கமல் போட்டியிட்ட தொகுதியில் திக்... திக்...! ஓட்டு எண்ணிக்கையில் நடந்தது என்ன?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கமல் போட்டியிட்ட தொகுதியில் திக்... திக்...! ஓட்டு எண்ணிக்கையில் நடந்தது என்ன?

Added : மே 05, 2021
Share
கோவை:கோவையில் கமல் போட்டியிட்ட, தெற்கு தொகுதியில், மின்னணு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளில், கடைசி இரண்டு சுற்று எண்ணும் பணியை நிறுத்தி வைத்தது ஏன் என்பதற்கான காரணம், வெளிச்சத்துக்கு வந்துள்ளது.கோவை தெற்கு தொகுதியில், ம.நீ.ம., தலைவர் கமல், பா.ஜ., தேசிய மகளிரணி செயலர் வானதி சீனிவாசன், காங்., நிர்வாகி மயூரா ஜெயகுமார் ஆகிய மூவருக்கும் இடையே பலத்த போட்டி இருந்தது. முதல்

கோவை:கோவையில் கமல் போட்டியிட்ட, தெற்கு தொகுதியில், மின்னணு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளில், கடைசி இரண்டு சுற்று எண்ணும் பணியை நிறுத்தி வைத்தது ஏன் என்பதற்கான காரணம், வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கோவை தெற்கு தொகுதியில், ம.நீ.ம., தலைவர் கமல், பா.ஜ., தேசிய மகளிரணி செயலர் வானதி சீனிவாசன், காங்., நிர்வாகி மயூரா ஜெயகுமார் ஆகிய மூவருக்கும் இடையே பலத்த போட்டி இருந்தது. முதல் சுற்றில் இருந்து, 22 சுற்று வரை, கமல் முன்னிலை வகித்தார். 23வது சுற்றில், 890 ஓட்டுகள் கூடுதலாக பெற்று, முதலிடத்துக்கு வானதி முன்னேறினார். 24வது சுற்று எண்ணி முடித்து, 15 நிமிடங்கள் கடந்தும், 'ஸ்ட்ராங்' ரூமில் இருந்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எடுத்து வரப்படாமல், நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

முகவர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தனர்; சப்தம் அதிகமாக வர ஆரம்பித்ததால், உடனடியாக, உணவு இடைவேளையை, தேர்தல் அலுவலர் சிவசுப்ரமணியன் அறிவித்தார்.

அவர் பேசுகையில், ''தபால் ஓட்டு எண்ணப்படுகிறது; இன்னும், 45 நிமிடங்களாகும். அவசரப் படாமல், பொறுமையாக சாப்பிட்டு, மெதுவாக வாருங்கள்,'' என்றார். தபால் ஓட்டு எண்ணும் பணி, காலை, 8:00 மணிக்கு துவங்கியது. உணவு இடைவேளை அறிவித்தது, இரவு, 8:15 மணி. அதுவரை, தபால் ஓட்டு எண்ணி முடிக்கப்படவில்லையா என்ற கேள்வி எழுந்தது.இது தொடர்பாக, தேர்தல் பிரிவினரிடம் கேட்ட போது, 'தெற்கு தொகுதியில், 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 2,393 தபால் ஓட்டுகள் பதிவாகி இருந்தது.'ஒவ்வொரு தபால் ஓட்டாக பிரித்து, அனைத்து வேட்பாளர்களின் முகவர்களிடம் காட்டி விட்டு, அதற்குரிய பெட்டியில் போட வேண்டும். ஒவ்வொரு வேட்பாளருக்கும் பதிவான ஓட்டுகளை தனியாக பிரித்து எண்ண வேண்டும். இதன் காரணமாகவே தாமதமானது' என்றனர்.

இதற்கிடையே, இரண்டு இயந்திரங்களில், தகவல் மாறியிருந்ததாக, சர்ச்சை இருந்தது. ஒரு இயந்திரத்தில் உள்ள தகவல்களை அதிகாரிகள், ஆவணங்களை ஒப்பிட்டு சரிபார்த்த பின், முகவர்கள் ஏற்றுக் கொண்டனர். மற்றொரு இயந்திரத்தில், 352 ஓட்டுகள் பதிவாகியிருந்தன. மாதிரி ஓட்டு அழிக்காமல் விட்டதால், ஓட்டுப்பதிவு நடந்ததற்கும், இயந்திரத்தில் இருந்த ஓட்டு எண்ணிக்கைக்கும் வித்தியாசம் இருந்தது. அந்த இயந்திரத்தில், யார், யாருக்கு எவ்வளவு ஓட்டுகள் விழுந்திருந்தன என்பது, வேட்பாளர்கள் முன்னிலையில் எண்ணப்பட்டன.

மொத்தம், 352 ஓட்டுகள் இருந்தன.வெற்றி பெற்ற வேட்பாளருக்கும், இரண்டாவதாக வரும் வேட்பாளருக்கும் இடையே வித்தியாசம், 352 ஆகவோ அல்லது அதற்கு குறைவாகவோ இருந்தால் மட்டுமே, ஓட்டுச்சாவடி தலைமை அலுவலரின் பதிவேட்டை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். 1,000 ஓட்டுக்கு மேலாக, வித்தியாசம் இருந்ததால், அப்பிரச்னை ஓய்ந்தது.


எந்த அழுத்தமும் இல்லை!

தேர்தல் பிரிவினர் கூறியதாவது: தேர்தல் ஆணைய விதிமுறைக்கு உட்பட்டு, ஓட்டுகள் எண்ணப்பட்டன. எங்கிருந்தும், யாரிடம் இருந்தும் அழுத்தம் வரவில்லை. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளை எண்ணும்போது, கடைசி இரு சுற்றுக்கு முன், தபால் ஓட்டுகளை எண்ணி முடித்திருக்க வேண்டும் என்பது விதிமுறை. அவ்வாறு முடியாததால், மின்னணு இயந்திர ஓட்டு எண்ணிக்கையை நிறுத்தி, உணவு இடைவேளை அறிவித்தோம். அத்தருணத்திலும் தபால் ஓட்டுகளை தொடர்ந்து எண்ணினோம்.

அனைத்து நிகழ்வுகளும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் அனைவரும், அறையில் எங்கள் முன் அமர்ந்திருந்தனர். மின்னணு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளை திருத்த முடியாது; தபால் ஓட்டு ஆவணங்களை அழிக்கவோ, திருத்தவோ முடியாது. எவ்வித ஒளிவு மறைவின்றி, ஓட்டு எண்ணிக்கையை நடத்தி இருக்கிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X