தமிழ்நாடு

அலசல்! தோல்விக்கான காரணம் குறித்து அ.தி.மு.க.,வினர்.. பா.ம.க., ஓட்டு முழுமையாக கிடைத்ததா என குழப்பம்

Added : மே 04, 2021
Share
Advertisement
விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி ஏழு இடங்களில் தோல்வியை தழுவியுள்ளது. இதனால், கூட்டணிக்கு பா.ம.க., ஓட்டுகள் முழுமையாக கிடைத்ததா எனவும்,தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து வருகின்றனர்.தமிழகத்தில் 16வது சட்டசபை தேர்தல் கடந்த ஏப்., 6ம் தேதி நடந்தது. இத்தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.,-பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் இடம்

விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி ஏழு இடங்களில் தோல்வியை தழுவியுள்ளது. இதனால், கூட்டணிக்கு பா.ம.க., ஓட்டுகள் முழுமையாக கிடைத்ததா எனவும்,தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து வருகின்றனர்.

தமிழகத்தில் 16வது சட்டசபை தேர்தல் கடந்த ஏப்., 6ம் தேதி நடந்தது. இத்தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.,-பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதேபோன்று, தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் காங்.,-வி.சி.,-கம்யூ., உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்று தேர்தலை சந்தித்தது.மேலும், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கிய அ.தி.மு.க., அரசு, வட மாவட்டங்களில் பா.ம.க.,வின் 'பெல்ட்' என கூறப்படும் தொகுதிகளை நம்பி தேர்தல் களத்தில் இருந்தது.

அதிலும், குறிப்பாக வன்னியர்கள் அதிகமுள்ள விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 11 சட்டசபை தொகுதிகளில் 8 இடங்களில் அ.தி.மு.க.,வும், 3 இடங்களில் பா.ம.க.,வும் போட்டியிட்டது. ஏனெனில், கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட பா.ம.க., இந்த 11 தொகுதிகளிலும் கணிசமான ஓட்டுகளை பெற்று, மூன்றாம் இடத்தில் இருந்தது.

இதனால், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பா.ம.க.,வுடன், அ.தி.மு.க., கூட்டணி வைத்தது. மேலும், தற்போது உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதால், பா.ம.க.,வின் முழு பலமும் தங்களுக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அ.தி.மு.க., தேர்தல் களம் கண்டது.ஆனால், நடந்து முடிந்த தேர்தலில் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் அ.தி.மு.க., மூன்று இடங்களிலும், பா.ம.க., ஒரு இடத்திலும் என மொத்தம் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால், தி.மு.க.,வோ கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் ஏழு தொகுதிகளை கைப்பற்றியதுபோன்று, தற்போதும் ஏழு தொகுதிகளை தக்க வைத்தது.

அதிலும், குறிப்பாக பத்து ஆண்டுகளாக கைவசமிருந்த விழுப்புரம், உளுந்துார்பேட்டை தொகுதிகளில் அ.தி.மு.க., தோல்வியை தழுவியது. மாவட்டத்தில் ஏழு தொகுதிகளில் தோல்விக்கான காரணத்தை, அ.தி.மு.க.,வினர் அலசி வருகின்றனர். மேலும், கடந்த 2016 சட்டசபை தேர்தலில் பா.ம.க., பெற்ற ஓட்டுகள், இந்த தேர்தலில் பதிவாகியிருந்தால், அ.தி.மு.க., கூடுதல் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்பாக இருந்திருக்கும். ஆனால், கடந்த தேர்தலைவிட மொத்த ஒட்டுகள் குறைவாக பெற்றுள்ளன.

மொத்தமுள்ள 11 சட்டசபை தொகுதிகளில் வானுார் (தனி), கள்ளக்குறிச்சி (தனி) மற்றும் உளுந்துார்பேட்டை ஆகிய மூன்று தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் கடந்த தேர்தலை விட ஓட்டுகள் கூடுதலாக பெற்றுள்ளன. அதில் வானுார் மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மற்ற 8 தொகுதிகளில் கடந்த தேர்தலை விட ஓட்டுகள் குறைந்திருப்பதால் அ.தி.மு.க.,வினர் குழப்பமடைந்துள்ளனர்.

இதனால், பா.ம.க.,வின் ஓட்டுகள் தங்களுக்கு முழுமையாக கிடைத்ததா என அ.தி.மு.க.,வினர் ஆய்வு செய்து வருகின்றனர்.மேலும், அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகளின் மீதுள்ள விரக்தி அல்லது உள் இட ஒதுக்கீடு விவகாரத்தால் தோல்வி ஏற்பட்டதா என ஆராய்ந்து வருகின்றனர்.

 -நமது சிறப்பு நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X