தண்டையார்பேட்டை : வடசென்னை இளைஞர்கள் இணைந்து, கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில், ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்திய, ஆட்டோ ஆம்புலன்ஸ்களை செயல்படுத்தி வருகின்றனர்.
சென்னையில், கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவ மனைகளுக்கு செல்லும் ஆம்புலன்ஸ் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.எனவே கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில், வட சென்னை இளைஞர்கள் இணைந்து, கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்திய, ஆட்டோ ஆம்புலன்சை செயல்படுத்தி வருகின்றனர்.இதன் மூலம், மூச்சுத் திணறலால் பாதிக்கப்படும் நோயாளிகளை, ஆக்சிஜன் உதவியுடன் மருத்துவமனைக்கு, இலவசமாக அழைத்து செல்கின்றனர். மேலும் மருத்துவமனைகளில், படுக்கை வசதிகள் குறித்து, விசாரித்து அவர்களை மருத்துவமனைகளில் சேர்க்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர்.

இது குறித்து, கடமை கல்வி மற்றும் சமூகநல அறக்கட்டளை நிறுவனர் வசந்தகுமார் கூறியதாவது: கடமை கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை மூலம், கடந்த, எட்டு ஆண்டுகளாக, பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வருகிறோம்.அந்த வகையில், வட சென்னை மக்களின் பயன்பாட்டிற்காக, இந்த ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை, உருவாக்கி உள்ளோம்.இது, கடந்த இரு வாரங்களாக செயல்பட்டு வருகிறது.எந்நேரமும் செயல்படும் வகையில், இரண்டு ஆக்சிஜன் ஆட்டோ பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உள்ளது. தினமும், 150 முதல் 200 அழைப்புகள் வருகின்றன.

அதில், 20 முதல் 30 பேர் வரை, மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறோம்.கொரோனா நோயாளியை, மருத்துவமனையில் சேர்த்து வந்தவுடன், கிருமி நாசினி தெளித்து ஆட்டோவை சுத்தம் செய்வோம். பின் தான், அடுத்த நோயாளியை அழைத்துச் செல்வோம்.இப்பணியில் தன்னார்வலர்கள், 15 பேர் ஈடுபட்டுள்ளோம். அரசுடன் சேர்ந்து, மக்கள் பணி செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE