
முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற விழாவில் மகிழ்ச்சியான மற்றும் நெகிழ்ச்சியான விஷயங்கள் நடந்தேறின

கொரோனா காரணமாக ஏாராளமாக கட்டுப்பாடுகளுடன்தான் நிகழ்விற்கு அனுமதித்தனர். பத்திரிகையாளர்களான எங்களை இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருந்தாலும் பராவாயில்லை,டெஸ்ட் எடுத்து ரிசல்ட் நெகடிவ் என்று வந்தபிறகே விழாவிற்கு வரலாம் என்று கீரீன் சிக்னல் கொடுத்தனர்.

விழா நடந்த கவர்னர் மாளிகைக்குள் நுழையும் போது என்95 மாஸ்க் கொடுத்து கட்டாயம் இதை அணிந்து கொண்டிருக்க வேண்டும் என்றனர்.

இட நெருக்கடி காரணமாக சமூக இடைவெளி இல்லாமல் எல்லோரும் நெருக்கமாகவே நாற்காலி போட்டு உட்கார்ந்திருந்தனர்.நிறைய பேர் உட்கார இடமில்லாமல் நின்று கொண்டிருந்தனர்.
மாற்று கட்சி அரசியல் தலைவர்கள் பிரமுகர்கள் பலர் தங்களுக்கு முன் இருக்கை இருக்கும் என்ற நிலையில் பந்தாவாக நுழைந்தனர் அவர்களை எல்லாம் அதிகாரிகள் அழகாக அழைத்துச் சென்று பின் இருக்கைகளில் உட்காரவைத்தனர்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் முன்னாள் துணை முதல்வர் ஒ.பி.எஸ்.,விழாவிற்கு வந்திருந்தார் அமைச்சர்களை அறிமுகம் செய்யும் போது அவரை மரியாதை நிமித்தமாக முதல்வர் அறிமுகம் செய்துவைத்தார்.
முதல்வரின் அண்ணன் மு.க.அழகரி மகனும் மகளும் விழாவிற்கு வந்த போது அண்ணன் முறைகொண்ட உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார்

உதயநிதிதான் பெரும்பாலும் விருந்தினர்களை வரவேற்பது உட்காரவைப்பது என்று சுழன்று கொண்டிருந்தார்.
முதல்வராக பொறுப்பேற்கும் போது மு.க.ஸ்டாலின் எனும் நான் என்று சொல்லப்போகிறார் என்று எதிர்பார்த்தபோது முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலினாகிய நான் என்று சொல்லி பலத்த கரகோஷத்தை பெற்றார்.

முதல்வர் குடும்பத்திற்கான தனி இடத்தில் அமர்ந்திருந்த முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் கணவர் முதல்வராக பதவி ஏற்றபோது மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் பொங்க கண்கலங்கினார் அருகில் இருந்த மகன் உதயநிதிதான் சமாதானப்படுத்தினார்.
உடல்நிலை முடியாத நிலையிலும் முன்னாள் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி சிலரது உதவியுடன் விழாவிற்கு வந்திருந்தார்.
அரங்கிற்குள் நிலவிய சந்தோஷ அலை கொஞ்சம் கொரோனா பயத்தை குறைத்திருந்தது என்றாலும் பலரும் ஒன்றுக்கு இரண்டு மாஸ்க் அணிந்துதான் காணப்பட்டனர்.
புதிய அரசு மக்களுக்கு நன்மைகள் பல செய்யவேண்டும் என்ற முனைப்புடன் இருப்பதை உணரமுடிகிறது அதற்கு கொரோனா கொஞ்சம் கருணையுடன் வழிவிடவேண்டும்.
-எல்.முருகராஜ்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE