நோய் நாடி... நோய் முதல் நாடி

Added : மே 05, 2021 | கருத்துகள் (1)
Advertisement
கொரோனா என்ற ஒரு சொல் நம் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. இந்த சூழ்நிலையில் நம்மால் முடிந்ததை செய்து நம்மையும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் பாதுகாப்பாக வைக்கவேண்டியது ஒவ்வொருவரின் கடமை. நம் முன்னோர்கள் வாக்கின்படி நோய் நாடி நோய் முதல் நாடி என்பதே இதில் சிறந்த வழி. கொரோனா பாதிப்பு ஏற்படுபவர்களின் உடலில் நோய் எதிர்ப்புசக்தி வலியதாக இருக்கும்பட்சத்தில், அதன் தாக்கம்
 நோய் நாடி... நோய் முதல் நாடி

கொரோனா என்ற ஒரு சொல் நம் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. இந்த சூழ்நிலையில் நம்மால் முடிந்ததை செய்து நம்மையும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் பாதுகாப்பாக வைக்கவேண்டியது ஒவ்வொருவரின் கடமை.


நம் முன்னோர்கள் வாக்கின்படி நோய் நாடி நோய் முதல் நாடி என்பதே இதில் சிறந்த வழி. கொரோனா பாதிப்பு ஏற்படுபவர்களின் உடலில் நோய் எதிர்ப்புசக்தி வலியதாக இருக்கும்பட்சத்தில், அதன் தாக்கம் குறைவாகவே உள்ளது. எனவே நம் உடலையும் மனதையும் ஒருசேர பலமாக்கிக்கொள்ள வேண்டும்.


உணவே மருந்துசரியான முறையில் உட்கொண்டால் நாம் உண்ணும் உணவே உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதற்கு புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது நல்லது. நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் உணவு பொருட்களான மஞ்சள், நெல்லிக்காய், துளசி, பூண்டு, நெய் போன்றவற்றை எதாவது ஒரு வழியில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பச்சைக்காய்கறிகள் பருப்பு வகைகள் என சத்தான உணவை சாப்பிட வேண்டும். இடையே தின்பண்டங்களை சாப்பிடுவது பலருக்கும் பிடிக்கும். அவற்றையும் நம் உடலுக்கு நன்மை தரும் உணவுகளாகவே மாற்றுவது நல்லது.


எண்ணெய்யில் வறுத்த பலகாரங்களை தவிர்த்து பழங்கள், உலர் பழங்கள், விதைகள், வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிட வேண்டும். ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம், ஸ்ட்ராபெரி, கொய்யாப்பழம் போன்றவற்றில் வைட்டமின் சக்தி நிறைந்து உள்ளது. பாதாம், வால்நட் என்னும் அக்ரூட் பருப்பு ஆகியவை உடலுக்கு வலிமை சேர்க்கக்கூடியவை. இவற்றை அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். இன்றைய சூழலுக்கு ஏற்ப உணவுப்பழக்கங்களை மாற்ற வேண்டியது தவிர்க்கமுடியாத ஒன்று. இந்திய உணவுமுறையில் ஆரோக்கியமிக்க உணவுகள் அதிகமாக உள்ளன. இவற்றை முறையாக சேர்த்துக்கொண்டாலே போதுமானது.


சுவர் இருந்தால்உணவு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் உடற்பயிற்சி. அதுவும் இப்பொழுது வீட்டில் இருந்து வேலை செய்வதால், வெளியில் செல்லாமல் வீட்டில் இருப்பதால் பெரும்பாலான நேரம் கம்ப்யூட்டர், தொலைக்காட்சி, அலைபேசி ஆகியவற்றின் முன்பு தான் கழிகின்றது. இதனால் உடலும் மனதும் சோர்வடைகிறது. ஆகவே உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குவது முக்கியம். உடற்பயிற்சி செய்யும்பொழுது உடலின் அனைத்து உறுப்புகளும் சுறுசுறுப்படைகின்றன. தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்கு உடலின் கழிவுகள் முறையாக வெளியேறி உடலின் செயல்பாடு சீராக இருக்கும். உடற்பயிற்சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெருமளவில் உதவுகின்றது. ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் முப்பது நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். பெரியவர் முதல் சிறியவர் வரை அவர்களால் என்ன முடிகிறதோ அதனை செய்ய வேண்டும்.


நடைபயிற்சிநடைபயிற்சி, ஓட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், யோகா ஆகியவற்றில் எதாவது ஒன்றை அவரவர் விருப்பத்திற்கேற்ப செய்யலாம். உடற்பயிற்சி செய்யும்பொழுது ரத்தஓட்டம் சீராகும், தசைகள் மற்றும் எலும்புகள் பலம் பெறும். உடலும் மனதும் புத்துணர்ச்சி பெறும். தொடர் உடற்பயிற்சி மூலம் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, இருதய நோய், சுவாச கோளாறுகள் போன்றவற்றை கட்டுக்குள் வைக்க முடியும். இவை அனைத்தும் சரியாக இருக்கும்பட்சத்தில் நோய்த்தொற்றின் பாதிப்பு குறைவாக இருக்கும். நோயை எதிர்க்கும் திறனும் அதிகமாக இருக்கும்.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை விடுவதற்கு பலர் சரியான நேரமும் காலமும் காரணமும் தேடிக்கொண்டு இருப்பார்கள்.

