பல கட்சிக்கு வாய்ப்பளித்த 16வது சட்டசபை தேர்தல்

Added : மே 07, 2021
Share
Advertisement
தமிழகத்தில், 16வது சட்டசபைக்கான தேர்தல், கடந்த மாதம், ௬ம் தேதி நடந்தது. இந்தத் தேர்தலில், தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ் உட்பட, 12 கட்சிகள் இடம் பெற்றிருந்தன. அ.தி.மு.க., தலைமையிலான அணியில், பா.ம.க., உட்பட, ஒன்பது கட்சிகள் களமிறங்கின.இதுதவிர, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணியில் சில கட்சிகளும், தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.,வுடன், தே.மு.தி.க., உட்பட சில

தமிழகத்தில், 16வது சட்டசபைக்கான தேர்தல், கடந்த மாதம், ௬ம் தேதி நடந்தது. இந்தத் தேர்தலில், தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ் உட்பட, 12 கட்சிகள் இடம் பெற்றிருந்தன. அ.தி.மு.க., தலைமையிலான அணியில், பா.ம.க., உட்பட, ஒன்பது கட்சிகள் களமிறங்கின.

இதுதவிர, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணியில் சில கட்சிகளும், தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.,வுடன், தே.மு.தி.க., உட்பட சில கட்சிகளும் அணி சேர்ந்திருந்தன.இந்த நான்கு அணிகள் தவிர, சீமானின் நாம் தமிழர் கட்சி,234 தொகுதிகளிலும் போட்டியிட்டது.

ஐந்து முனைப் போட்டி நிலவிய இத்தேர்தலில், மொத்தமுள்ள, 234 சட்டசபை தொகுதிகளிலும், 4,220 பேர் போட்டியிட்டனர். இதில், கரூர் தொகுதியில், அதிகபட்சமாக, ௭௭ பேரும், வால்பாறை தொகுதியில் குறைந்தபட்சமாக, ஆறு பேரும் களமிறங்கி இருந்தனர்.இந்தத் தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின.

மொத்தமுள்ள, 234 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக,176 தொகுதிகளில் போட்டியிட்ட, இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., தலைமையிலான அ.தி.மு.க., 66 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அந்தக் கட்சி தலைமையிலான கூட்டணி, 76 தொகுதிகளைப் பிடித்துள்ளது.

அதே நேரத்தில், 173 தொகுதிகளில் களம் கண்ட ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., 125 தொகுதிகளில் வென்றுள்ளது. அதன் கூட்டணி கட்சிகள், 33 இடங்களைப் பிடித்துள்ளன.

கருணாநிதி, ஜெயலலிதா என்ற, இரு பெரும் தலைவர்கள் மறைவுக்கு பின் நடந்த இந்த தேர்தலில், மற்ற கட்சிகளை எல்லாம் புறந்தள்ளி விட்டு, இந்த இரு திராவிட கட்சிகளுக்கே, மக்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.அத்துடன், இ.பி.எஸ்., தலைமையை மக்கள் ஏற்பரா என்ற சந்தேகத்திற்கும், முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.,வின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அவர், அந்தப் பதவியை பிடிக்க முடியாவிட்டாலும், பலமான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க., உருவாகி விட்டது. இதிலிருந்தே, அவரது தலைமைக்கு மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர் என்பதை அறியலாம்.

அத்துடன், 1996ல் நடந்த சட்டபை தேர்தலில், அ.தி.மு.க., நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன்பின், 2006ல் நடந்த தேர்தலில், தனிப்பட்ட முறையில், 61 இடங்களைப் பிடித்து எதிர்க்கட்சியானது. அந்த முடிவுகளை ஒப்பிடுகையில், அதை விட அதிகமான இடங்களையே பிடித்து, பலமான எதிர்க்கட்சியாக சட்டசபையில் அமரும் நிலையில் உள்ளது.

அதேநேரத்தில், அ.தி.மு.க.,வுக்கு பலமான பாதிப்பை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்பட்ட தினகரனின் அ.ம.மு.க., ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அந்தக் கட்சியின் தலைவர் தினகரன்,கோவில்பட்டி தொகுதியில் இரண்டாம் இடம் தான் பிடித்துள்ளார். அவருடன் கூட்டணி அமைத்த தே.மு.தி.க.,வும் மண்ணை கவ்வியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சி, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக, 142 இடங்களில் போட்டியிட்டது. ஆயினும், அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல் ஹாசனே தோல்வி அடைந்துள்ளார். அதன் கூட்டணி கட்சிகளான சரத்குமாரின் ச.ம.க., பாரிவேந்தரின் ஐ.ஜே.கே., ஆகிய கட்சிகளும் எங்கும் வெற்றி பெறவில்லை.

கடந்த, 2016 லோக்சபா தேர்தலின் போது, தி.மு.க., தலைமையிலான இதே கூட்டணி, மாநிலத்தில் மொத்தமுள்ள, 39 லோக்சபா தொகுதிகளில், தேனி தொகுதி தவிர, 38 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றது. அதேபோன்ற அபார வெற்றியை இம்முறை பெறவில்லை என்றாலும், ஆட்சியை பிடித்துள்ளது அவர்களுக்கு பெருமையே.

இருப்பினும், தி.மு.க., கடுமையாக எதிர்க்கும் பா.ஜ., மத்தியில் ஆட்சியில் உள்ளதால், கூட்டணி கட்சிகளை அனுசரித்து செல்ல வேண்டிய சூழ்நிலையில் தான், ஸ்டாலின் உள்ளார்.

தி.மு.க., கூட்டணியில், 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 17 இடங்களைப் பிடித்து, சட்டசபையில் தன் பலத்தை அதிகரித்துள்ளது.

234 தொகுதிகளிலும், தனித்துப் போட்டியிட்ட, சீமானின் நாம் தமிழர் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. இருப்பினும், பல தொகுதிகளில் அக்கட்சி வேட்பாளர்கள் மூன்றாம் இடம் பிடித்துள்ளதை நினைத்து, அவர்கள் பெருமைப்படுகின்றனர்.

மொத்தத்தில், இந்த சட்டசபை தேர்தல் முடிவுகள், அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு உள்ள செல்வாக்கு அப்படியே உள்ளது என்பதை நிரூபித்துள்ளதோடு, மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க.,வால், அவர்களுக்கு பாதிப்பில்லை என்பதையும் காட்டுகின்றன. மேலும், பா.ஜ., - பா.ம.க., - ம.தி.மு.க., - மார்க்சிஸ்ட் கம்யூ., - இந்திய கம்யூ., - விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளும், வேறு சில சிறிய கட்சிகளும் சட்டசபைக்கு செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அக்கட்சிகளின் குரல், புதிய சட்டசபையில் ஒலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பலமான கூட்டணியோடு தேர்தலை சந்தித்த தி.மு.க.,வுக்கு, 10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி கட்டிலில் அமர வாய்ப்பு கிடைத்துள்ளது. அதே நேரத்தில், அ.தி.மு.க., வெற்றிகரமான தோல்வியை தான் சந்தித்துள்ளது என்பதே நிதர்சனம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X