முக்கிய பதவிகளை பிடிக்க ஐ.ஏ.எஸ்.,கள் இடையே போட்டி| Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

முக்கிய பதவிகளை பிடிக்க ஐ.ஏ.எஸ்.,கள் இடையே போட்டி

Updated : மே 05, 2021 | Added : மே 04, 2021 | கருத்துகள் (8)
Share
புதிய அரசு பொறுப்பேற்றதும், முக்கியமான பதவிகளை பெற, ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடையே, கடும் போட்டி நிலவுகிறது.தமிழகத்தில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. இவ்விரு கட்சிகளும் ஆட்சிக்கு வரும் போதெல்லாம், தங்களுக்கு வேண்டியவர்களை, முக்கிய பதவிகளில் நியமிப்பதை, வழக்கமாக வைத்துள்ளன.இதன் காரணமாக, அனைத்து
IAS, MK Stalin, TN govt, முக்கிய பதவிகள், ஐஏஎஸ், போட்டி

புதிய அரசு பொறுப்பேற்றதும், முக்கியமான பதவிகளை பெற, ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடையே, கடும் போட்டி நிலவுகிறது.

தமிழகத்தில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. இவ்விரு கட்சிகளும் ஆட்சிக்கு வரும் போதெல்லாம், தங்களுக்கு வேண்டியவர்களை, முக்கிய பதவிகளில் நியமிப்பதை, வழக்கமாக வைத்துள்ளன.இதன் காரணமாக, அனைத்து துறைகளிலும், அ.தி.மு.க., ஆதரவு அதிகாரிகள், தி.மு.க., ஆதரவு அதிகாரிகள் என, இரண்டு பிரிவினர் உருவாகி உள்ளனர்.


அதிகாரிகளின் ஆதிக்கம்


அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், அக்கட்சி ஆதரவு அதிகாரிகள், முக்கிய பதவிகளில் இடம் பெறுவர். தி.மு.க., ஆதரவு அதிகாரிகள், முக்கியத்துவம் இல்லாத பதவிகளுக்கு தள்ளப்படுவர். தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், நிலைமை தலைகீழாக மாறும்.இரு கட்சிகளும் சாராத, நேர்மையான அதிகாரிகள், முக்கிய பதவிகளில் நியமிக்கப்படுவது, அவ்வப்போது அதிசயமாக நிகழும். 10 ஆண்டுகளாக, அ.தி.மு.க., ஆட்சியில் இருந்ததால், அக்கட்சி ஆதரவு அதிகாரிகளின் ஆதிக்கம் கொடிகட்டி பறந்தது.

எந்த முக்கியத்துவமும் இல்லாத, 'டம்மி' பதவிகளிலும், வெளி மாவட்டங்களிலும் பணியில் இருந்தவர்கள், தி.மு.க., ஆட்சி எப்போது வரும் என்ற, எதிர்பார்ப்பில் இருந்தனர். அவர்கள் எதிர்பார்ப்பு, தற்போது நிறைவேறி உள்ளது. தேர்தல் முடிவுகள் வந்ததும், ஐ.ஏ.எஸ்., -- ஐ.பி.எஸ்., அதிகாரிகள், ஸ்டாலின் வீட்டிற்கு படையெடுத்து சென்று, பூங்கொத்து கொடுத்து, வாழ்த்து தெரிவித்தனர். முதல்வர் அலுவலகம், முக்கிய துறைகளின் செயலர் பதவியை பெற, பல்வேறு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், காய் நகர்த்தி வருகின்றனர்.


ஆட்டம் போட்டவர்கள்


அதேபோல, டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் என, முக்கிய பதவிகளுக்கு, ஐ.பி.எஸ்., அதிகாரிகள், முயற்சித்து வருகின்றனர்.முதல்வராக ஸ்டாலின், நாளை மறுதினம் பொறுப்பேற்க உள்ளார். புதிய அமைச்சரவை பொறுப்பேற்ற பின், அதிகாரிகள் மாற்றம் இருக்கும்.ஒவ்வொரு துறை பணியாளர்களும், தங்கள் துறைக்கு யார் அமைச்சராக வருவார், யார் செயலராக வருவார் என்ற, எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மற்ற துறைகளில், புதிய ஆட்சி பொறுப்பேற்ற பின் மாற்றம் இருக்கும் என்ற நிலையில், செய்தி மக்கள் தொடர்பு துறையில், தேர்தல் முடிவுகள் வெளியான நாளிலேயே மாற்றம் ஏற்பட்டது. முதல்வர் அலுவலகம் மற்றும் தலைமை செயலக செய்திப்பிரிவு அதிகாரிகள் அமைதி காக்க, தி.மு.க., ஆட்சியில் பணிக்கு வந்த, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள், ஸ்டாலின் தொடர்பான செய்திகளை, ஊடகங்களுக்கு அனுப்பும் பொறுப்பை ஏற்றனர்.

புதிய அரசு பொறுப்பேற்றதும், அனைத்து துறைகளிலும், அதிரடி மாற்றம் உறுதியாகி உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில், அதிகம் ஆட்டம் போட்டவர்கள் மட்டும் கலக்கத்தில் உள்ளனர்.

- நமது நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X