புதுடில்லி : 'மஹாராஷ்டிராவில், மராத்தா சமூகத்தினருக்கு, கல்வி, அரசு வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டம், அரசியல் சட்டத்துக்கு எதிரானது; அதனால், சட்டம் ரத்து செய்யப்படுகிறது' என, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

மஹாராஷ்டிராவில், 2018ல், தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ. - சிவசேனா கூட்டணி ஆட்சி நடந்தது. அப்போது, மாநிலத்தில், மராத்தா சமூக மக்களுக்கு, கல்வி, வேலைவாய்ப்பு களில், 16 சதவீத இடஒதுக்கீடு வழங்கி, சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு, கவர்னர் ஒப்புதல் அளித்ததையடுத்து, மாநிலத்தில் சட்டம் அமலானது.
மனு தாக்கல்
இதை எதிர்த்து, மும்பை உயர் நீதிமன்றத்தில், பலர் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், 'மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உறுதி செய்தது. எனினும், 'வேலைவாய்ப்பில், 12 சதவீதம், கல்வியில், 13 சதவீதம் மட்டுமே இடஒதுக்கீடு வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டது.மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பல மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு செப்., 9ல், மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. எனினும், 'இந்த சட்டத்தால் பயன்பெற்றவர்களுக்கு, எந்த இடையூறும் ஏற்படுத்தக்கூடாது' என, தெரிவித்து, வழக்கை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.
தீர்ப்பு
இதையடுத்து, இந்த வழக்கை, நீதிபதிகள் அசோக் பூஷன், எல்.என்.ராவ், ஹேமந்த் குப்தா, ரவீந்திர பட், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய, அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இந்நிலையில், இந்த வழக்கில், நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஐந்து நீதிபதிகளும், நான்கு விதமான தீர்ப்புகளை வழங்கினர். எனினும், மராத்தா சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு செல்லாது என்பதில், ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த கருத்து கொண்டிருந்தனர்.
ஐந்து நீதிபதிகளும், ஒரே மாதிரியாக அளித்த தீர்ப்பில் கூறியிருந்ததாவது: மராத்தா சமூகத்தினருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவது, அரசியல் சட்டத்தின், 14வது பிரிவுக்கு எதிரானது. மேலும், '50 சதவீதத்துக்கு அதிகமான இட ஒதுக்கீட்டை, அசாதாரண சூழலில் பரிசீலிக்கலாம்' என, 1992ல் இந்திரா சாஹ்னே அளித்த தீர்ப்பின்படி, மராத்தா சமூகத்தினருக்கு தனி இடஒதுக்கீடு அளிப்பதை பற்றி பரிசீலிக்க, அசாதாரண சூழ்நிலை நிலவவில்லை.அவர்கள், கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருக்கவில்லை.
அதனால், மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் சட்டம், ரத்து செய்யப் படுகிறது. எனினும், மராத்தா சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு சட்டத்தால், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பயன் அடைந்தோருக்கு, எந்தவிதமான இடையூறும் ஏற்படுத்தக் கூடாது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
துரதிருஷ்டவசமானது
உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றி, மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியதாவது: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, துரதிருஷ்டவசமானது. மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான, சட்ட போராட்டம் தொடரும். இந்த விஷயத்தில், ஜனாதிபதியும், பிரதமரும் கருணை காட்ட வேண்டும் ஷா பானு வழக்கு, காஷ்மீரில், 370வது சட்டம் ரத்து ஆகியவற்றில் மேற்கொண்டது போல், மராத்தாவினருக்கு இடஒதுக்கீடு வழங்க, பார்லி.,யில் சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மஹாராஷ்டிர அரசு தான் காரணம்
மஹாராஷ்டிர மாநில பா.ஜ., தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியதாவது:
மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கான சரியான காரணங்களை கூறி, உச்ச நீதிமன்றத்தை ஏற்க வைப்பதில், மஹாராஷ்டிரா அரசு தோல்வியடைந்துவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, அனைத்து கட்சியையும் கூட்டி ஆலோசிப்பதுடன், சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி, விவாதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.