சமீபத்தில் நடந்து முடிந்த, தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., ஆட்சியை பிடித்துள்ளது. எதிர்க்கட்சி வரிசையில், அ.தி.மு.க., அமர்ந்துள்ளது.
தேர்தலுக்கு ஒரு சில நாட்களுக்கு முன், என் சொந்த ஊரில் இருந்து போன் செய்த நண்பர் ஒருவர், ஒரு பிரதான கட்சியின் பெயரை குறிப்பிட்டு, 'ஏம்பா, எங்க ஊருல, ஓட்டுக்கு, 500 ரூபாய் குடுத்துட்டானுவ... உங்க ஊருல எவ்வளவுடே கொடுத்தானுவ' என, ஆர்வமாக விசாரித்தார்.
இது, எனக்கு மட்டும் நேர்ந்த அனுபவம் அல்ல. தமிழகம் முழுக்கவே உறவினர்கள், நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் போன் செய்தால், கேட்ட முதல் கேள்வியே, 'எங்க ஊர்ல இந்த கட்சிக்காரங்க இவ்வளவு குடுத்தாங்க... அங்க, யார், எவ்வளவு கொடுத்தாங்க' என்பது தான்.\
நம் ஊரில், தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளுமே, அமைப்பு ரீதியிலும், பணம், படை பலத்திலும் ஒன்றுக்கொன்று குறைந்தது இல்லை. தி.மு.க., தரப்பில், 'கொரோனா நிவாரணம், 4,000 ரூபாய் வழங்கப்படும்' என, தேர்தல் வாக்குறுதி அளித்தால், அ.தி.மு.க., தரப்பில், 'ஆண்டுக்கு ஆறு காஸ் சிலிண்டர் இலவசம்' என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டனர்.
நம்பிக்கை இல்லை
இப்படி, இரு கட்சிகளும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகள், ஆள், அம்பு,சேனை பலத்துடன் தேர்தல் போரில் களம் இறங்கினாலும், அவர்கள் பிரதானமாக நம்பியது, 'ஓட்டுக்கு பணம்' என்ற பிரம்மாஸ்திரத்தை தான்.பிரசாரம் முடிந்ததும், இரண்டு கட்சிகளுமே, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடாவில், தீவிரமாக களம் இறங்கின. இந்த கட்சிகள்,'வானத்தை வில்லாக வளைப்போம்; மணலை கயிறாக திரிப்போம். உங்கள் வீட்டில், பாலாறும், தேனாறும் ஓடச் செய்வோம்' என, வாக்குறுதிகளை வாரி வழங்கினாலும், அதன் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை.
'ஆமா... இப்ப, இப்படித் தான் சொல்வர். ஜெயித்த பின், வாக்குறுதிகளை மறந்து விடுவர்' என்பது மக்கள் மனதில், பசுமரத்தாணி போல பதிந்துள்ளது. இதனால் தான், கடைசி நேரத்தில், தாங்கள் அளிக்கும் பணமே, தங்களை கரை சேர்க்கும் என்பதை, பிரதான கட்சிகள் இரண்டுமே உணர்ந்து உள்ளன.நம் வாக்காளர்களுக்கும், பணம் வாங்குவதில், இப்போது எந்த கூச்சநாச்சமும் இல்லை. இரண்டு கட்சிகள் தருவதையும் வாங்கி கொள்கின்றனர். 'இந்த பணம், நம் வரிப்பணத்தில் கொள்ளை அடித்தது தானே. அவர்கள் வீட்டு பணத்தையா தருகின்றனர்' என்ற சிந்தனையும், வாக்காளர்கள் மனதில் பதிந்து விட்டது.
முன்னாள் முதல்வர் காமராஜர் கூறியது போல, 'ரெண்டு கட்சிகளுமே, ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்கிறேன்' என்ற கணக்கில், தெருவுக்கு தெரு, வீட்டுக்கு வீடு, ஓட்டுக்கு, 500 - 1,000 ரூபாய் என, பணத்தை வாரிஇறைத்தன. சில பணக்கார வேட்பாளர்கள், 5,000 ரூபாய் கூட, ஓட்டுக்கு கொடுத்த கூத்தும் அரங்கேறியது. இரண்டு கட்சிகளும், தாங்கள் போட்டியிட்ட தொகுதிகள் மட்டும் என்றில்லை; தங்களது கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளிலும், பணம் கொடுத்தன.
தி.மு.க., கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளிலும், பணப் பட்டுவாடா நடந்துள்ளது. தேர்தல் ஜனநாயகம் பற்றி வாய்கிழிய பேசும் கம்யூ.,க்களும், கிடைத்த சொற்ப சீட்களுக்காக, இதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை.நிற்க! இந்த தேர்தலில், இவ்வளவு பணத்தை வாரியிறைத்தும், பதிவான ஓட்டு சதவீதம் என்னவோ, 72.78 தான். அதிலும், படித்தவர்கள், பண்பானவர்கள் நிறைந்த சென்னையில், வெறும், 59 சதவீதம் பேரே, தங்களது ஓட்டுகளை பதிவு செய்துள்ளனர்.
இவ்வளவு குறைந்த ஓட்டுப்பதிவு என்பது, நிஜமான ஜனநாயகத்தை பிரதிபலிக்காது. உதாரணமாக, சென்னையின் ஓட்டுப்பதிவு சதவீதத்தையே, ஒரு தொகுதிக்கான வரையறையாக எடுத்து கொள்வோம். சென்னையில் ஒரு தொகுதியில், 59 ஓட்டுகள் பதிவாகி உள்ளன என, வைத்து கொள்வோம்.ராமன், லட்சுமணன் என, பிரதான கட்சிகள் சார்பில் இருவரும், சிறிய கட்சிகள் சார்பில் மூவர் என, ஐந்து பேர் போட்டியிடுகின்றனர்.இதில், ராமன், 26 ஓட்டுகள், லட்சுமணன், 20, மற்ற மூவரும் முறையே, 6, 3, 4 ஓட்டுகள் பெறுகின்றனர். இதில், ராமன் வெற்றி பெற்றவராகிறார். 100 ஓட்டுகளில், 26 ஓட்டுகள் பெற்றவர் வெற்றி பெற்றவர் என்றால், அவரை, 74 பேர் நிராகரித்துள்ளனர் என்பது தானே உண்மை.
மேற்கண்ட கணக்கை விட்டு, பதிவான ஓட்டுகள் விகிதப்படி பார்த்தாலும், 59 ஓட்டுகளில், 33 ஓட்டுகள், ராமனுக்கு எதிராகவே விழுந்துள்ளன. ஆனால், அதை விட குறைவாக, 26 ஓட்டுகள் பெற்ற ராமன் ஜெயிக்கிறார் என்றால், இது எந்த வகையில் மக்களாட்சியை பிரதிபலிக்கிறது என்ற கேள்வி எழுகிறதா, இல்லையா?ஆகவே, ஓட்டுப்பதிவு சதவீதத்தை, 100 என, கொண்டு வர வேண்டும். அது உடனே சாத்தியம் இல்லை என்றாலும், குறைந்தபட்சம், 90 - 95 சதவீதமாவது உயர்த்த வேண்டும். அப்படி செய்தால் தான், உண்மையான மக்களாட்சிக்கு வழிவகை செய்ய முடியும்.
ஒவ்வொரு தேர்தலின்போதும், ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க, தேர்தல் கமிஷன் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விளம்பரங்களை செய்கிறது. இதற்காக, பல நுாறு கோடிகளை செலவிடுகிறது. எவ்வளவு தான் எடுத்து சொன்னாலும், அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே போய் விடுகிறது.
சாக்கு போக்கு
இதற்கு என்ன காரணம். 'ஆமாம்... நான் ஒருத்தன் ஓட்டு போட்டு தானா, நாட்டை மாற்ற முடியும். இங்க எல்லாருமே திருடர்கள் தான். எனக்கு யாருக்கும் ஓட்டளிக்க பிடிக்கலை' என, சாக்கு போக்கு சொல்பவர்கள் தான் இங்கு அதிகம்.இன்னும் பலர், ஓட்டுப்பதிவு நாளன்று கிடைக்கும் விடுமுறையை, குடும்பத்துடன் கொண்டாடவும், 'டிவி' பார்க்கவும், நண்பர்களுடன் சரக்கு, ஜாலி என கழிக்கவுமே விரும்பி, தங்களது ஜனநாயக கடமையை தவிர்த்து விடுகின்றனர்.
இன்னும் சில மேல்தட்டு வர்க்கத்தினர், அதாவது படுக்கையறை முதல் குளியலறை வரை, 'ஏசி' என, சொகுசாக வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள், வரிசையில் நிற்கவும், வெயிலில் சென்று ஓட்டு போடவும் தயங்கி, தங்களது ஓட்டுகளை பதிவு செய்யாமல் விட்டு விடுகின்றனர்.இவர்களை போன்றவர்கள் மிகவும் சொற்பமே. பெரும்பாலும், படித்த, நடுத்தர வர்க்கத்தினரே ஓட்டளிப்பதில் இருந்து, பின்வாங்கி இருக்கின்றனர்.
இவர்களை ஓட்டுச்சாவடிக்கு வரவழைக்க என்ன செய்வது? 'ஓட்டு போடாதவர்களின் ரேஷன் கார்டு, குடிநீர், மின் இணைப்பை துண்டிக்கலாம்' என, சில அறிவுஜீவிகள் ஆவேசமான கருத்துகளை தெரிவிப்பர்.ஆனால், இதெல்லாம் சர்வாதிகார நாட்டுக்கு தான் சரிப்பட்டு வரும். நம்ம ஊருக்கு இந்த முரட்டு வைத்தியம் எல்லாம் தோதுப்படாது.
அப்படி என்றால், வாக்காளர்களை எப்படி ஓட்டளிக்க வரவழைப்பது. ஆம்... ஓட்டுக்கு பணம் கொடுப்பது தான் ஒரே வழி. என்ன, அதிர்ச்சியாக இருக்கிறதா? 'இதை தானே, அரசியல் கட்சிகள் செய்து வருகின்றன. அதை கண்காணித்து, தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கிறது. சில இடங்களில் தேர்தலையே ஒத்தி வைத்துள்ளதே. இந்த நேரத்தில் இப்படி ஏடாகூடமாக கருத்து சொல்வதா' என, 'ஜெர்க்' ஆக வேண்டாம்.
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில், அரசியல் கட்சிகளின் பிரதான வாக்குறுதி, 'குடும்ப தலைவிகளுக்கு மாதாந்திர உரிமை தொகை' என்பது தான். அதையே சற்று மாற்றி, 'ஓட்டுரிமை தொகை' என நிர்ணயிக்கலாமே. ஆம்... தேர்தலில் ஓட்டளித்தவர்களுக்கு, தலா, 500 அல்லது 1,000 ரூபாய் என நிர்ணயிக்கலாம்.இதை வழங்குவதால், ஆளுங்கட்சி தான் பணம் வழங்குகிறது என்ற மனோபாவம் மக்களுக்கு ஏற்பட்டு, அந்தக் கட்சிக்கு ஆதரவாக மக்கள் ஓட்டளித்து விடும் அபாயம் உள்ளதே எனக் கேட்கலாம். ஆனால், இத்தொகையை, தேர்தல் கமிஷனே வழங்க வேண்டும்.
தேர்தலை நடத்தி முடிக்க, தேர்தல் கமிஷனுக்கு, அரசுகள்,முன்கூட்டியே பணம் வழங்குகின்றன. அதுபோல, ஓட்டுரிமை தொகைக்கு, இத்தனை ஆயிரம் கோடி என, ஒதுக்கி விடலாம்.'நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள் அல்லது 'நோட்டா'வுக்கு கூட பதிவு செய்யுங்கள்; ஆனால், ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டை பதிவு செய்து, உரிமை தொகையை பெற்றுக் கொள்ளுங்கள்' என, அறிவிக்கலாம்.
எத்தனையோ இலவச திட்டங்களுக்கு, அரசுகள் பல ஆயிரம் கோடி ரூபாயை அள்ளி விடுகின்றன. அந்த பணத்தில், சில ஆயிரம் கோடிகளை, ஓட்டுரிமை தொகைக்கு ஒதுக்குவதில் தவறில்லை. இந்த பணத்தை வினியோகிப்பது எப்படி என்ற கேள்வி எழும்.விரலில் வைத்த மையை காட்டி, தொகையை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கலாம். ஆனால், ரூபாய் நோட்டையே அச்சு அசலாக அடிக்க தெரிந்தவர்கள் உள்ள நாட்டில், போலி அடையாள மை தயாரிப்பது ஒன்றும் குதிரை கொம்பல்ல.
