மாமல்லபுரம் : நகர பேருந்துகளில் பெண்களுக்கு, இலவச பயண அனுமதி நடைமுறையால், மாமல்லபுரத்திற்கு இயக்கப்படும் சொகுசு பஸ்கள், சாதாரண வகைக்கு மாற்றப்பட்டு உள்ளன.
சென்னை திருவான்மியூரிலிருந்து, தடம் எண் 588, தாம்பரத்திலிருந்து, தடம் எண் 515 ஆகிய மாநகர் பஸ்கள், மாமல்லபுரத்திற்கு இயக்கப்படுகின்றன. துவக்கத்திலிருந்து இவை, சொகுசு பஸ்களாக இயங்குகின்றன. இத்தடங்களில், சாதாரண கட்டண வகை பஸ் இயக்கப்படவில்லை. தற்போது, மாநகர் சாதாரண பஸ்களில், பெண்கள் இலவச பயணம் செய்ய, தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு, நேற்று முன்தினம் நடைமுறைப்படுத்தப்பட்டது. மாமல்லபுரம் தடங்களில், சாதாரண கட்டண வகை பஸ் இல்லாத நிலையில், இப்பகுதி பெண்கள், இலவச பயணம் செய்ய இயலாது.
இப்பகுதியினர் பயன்பெற கருதி, தடம் எண் 588ல், இரு பஸ்கள்; தடம் எண் 515ல், இரு பஸ்கள், சாதாரண கட்டண பஸ்களாக மாற்றப்பட்டு உள்ளன. இந்த பஸ்களில், பெண்கள் இலவசமாக பயணிப்பதோடு, திருவான்மியூர் - மாமல்லபுரம் கட்டணம் 43 ரூபாயிலிருந்து, 21 ரூபாயாகவும், தாம்பரம் - மாமல்லபுரம் கட்டணம் 45 ரூபாயிலிருந்து, 21 ரூபாயாகவும், குறைந்தபட்ச கட்டணம் 11 ரூபாயிலிருந்து, 5 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.மாமல்லபுரம் - செங்கல்பட்டு தடத்தில், சாதாரண கட்டண அரசு பஸ் இன்றி, தடம் எண் 508ல் பெண்கள் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர். இதில், கட்டணம் குறைக்கப்படாமல், வழக்கமான விரைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE