சென்னை :தமிழக அமைச்சரவையில் இடம் பெறும், புதிய அமைச்சர்கள் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. காவல், உள்துறை போன்றவை, முதல்வர் கையில் உள்ளன. சுகாதாரத் துறைக்கு மா.சுப்பிரமணியன்; பள்ளிக் கல்வித் துறைக்கு மகேஷ் பொய்யாமொழி; அறநிலையத் துறைக்கு சேகர்பாபு, உயர் கல்வித் துறைக்கு பொன்முடி ஆகியோர், அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்டாலின் அமைச்சரவையில், 34 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும், இன்று பதவியேற்றனர்.
சட்டசபை தேர்தலில், தி.மு.க., பெரும்பான்மை பெற்று, ஆட்சியை பிடித்துள்ளது. தி.மு.க., சட்டசபை தலைவராக, ஸ்டாலின் தேர்வுசெய்யப்பட்டார்.
கவர்னர் அழைப்பு
அவரை முதல்வராக பதவியேற்க, கவர்னர் அழைப்பு விடுத்தார்.அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தின் முதல்வராக, இன்று காலை, 9:00 மணிக்கு, கவர்னர் மாளிகையில் நடக்கும், எளிமையான விழாவில், ஸ்டாலின் பதவியேற்றார். அவருடன், 33 அமைச்சர்கள் பதவியேற்றனர் .அனைவருக்கும், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.புதிய அமைச்சரவை பட்டியலை, நேற்று கவர்னர் மாளிகை வெளியிட்டது. முதல்வர் ஸ்டாலின், காவல், உள்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை ஆகியவற்றை, தன் வசம் வைத்துள்ளார்.கொரோனா வைரஸ் பரவல், மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், சுகாதாரத்துறை அமைச்சராக, சென்னை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுமுகம்
கடந்த ஆண்டில் இருந்து, கொரோனா பரவல் காரணமாக, பள்ளிகளை திறக்க முடியாத நிலை உள்ளது. மாணவர்களின் கல்வி பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டிய நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக, மகேஷ் பொய்யாமொழி நியமிக்கப்பட்டுள்ளார்; இருவரும் புதுமுகங்கள். உயர் கல்வித் துறை அமைச்சராக, ஏற்கனவே அந்த துறையை பார்த்த அனுபவமிக்க பொன்முடி நியமிக்கப்பட்டுள்ளார்.முதல்வர் மற்றும் அமைச்சர்கள், இன்று காலை, கிண்டியில் உள்ள, கவர்னர் மாளிகையில், பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட பின், மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் சென்று, மரியாதை செலுத்த உள்ளனர்.அதன்பின், தலைமைச் செயலகம் சென்று, அவரவருக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகத்தில், பொறுப்பேற்க உள்ளனர். முதல்வராக பொறுப்பேற்கும் ஸ்டாலின், முக்கிய அறிவிப்புகளுக்கான கோப்பில், முதல் கையெழுத்திடுவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
புதிய அமைச்சரவை பட்டியல்
அமைச்சர்கள் - இலாகா
* துரைமுருகன் - நீர்வளத்துறை
* கே.என்.நேரு - நகர்ப்புற வளர்ச்சித் துறை
* ஐ.பெரியசாமி - கூட்டுறவுத்துறை
* க.பொன்முடி - உயர்கல்வித்துறை
* எ.வ.வேலு - பொதுப்பணித்துறை
* எம்.ஆர்.பன்னீர்செல்வம் - வேளாண்மை - உழவர் நலத்துறை
* கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் - வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை
* தங்கம் தென்னரசு - தொழில்துறை
* எஸ்.ரகுபதி - சட்டத்துறை
* முத்துசாமி - வீட்டு வசதித்துறை
* கே.ஆர்.பெரியகருப்பன் - ஊரக வளர்ச்சித் துறை
* தா.மோ.அன்பரசன் - ஊரகத் தொழிற்துறை
* மு.பெ.சாமிநாதன் - செய்தித்துறை
* பி.கீதா ஜீவன் - சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை
* அனிதா ராதாகிருஷ்ணன் - மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை
* ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் - போக்குவரத்துத்துறை
* கா.ராமச்சந்திரன் - வனத்துறை
* சக்கரபாணி - உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை
* வி.செந்தில் பாலாஜி - மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை
* ஆர்.காந்தி - கைத்தறி மற்றும் துணிநூல் துறை
* மா.சுப்பிரமணியன் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
* பி.மூர்த்தி - வணிகவரி மற்றும் பதிவுத்துறை
* எஸ்.எஸ்.சிவசங்கர் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
* பி.கே.சேகர்பாபு - இந்து சமயம் மற்றும் அறநிலையதுறை

* பழனிவேல் தியாகராஜன் - நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை
* சா.மு.நாசர் - பால்வளத்துறை
* செஞ்சி கே.எஸ்.மஸ்தான் - சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை
* அன்பில் மகேஸ் பொய்யாமொழி - பள்ளிக்கல்வித்துறை
* சிவ.வீ.மெய்யநாதன் - சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை
* சி.வி.கணேசன் - தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை
* த.மனோ தங்கராஜ் - தகவல் தொழில்நுட்பத்துறை
* மா.மதிவேந்தன் - சுற்றுலாத்துறை
* என்.கயல்விழி செல்வராஜ் - ஆதிதிராவிடர் நலத்துறை
தி.மு.க., அமைச்சரவையில் 8 'மாஜி' அ.தி.மு.க.,வினர்
ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில், அ.தி.மு.க.,வில் இருந்து, தி.மு.க.,விற்கு வந்த எட்டு பேருக்கு, அமைச்சர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எ.வ.வேலு, முத்துசாமி, சாத்துார் ராமச்சந்திரன், ராஜகண்ணப்பன், ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு, செந்தில் பாலாஜி ஆகியோர், அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவர்கள். இவர்களில் சேகர்பாபு தவிர, மற்ற ஏழு பேரும், அ.தி.மு.க., அமைச்சர்களாக இருந்தவர்கள். இவர்களுக்கு, தற்போதைய தி.மு.க., அமைச்சரவையிலும், முக்கிய துறைகள் ஒதுக்கப்ட்டுள்ளன.
சபாநாயகர் அப்பாவு?
திருநெல்வேலி மாவட்டத்திற்கு அமைச்சர் பிரதிநிதித்துவம் தராததால், அம்மாவட்டத்தில், நான்காவது முறையாக, எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்ட அப்பாவுக்கு, சபாநாயகர் பதவி கிடைக்கலாம் என, கூறப்படுகிறது. தென்மாவட்டங்களில், திருநெல்வேலி, தேனியை தவிர, மற்ற மாவட்டங்களான மதுரை, விருதுநகர், துாத்துக்குடி போன்ற மாவட்டங்களுக்கு, இரண்டு அமைச்சர்கள், பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில், பாளையங்கோட்டை எம்.எல்.ஏ., அப்துல் வகாப்புக்கு, அமைச்சர் பதவி கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிறுபான்மையினர் எம்.எல்.ஏ., வான செஞ்சி மஸ்தான், ஆவடி நாசர் ஆகியோருக்கு, அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த, ராதாபுரம் எம்.எல்.ஏ., அப்பாவுக்கும், அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. எனவே, அம்மாவட்டத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில், சபாநாயகராக அப்பாவு தேர்வு செய்யப்படுவார் என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த, 20௦6ல், தி.மு.க., ஆட்சியில், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஆவுடையப்பன், சபாநாயகராக இருந்தார். தற்போதைய தேர்தலில், அம்பாசமுத்திரத்தில் ஆவுடையப்பன் தோல்வி அடைந்ததால், அப்பாவுக்கு வாய்ப்பு உள்ளது என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE