சென்னை: தமிழகத்தில் வரும் 10ம் தேதி முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அத்தியாவசியமின்றி வெளியே வருவதை தவிர்ப்பதே நாட்டிற்கு அவசியமாகும்.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. நாள் ஒன்றுக்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இரவு நேர ஊரடங்கு, கடைகளை திறக்க நேரக்கட்டுப்பாடு, ஞாயிறு முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஆனாலும், பாதிப்பு எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
இதனால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறு பல தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து, மே 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை மக்கள் முழுமையாக கடைப்பிடிக்குமாறும் அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இரு நாட்களில் ஊரடங்கு துவங்கிவிடும் என்பதால், மக்கள் பொருட்களை வாங்க ஆர்வம் காட்டியதால் பல இடங்களில் கூட்டம் அலைமோதியது. பலர் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை.

ஊரடங்கு என அறிவித்தாலே மக்கள் ஒருவித அச்சத்தில் மூழ்கி விடுகின்றனர். ஊரடங்கு நாட்களில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கதோ என்ற பயத்தால், இப்போதே வாங்கி குவிக்க கடைகளின் முன்பு கூட்டமாக கூடுகின்றனர். ஆனால், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் எவ்வித சிக்கலுமின்றி நண்பகல் 12 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என அரசு அறிவித்தாலும், மக்கள் கூடுகின்றனர். கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் யாரை, எப்படி தாக்கும் என்பது யாருக்கும் தெரியாது. நாம் தான் விழிப்புடன் பாதுகாப்பாய் இருக்க வேண்டும்.

அடுத்தவர்கள் மூலம் தொற்று பரவுவதால் ஊரடங்கு நாட்களில் அத்தியாவசிய தேவைகளின்றி மக்கள் வெளியில் வருவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அவசர தேவைகளுக்காக வெளியில் செல்லும் போது முகக்கவசம், சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கொரோனா 2வது அலையால் அனைத்து மருத்துவமனைகளும் படுக்கை இல்லாமல் நிரம்பி வழிகின்றன. அப்படியிருக்கையில், நாம் தேவையின்றி வெளியே வருவதால், நமக்கும் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது. இதனால், நம்மை சுற்றியுள்ள அனைவருக்கும் நாம் கொரோனாவை பரப்பி அவர்களையும் பாதிப்படைய செய்கிறோம்.

கொரோனாவை தடுக்க மருத்துவர்கள், நர்ஸ்கள், முன்கள பணியாளர்கள் அனைவரும் கடுமையாக போராடி வரும் இந்த நேரத்தில், கொரோனா நெருக்கடியை புரிந்துக்கொண்டு இந்த 15 நாட்கள் ஊரடங்கில் வீட்டிலேயே இருங்கள். வீட்டில் இருந்தாலும், முகக்கவசத்தை அணியுங்கள். இது நமக்கு மட்டுமல்லாமல், நம்மை சுற்றியுள்ளவர்களையும் பாதுகாக்க உதவும். அது நம் நாட்டையும் காப்பாற்றும். தயவு செய்து ஊரடங்கில் மக்கள் வெளியே வராமல் வீட்டிலேயே பாதுகாப்பாய் இருப்பதே நாட்டிற்கு அவசியமாகும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE