இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : மே 10, 2021 | Added : மே 10, 2021
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்பதுங்கு குழி கண்டுபிடிப்புஜம்மு: ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டிருப்பதாக ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து, அங்குள்ள பாக்லா என்ற பகுதியில், பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாதிகளின் பதுங்கு குழியை, நம் வீரர்கள் கண்டுபிடித்தனர். பின், அதில் இருந்த, 19
today, crime round up, இன்றைய, கிரைம் ரவுண்ட் அப்


இந்திய நிகழ்வுகள்

பதுங்கு குழி கண்டுபிடிப்பு

ஜம்மு: ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டிருப்பதாக ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து, அங்குள்ள பாக்லா என்ற பகுதியில், பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாதிகளின் பதுங்கு குழியை, நம் வீரர்கள் கண்டுபிடித்தனர். பின், அதில் இருந்த, 19 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால், பயங்கரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி தவறுதலாக வெடித்து போலீஸ்காரர் பரிதாப பலி

திருப்பதி: திருப்பதியில், தவறுதலாக கைத்துப்பாக்கி வெடித்ததில், போலீஸ்காரர் ஒருவர், பரிதாபமாக உயிரிழந்தார்.ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள துணைச் சிறைச்சாலையில் காவலராக பணியாற்றி வந்தவர் லட்சுமி நாராயண ரெட்டி, 49. நேற்று முன்தினம் இரவு பணியில் ஈடுபட்டிருந்த அவர், நேற்று காலை தன் பணியை மாற்ற சக காவலர் சித்தாரெட்டி வந்ததும், உடை மாற்றுவதற்காக தன் அறைக்கு சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்திற்குள் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது.இதையடுத்து, சித்தாரெட்டி அறைக்குள் சென்று பார்த்தபோது, லட்சுமிநாராயண ரெட்டி தரையில் விழுந்து கிடந்தார். மற்றவர்களின் உதவியுடன், மருத்துவமனைக்கு அவரை துாக்கிச் சென்றனர்.ஆனால் அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கைத்துப்பாக்கி தவறுதலாக வெடித்ததே லட்சுமி நாராயணரெட்டி இறந்ததற்கு காரணம் என, முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


தமிழக நிகழ்வுகள்

அரசு பஸ் மோதி ஒருவர் பலி
அன்னுார்:அன்னுார், கட்டபொம்மன் நகர், சுந்தரராஜன் மகன் குமார், 43. ஷேர் டிரேடிங் அலுவலகம் நடத்தி வந்தார்.நேற்று முன்தினம் மதியம், அவர் கணேசபுரத்தில் இருந்து, இருசக்கர வாகனத்தில், அன்னுார் நோக்கி சென்று கொண்டிருந்தார்.அப்போது, சத்தியில் இருந்து கோவை நோக்கி சென்ற, அரசு பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ், கரியாம்பாளையம் அருகே, வளைவில் மோட்டார் பைக் மீது மோதியது. இதில், தலை மற்றும் காலில் பலத்த காயம் அடைந்த குமார், அதே இடத்தில் இறந்தார். விபத்தின்போது, குமார், ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை.அன்னுார் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

11 ஆம்னி பஸ்கள் பறிமுதல்

சென்னை; ஊரடங்கை பயன்படுத்தி, விதிமீறலில் ஈடுபட்ட, ௧௧ ஆம்னி பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில், கொரோனா தடுப்புக்காக, இன்று முதல், இரண்டு வாரங்களுக்கு, முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதனால், தொழிலாளர்கள், அலுவலர்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக, நேற்றும், நேற்று முன்தினமும், அனைத்து நகரங்களில் இருந்தும், அரசு பஸ்கள் அதிகம் இயக்கப்பட்டன.சொகுசு மற்றும் விரைவான பயணத்துக்கு விரும்பியோர், ஆம்னி பஸ்களை நாடினர். அவற்றில் வழக்கத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இது குறித்து, புகார்கள் வந்ததால், உரிய ஆய்வு நடத்தி, நடவடிக்கை எடுக்கும்படி, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் உத்தரவிட்டார்.போக்குவரத்து கமிஷனர் ஜவஹர் தலைமையில், இணை கமிஷனர்கள், ஆர்.டி.ஓ.,க்கள், வாகன ஆய்வாளர்கள், அனைத்து ஊர்களிலும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, உரிய வரி செலுத்தாமல் இயக்கப்பட்டது மற்றும் அதிக கட்டணம் வசூலித்த வகையில், விருதுநகரில் 2; தஞ்சாவூரில் 1; சென்னையில் 2; கோவையில் 6 என, மொத்தம் 11 ஆம்னி பஸ்களை அதிகாரிகள் சிறைபிடித்தனர். மேலும் 14 லட்சத்து 13 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

1.25 கிலோ தங்கம் திருச்சியில் பறிமுதல்

திருச்சி: துபாயில் இருந்து வந்த விமானப் பயணியிடம், 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை, திருச்சி விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாயில் இருந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், நேற்று முன்தினம் இரவு, திருச்சி விமான நிலையம் வந்தது. விமானத்தில் வந்த பயணியரை, கஸ்டம்ஸ் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.சந்தேகத்தின் அடிப்படையில், காரைக்குடியைச் சேர்ந்த யாகூப், 30, என்ற பயணியை தனியே அழைத்து, அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அவர் கொண்டு வந்த டார்ச் லைட் பேட்டரியில் மறைத்து எடுத்து வந்த, இரண்டு தங்க குச்சிகளை, பறிமுதல் செய்தனர். அந்த இரு குச்சிகளும், 1.25 கிலோ இருந்துள்ளன. 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், யாகூப்பை கைது செய்து விசாரிக்கின்றனர்.

இறந்தவர் உடலை தொலைத்த ஜி.எச்., ஐந்து நாட்களாக தேடும் அவலம்

தஞ்சாவூர்: தஞ்சை அரசு மருத்துவமனையில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை தொலைத்து விட்டு, வேறு ஒருவரின் உடலை மாற்றி வழங்கியது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை கீழப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளி பாலகிருஷ்ணன், 46; மனைவி சங்கீதா, 38. இவர்களுக்கு, 14 வயதில் மகனும், 12 வயதில் மகளும் உள்ளனர்.கடந்த, 2ம் தேதி, பாலகிருஷ்ணனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், பாலகிருஷ்ணன் 5ம் தேதி, சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். அவரது உடலை, முகத்தை மூடிய நிலையில், உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.பட்டுக்கோட்டையில் உள்ள சுடுகாட்டில், தந்தையின் முகத்தை கடைசியாக மகன் பார்த்தபோது, வேறு ஒருவரின் முகமாக இருந்ததால் அதிர்ச்சியடைந்தார்.

உடலை தஞ்சை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று முறையிட்டுள்ளனர். மருத்துவமனை நிர்வாகத்தினர், உடலை தேடி வருவதாக கூறி அனுப்பி வைத்தனர்.நான்கு நாட்கள் கடந்த நிலையிலும், இதுவரை எந்த தகவலும் அளிக்காமல், மருத்துவமனை நிர்வாகத்தினர் அலட்சியமாக இருப்பதால், பாலகிருஷ்ணனின் மனைவி மற்றும் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சங்கீதா கூறியதாவது:கணவர் உடல் மாறி விட்டது என, பிரேத பரிசோதனை செய்தவர்களிடம் கேட்டபோது, அவர்கள் மிகவும் அலட்சியமாக, 'உடலை காணவில்லை, என்னாச்சுனு தெரியல' என்றனர்.'பிரச்னையை பெரிதுபடுத்த வேண்டாம்' என, மருத்துவமனை நிர்வாகத்தினர், எங்களை சமாதானம் செய்து அனுப்பும் நோக்கத்திலேயே செயல்பட்டனர். கொரோனாவிற்கு கணவரை பறிகொடுத்த துர்பாக்கிய நிலை ஒரு பக்கம், என்னையும் என் பிள்ளைகளையும் கலங்கடிக்கிறது.அவருக்கு செய்ய வேண்டிய இறுதி காரியத்தை இன்னும் செய்யாமல், எங்கள் வீட்டுக்கும் செல்ல முடியாமல், தஞ்சாவூரில் உள்ள அண்ணன் வீட்டில் முடங்கிஇருக்கிறோம்.என் கணவர் உடல் எனக்கு வேண்டும்; அவர் முகத்தை நானும், என் பிள்ளைகளும் கடைசியாக ஒரு முறை பார்க்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

1,000 மது பாட்டில்கள் பதுக்கல்

திருச்சி: கொரோனா ஊரடங்கு காலத்தில், அதிக விலைக்கு விற்க, மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த, முன்னாள் அமைச்சர் வளர்மதியின் சகோதரர் கைது செய்யப்பட்டார்.திருச்சி, உறையூர் மின்னப்பன் தெருவில், ஒரு வீட்டில் மது பாட்டில்கள் அதிகளவில் பதுக்கி வைத்திருப்பதாக, உறையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம், குறிப்பிட்ட வீட்டில், உறையூர் இன்ஸ்பெக்டர் மணிராஜ் சோதனை நடத்தினார். அப்போது, 40 அட்டை பெட்டிகளில், 1,000க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், மனோகரன், 46, என்பவரை கைது செய்தனர். இவர், அ.தி.மு.க., ஆட்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதியின் உடன் பிறந்த சகோதரர். வளர்மதிக்கு, கார் டிரைவராகவும் இருந்துள்ளார்.


latest tamil newsரூ.5 கோடி நகையுடன் கடை ஊழியர் மாயம்

திருச்சி; ஜுவல்லரி கடை ஊழியர், 5 கோடி ரூபாய் நகைகளுடன் மாயமானது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.திருச்சியில், கரூர் பைபாஸ் ரோட்டில், பிரணவ் ஜுவல்லரி உள்ளது.

இங்கு பணியாற்றி வரும் மார்ட்டின், 45, என்ற ஊழியர், 5 கோடி ரூபாய் பணத்துடன், நேற்று முன்தினம் காலை, சென்னைக்கு நகை வாங்க சென்றார். சென்னையில் பணத்தை கொடுத்து, நகைகளை வாங்கிய அவர், நேற்று முன்தினம் இரவு, திருச்சி திரும்பி இருக்க வேண்டும். ஆனால் வரவில்லை. நேற்று காலை வரை வராததால், கடையின் உரிமையாளர் மதன், நேற்று உறையூர் போலீசில் புகார் அளித்தார்.அதில், 'சென்னைக்கு நகை வாங்கச் சென்ற ஊழியர் மார்ட்டின் வரவில்லை. அவருடைய மொபைல் போனும், 'ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளது' எனக் கூறப்பட்டுள்ளது. இது குறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாஜி ராணுவ வீரர் வீட்டில் 75 பவுன், ரூ.50 லட்சம் கொள்ளை

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கருவூல காலனி முன்னாள் ராணுவ வீரர் உத்தமராஜா 59, வீட்டில் ரூ.50 லட்சம், 75 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.ராணுவத்தில் ஓய்வு பெற்ற பிறகு வெளிநாட்டில் வேலை செய்த இவர் ஒரு மாதத்திற்கு முன்பு ஒட்டன்சத்திரம் வந்தார். நேற்று காலை சொந்த ஊரான தேவத்துார் அருகே மடுரம்பட்டிக்கு மனைவி கனகேஸ்வரியுடன் சென்றார்.இந்த வேளையில் கதவு பூட்டை உடைத்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 75 பவுன் நகை, ரூ.50 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். டி.எஸ்.பி., அசோகன், இன்ஸ்பெக்டர் சீனிவாசன் விசாரிக்கின்றனர்.

நீரில் மூழ்கி தொழிலாளி பலி

அவிநாசி:அவிநாசி அருகே கருமாபாளையம் பாரதி நகரைச் சேர்ந்தவர் சின்னான், 50. சுமை தூக்கும் தொழிலாளி. நேற்று தனது வீட்டு அருகில் உள்ள தோட்டத்து தண்ணீர் தொட்டியில் குளிக்க சென்றுள்ளார். எதிர்பாரா விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். சேவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

மதுக்கடைகளுக்கு 'சீல்'

திருப்பூர்:கடந்த முறை கொரோனா ஊரடங்கின் போது, மதுக்கடைகள் திறந்து மது பாட்டில்கள் கள்ள மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது பல பகுதிகளிலும் பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது. இதையடுத்து மதுக்கடைகள் அனைத்தும் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது.தற்போதும் கடைகள் 14 நாட்களுக்கு திறக்க கூடாது என்பதால், நேற்று மாலை 6:00 மணியளவில் விற்பனை முடிந்து பூட்டி 'சீல்' வைக்கப்பட்டன.


உலக நிகழ்வுகள்

ஆப்கனில் பலி அதிகரிப்பு

காபூல்: தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பெண்கள் பள்ளி முன், நேற்று முன்தினம் மாணவியர் வெளியேறியபோது, மூன்று குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இதில் பலியானோர் எண்ணிக்கை, 50 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் பலரும், 11 - 15 வயதிற்கு உட்பட்டோர் என, உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குண்டு வெடிப்பிற்கு, எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.


latest tamil newsதுப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி

உட்லான்: அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணம் பால்டிமோரில், நேற்று ஒரு வீட்டில் தீ வைத்த மர்ம நபர், அதிலிருந்து வெளியேறியவர்களை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த சம்பவத்தில், ஒரு பெண் உட்பட மூவர் பலியாயினர்; இரு வீடுகள் எரிந்தன. துப்பாக்கியால் சுட்டவரை, போலீசார் சுட்டுக் கொன்றனர். இதற்கான காரணம் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X