி.மு.க., வேட்பாளர் கயல்விழி, முதலில் 10 சுற்றுகளுக்கு மேல், பின்தங்கியே இருந்தார். அதற்கு பின், பா.ஜ., வேட்பாளர் மாநில தலைவர் முருகனுக்கும், அவருக்கும் இடையே, ஓட்டு வித்தியாசம் இழுபறியாக இருந்தது. இறுதிச்சுற்று வரை பரபரப்பும், குழப்பமும் நீடித்தது. இறுதியில், முருகனை விட, ஆயிரம் ஓட்டுகளுக்கு மேல் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். முதன்முறை தேர்தலிலேயே, சாதித்திருக்கிறார், கயல்விழி.


உடுமலை


உடுமலை தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக, காங்., வேட்பாளர் தென்னரசு போட்டியிட்டார். வெற்றியை 21 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேல் அதிகம் பெற்று, எளிதாக தன்வசப்படுத்தினார், ராதாகிருஷ்ணன்


மடத்துக்குளம்


கடந்த தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணன் போட்டியிட்டார். மாவட்டத்தில், பிற தொகுதிகளில் தி.மு.க., தோற்றாலும், ஜெயராமகிருஷ்ணன் வென்றார். இந்த முறையும் 'சீட்' வழங்கப்பட்டது. இவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் எம்.பி., மகேந்திரன், 9 ஆயிரம் ஓட்டுக்களுக்கு மேல் அதிகம் பெற்று, மடத்துக்குளத்தில், மீண்டும் இலையை, துளிர்க்க செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X