நாம் ஓட்டுச்சாவடிக்கு சென்று, ஓட்டு போடும் போது, நம் வாக்காளர் அட்டை நம்பரை பதிவு செய்து, நம் கையெழுத்து பெற்ற பின் ஓட்டளிக்க அனுமதிக்கின்றனர். ஒரு தொகுதியில் யார் யார் ஓட்டளித்தனர் என்பது ஆவணப்படுத்தப்படுகிறது.எனவே, அந்த ஆவணங்களின் பிரதிகளை வைத்து, தேர்தல் முடிந்த பின், குறிப்பிட்ட நாளில், அந்தந்த பகுதி ரேஷன் கடைகளுக்கு சென்று, ஓட்டுரிமை தொகையை வாக்காளர்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கலாம்.
தீபாவளி, பொங்கல் போன்ற தினங்களில், ஆளுங்கட்சி, 1,000, 2,000 ரூபாயை ரேஷன் கடைகள் மூலமாக, சில நாட்களில் வினியோகிக்கும் முறையை இதற்கும் பின்பற்றலாம். குடும்பத்தில் நான்கு பேர் ஓட்டு போட்டிருந்தால், அவர்கள் பட்டியல், அந்த ரேஷன் கடைக்கு சென்று விடும். அங்கு சென்று, ஓட்டுக்குரிய பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
இப்படி செய்வதன் மூலம், வீட்டில் சோம்பி துாங்கும் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என, அனைவரும் ஓட்டுச்சாவடிக்கு அலை அலையாக சென்று, தங்களது ஓட்டுகளை பதிவு செய்வர். சமீபத்தில் பொங்கல் பண்டிகைக்கு, அரசு வழங்கிய, 2,500 ரூபாயை, 2 கோடியே 10 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களில், 2 கோடியே, 6 லட்சம் மக்கள் வாங்கியுள்ளனர் என்கிறது, அரசின் புள்ளி விபரம். வெறும், 4 லட்சம் பேர் மட்டுமே வாங்கவில்லை.
சும்மா விடமாட்டார்கள்
அதிலும், 2,500 ரூபாய் பணத்தை வாங்கினாலும், சில ரேஷன் கடைகளில், 30 ரூபாய் கரும்பு தரவில்லை என, சண்டை போட்டவர்கள் பலர் உண்டு. நம் மக்கள், அரசாங்கம் இலவசமாக தரும் எதையும் சும்மா விடமாட்டார்கள்.தங்கள் வீட்டில், மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், 'டிவி' இருந்தாலும், அரசு தந்த இந்த இலவச பொருட்களை யாராவது வாங்காமல் இருந்தனரா? எனவே, தங்கள் ஓட்டுக்கு பணம் கிடைக்கும் என்றால், எவ்வளவு வேலைகள் இருந்தாலும், அதை ஒதுக்கி வைத்து விட்டு, ஓட்டுச்சாவடிக்கு ஓடோடி வந்து, தங்களது ஓட்டுகளை பதிவு செய்வர்.
மேலே சொன்னது போல, குளியலறை, 'ஏசி' கோமான்கள் சிலர், 'இந்த பிச்சைக்காசுக்கு கியூவில் நிற்பதா' எனக் கருதி, வராமல் போகலாம். அதனால், எந்த ஒரு பாதகமும் இல்லை. அவர்களது ஓட்டுகள், அதிகபட்சம், 1 முதல், 2 சதவீதம் கூட இருக்காது.ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மக்கள், கண்டிப்பாக ஓட்டுச்சாவடி நோக்கி படையெடுப்பர். இதனால், 90 - 95 சதவீதம் வரை ஓட்டுப்பதிவு நடக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
என்ன தான் கரடியாக கத்தினாலும், எத்தனை பிரபலங்களை வைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினாலும், பணம் என்ற சொல் செய்யும் மாயத்துக்கு இணையாகாது. இதன் மூலம், ஓட்டுப்பதிவு சதவீதம் உண்மையாகவே அதிகரிக்கும். உண்மையான ஜனநாயகம் தழைத்தோங்கும். தேர்தல் கமிஷன் சிந்திக்குமா?
எஸ்.ஜெயசங்கர நாராயணன்
பத்திரிகையாளர்
தொடர்புக்கு:
இ - மெயில்: jeyes1974@gmail.com