இந்த நேரத்தை விட அதற்கு பொருத்தமான நேரம் இருக்க முடியாது. புகை பிடிப்பது உடலிற்கு பல விதமான தீங்குகளை ஏற்படுத்துகிறது.முக்கியமாக சுவாசக்குழாய் மற்றும் நுரையீரலை அதிகம் பாதிக்கிறது. கொரோனா வைரஸ் முதலில் குறி வைப்பதும் சுவாசக்குழாயைத்தான். எனவே புகை பிடிப்பவர்களுக்கு இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். மது அருந்துவதும் உடலின் உள்ளுறுப்புக்கள் பலவற்றை பாதிக்கின்றது. கட்டுப்பாடின்றி ஆரோக்கியமில்லாத உணவை சாப்பிடுவது, நேரத்திற்கு துாங்காமல் இருப்பது,எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறித்தனமாக இருப்பது போன்றவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்களே. இவற்றை கைவிட வேண்டும்.


ஊக்கம் தரும் துாக்கம்அடிக்கடி கை கழுவுவது, அவசியமாக வெளியில் சென்றால் முகக்கவசம் அணிவது, கிருமிநாசினி உபயோகப்படுத்துவது, வென்னீரில் ஆவி பிடிப்பது போன்றவற்றை தினசரி பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். துாக்கம் நம் உடலில் ஏற்படுத்தும் தாக்கம் மிக முக்கியமானது. துாங்கும் பொழுது சைட்டோகைன்ஸ் என்னும் புரதம் உடலில் சுரக்கிறது.

இது உடலின்நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். சீரான நேரத்தில் சீரான முறையில் துாங்க வேண்டும். இரண்டு மூன்று நாட்கள் சரியாக துாங்காமல் அடுத்த நாள் அதிகம் துாங்குவது, ஒவ்வொரு நாளும் வேறு வேறு நேரத்தில் துாங்குவது போன்ற பழக்கங்களை தவிர்ப்பது நல்லது.தொடர்ந்து துாக்கமின்மை உள்ளவர்கள் அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். நிம்மதியான துாக்கம் வருவதற்குரிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். துாங்கும் முன் அதிகமாக சாப்பிட வேண்டாம். படுக்கை அறையில் வெளிச்சம் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். மெலிதான இசை கேட்கலாம். நல்ல துாக்கம் இருந்தால் உடலும் மனதும் ஆரோக்கியமாக இருக்கும்.


மனமிருந்தால் மார்க்கமுண்டுமன அழுத்தத்திற்கும் நோய் எதிர்ப்புசக்திக்கும் மருத்துவரீதியான தொடர்பு உண்டு. மனஅழுத்தம் ஏற்படும் பொழுது உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். மனஅழுத்தம் என்பது அனைவருக்கும் வரும். அதிலும் இப்பொழுது இருப்பது போன்ற நெருக்கடியான காலகட்டத்தில் குடும்பம், வேலை, படிப்பு, தொழில், வருமானம், தினசரி செலவு என மன அழுத்தத்திற்கான காரணம் பல. அதை கடப்பதற்கு நாம் கையாளும் முறைகள் தான் முக்கியம். முதலில் நம் கட்டுப்பாட்டில் என்ன உள்ளதோ அதை பற்றி சிந்திக்க வேண்டும்.
பிற விஷயங்களை நினைத்து கவலை கொள்வதால் ஒரு பயனும் கிடையாது. மன அழுத்தத்தை ஒரு காரணமாக சொல்லி தீய பழக்கங்களுக்கு ஒரு நாளும் இடம் கொடுக்க கூடாது. மன அழுத்தத்தை குறைப்பதற்கு எளிதான முறைகள் உள்ளன. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் இது பற்றி பேசலாம். மனதிற்கு மகிழ்ச்சி தருபவற்றை செய்யலாம். உடற்பயிற்சி, தியானம், யோகா ஆகியவை மன அமைதி தரும்.


உடல், மனம், எண்ணங்கள், பழக்கங்கள் என அனைத்தையும் சீராக வைப்பதுதான் ஆரோக்கியம். இதில் ஒன்று மாறினாலும் மற்ற அனைத்துமே மாறிவிடும். கொரோனா என்னும் உலகளாவிய நோய் தொற்றிலிருந்து விடுபட நம்மால் இயன்றதை செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் தன்னையும் தன்னை சுற்றி உள்ளவர்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொண்டால் இந்த நோய் தானாக அகன்று விடும். இதுவும் கடந்து போகும், நிலைமை விரைவில் சரியாகும் என்ற நம்பிக்கையை மனதில் கொள்வோம்.-டாக்டர் ஜெ. கண்ணபெருமான், மதுரை 94441 54551

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
06-மே-202106:33:10 IST Report Abuse
madhavaraman மிகவும் பயனுள்ள கட்டுரை தந்தமைக்கு தினமலர் இதழுக்கும்-மருத்துவருக்கும் மனமார்ந்த நன்றிகள்..,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X