தேர்தலையொட்டி தி.மு.க.,வினரின் புகாரால், கோவையில் நியமிக்கப்பட்ட கலெக்டர் நாகராஜன், கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கையாளாமல் செயலற்று இருப்பது, கோவை மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கலெக்டராக இருந்த ராஜாமணி, கொரோனா முதல் அலையின்போது, களத்தில் இறங்கி தீவிரமாகப் பணியாற்றினார். அடிக்கடி பல்வேறு துறை அதிகாரிகளைக் கூட்டி ஆலோசனை நடத்தி வந்தார். இதனால், கொரோனா பாதிப்பிலிருந்து கோவை மெல்ல மெல்ல மீண்டது. அவர் மீது அ.தி.மு.க., ஆதரவாளர் என்று முத்திரை குத்தி, அவரை உடனே மாற்றுமாறு, தமிழக தேர்தல் அதிகாரிக்கு தி.மு.க., சார்பில் மனு கொடுக்கப்பட்டது. அதை ஏற்று, கலெக்டர் மாற்றப்பட்டார்.
புதிய கலெக்டர், தேர்தலை பெரியளவில் மோதல், சர்ச்சையின்றி நடத்தி முடித்தார். அதன் பின், ஓட்டு எண்ணிக்கைக்கு இடையில் ஒரு மாதம் இருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில், கோவையில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்தது. இது குறித்து அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தவோ, கொரோனா தடுப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தவோ, கலெக்டர் உட்பட முக்கிய அதிகாரிகள் சிறப்புக் கவனம் செலுத்தவில்லை. இதனால் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி, இப்போது நாளுக்கு, 1,600 பேர் பாதிப்பு என்ற எண்ணிக்கையில் உச்சம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
மருத்துவமனைகள் திணறல்
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், படுக்கை கிடைப்பதே அரிதிலும் அரிதாகவுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை அதை விட அதிகமாகவுள்ளது. ரெம்டெசிவிர் மருந்துக்கும், தடுப்பூசிக்கும் பெரும் தட்டுப்பாடாகவுள்ளது. மாதத்துக்கு, ஐந்து ஆக்சிஜன் சிலிண்டர் பயன்படுத்திய மருத்துவமனைக்கு, இப்போது ஒரு நாளுக்கே ஐந்து சிலிண்டர்கள் தேவைப்படுகின்றன.
இப்படியொரு அசாதாரண சூழ்நிலையில், தீவிரமாகப் பணியாற்ற வேண்டிய கலெக்டர் நாகராஜன், எந்தவொரு சிறு முயற்சியையும் மேற்கொள்வதாகத் தெரியவில்லை. பல மாவட்டங்களில் திறமையாகவும், நேர்மையாகவும் பணியாற்றியதாக பெயர் பெற்ற கலெக்டர் நாகராஜன், மே 10 வந்தால் மாற வேண்டுமென்பதால், செயலற்று இருப்பது தெரிகிறது.
கோவையில் தற்போது நிலைமை மோசமாக இருக்கும் நிலையில், இன்னும் ஒரு வாரம் போனால் நிலைமை கைமீறிப் போய் விடுமென்பதும், உயிரிழப்புகள் மிக அதிகமாகும் என்பதும் நிச்சயம். முதல்வராகப் பதவியேற்கும் முன்பே, பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கோவையில் தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, போர்க்கால நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE