அரசியல் செய்தி

தமிழ்நாடு

எதிர்க்கட்சித் தலைவர் ஆனார் இ.பி.எஸ்.,

Updated : மே 11, 2021 | Added : மே 10, 2021 | கருத்துகள் (60+ 115)
Share
Advertisement
சென்னை : தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக, முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளருமான இ.பி.எஸ்., தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னையில் நேற்று நடந்த அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், ஒருமனதாக இம்முடிவு எடுக்கப்பட்டது. அதற்கான கடிதத்தை, கட்சி நிர்வாகிகள் நேற்று சட்டசபை செயலரிடம் வழங்கினர்.சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியை
எதிர்க்கட்சித் தலைவர், இ.பி.எஸ்.,

சென்னை : தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக, முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளருமான இ.பி.எஸ்., தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னையில் நேற்று நடந்த அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், ஒருமனதாக இம்முடிவு எடுக்கப்பட்டது. அதற்கான கடிதத்தை, கட்சி நிர்வாகிகள் நேற்று சட்டசபை செயலரிடம் வழங்கினர்.

சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்தது. ஆளும் கட்சியாக இருந்த அ.தி.மு.க., தோல்வியை சந்தித்தாலும், 66 தொகுதிகளில் வெற்றி பெற்று, பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.


போர்க்கொடிஅதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., சட்டசபை கட்சி தலைவரை தேர்வு செய்வதற்காக, அ.தி.மு.க.,- - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், 7ம் தேதி, சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது.சட்டசபை அ.தி.மு.க., கட்சி தலைவரே, தமிழக எதிர்க்கட்சி தலைவராவார் என்பதால், அப்பதவியை ஓ.பி.எஸ்.,சுக்கு வழங்கும்படி, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கினர். இ.பி.எஸ்.,சுக்கு தான் வழங்க வேண்டும் என, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தினர்.இ.பி.எஸ்., ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால், அவரது கை ஓங்கியது. ஒருமனதாக முடிவெடுக்க முடியாததால், அன்றைய கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.


குழப்பம்நேற்று காலை மீண்டும், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், கட்சி அலுவலகத்தில் காலை, 10:00 மணிக்கு துவங்கியது. எம்.எல்.ஏ.,க்கள் வைத்திலிங்கம், விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, ஜெகன்மூர்த்தி ஆகியோர் கூட்டத்திற்கு வரவில்லை; மற்றவர்கள் வந்திருந்தனர்.

கூட்டத்தில் ஓ.பி.எஸ்., பேசியதாவது:கட்சிக்குள் ஏதோ பெரிய குழப்பம் இருப்பது போல, பொது மக்கள் மத்தியில் பேச்சு இருக்கிறது. ஊடகங்களும் அதை பெரிதாக எழுதுகின்றன. எதிர்க்கட்சி தலைவராக யாரை தேர்வு செய்யப் போகிறோம் என்பது குறித்த விவாதம் நடக்கிறது. எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய, ஒரு பெட்டி வைக்கப் போகிறோம். ரகசிய ஓட்டெடுப்பு மூலம் எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்யப் போகின்றனர் என்றெல்லாம் செய்தி பரவி இருக்கிறது.நான் பதவிக்கு ஆசைப்படவில்லை. என்னிடம் ஒப்படைத்த பதவியில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறேன். மூன்று முறை முதல்வராக இருந்து விட்டேன். அதை விட பெரிய பதவி வரப் போவதில்லை.

முதல்வராக இருந்த இ.பி.எஸ்., முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். அதற்கு காரணம், என்னைப் போன்றவர்கள் பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்தது தான். அதேபோல, இ.பி.எஸ்., இந்த முறை எதிர்க்கட்சி தலைவர் பதவியை, கட்சி நலன் கருதி, பொதுவான நபருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும். முன்னாள் சபாநாயகர் தனபாலை தேர்வு செய்யலாம். நாம் எல்லாரும் ஒன்றாக, அவரை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யலாம். பொதுவான நபர் ஒருவர் தேர்வு செய்யப்படும் நிலை உருவாகும் போது, யாருக்கு ஆதரவாகவும் கட்சி முடிவெடுத்தது என்ற நிலை இருக்காது.இவ்வாறு அவர் பேசியதாக கட்சி வட்டாரங்கள் கூறின.

அதுவரை அமைதியாக இருந்த, முன்னாள் சபாநாயகர் தனபால் பேசியதாவது:எதிர்க்கட்சித் தலைவராக செயல்படும் அளவுக்கு, எனக்கு தகுதி இருக்கிறது என நினைத்து, பிரச்னையை தீர்க்க, என்னை முன்னிலைப் படுத்தியதற்கு நன்றி.
ஏற்க மறுப்பு


கட்சிக்குள் கோஷ்டி பூசல் இருக்கிறது. அதனால், இரு தரப்பினர் மோதிக் கொள்கின்றனர் என யாரும் நினைக்கக் கூடாது; அது குறித்து பேசவும் கூடாது. இந்த இக்கட்டான சூழலில், பொதுவான நபராக இருந்து, சட்டசபையில் கட்சியை வழிநடத்திச் செல்வதில், எனக்கு பிரச்னை இல்லை. ஏற்கனவே, சபையையே நடத்திய அனுபவம் இருக்கும் போது, எதிர்கட்சித் தலைவராக செயல்படுவதில் பிரச்னை இல்லை. ஆனால், இரு தரப்பும் ஒருமனதாக ஏற்று, போட்டியில்லாமல் தேர்வு செய்யப்படும் நிலை உருவானால் மட்டுமே, அதற்கு ஒப்புக் கொள்வேன்.இவ்வாறு தனபால் கூறினார்.

ஆனால், இ.பி.எஸ்., ஆதரவு எம்.எல்.ஏ.,க்களான வேலுமணி, தங்கமணி ஆகியோர் ஏற்க மறுத்து, 'இ.பி.எஸ்., எதிர்க்கட்சி தலைவராக வேண்டும்' என, வலியுறுத்தினர்.அவர்களை தொடர்ந்து பேசிய, இ.பி.எஸ்., ஆதரவாளர்கள் அனைவரும், ஒருமித்த குரலில், அதை ஆமோதித்தனர்.

இதனால், விரக்தி அடைந்த ஓ.பி.எஸ்., வேண்டா வெறுப்பாக சம்மதம் தெரிவித்து விட்டு, கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.கூட்டம் நிறைவடைவதற்கு முன்னரே, அவர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டார். பகல், 1:00 மணிக்கு அவர் வெளியில் வந்தபோது, அவரது ஆதரவாளர்கள் அவரை வாழ்த்தி கோஷமிட்டனர். கூட்ட நெரிசலில், பெண் ஒருவர் தடுமாறி கீழே விழுந்தார். உடனே, அருகிலிருந்தோர் அவரை துாக்கி விட்டனர். அதன்பின், ஓ.பி.எஸ்., அங்கிருந்து சென்றார். அவருடன், எம்.எல்.ஏ., மனோஜ் பாண்டியன் உடன் சென்றார்.சிறிது நேரம் கழித்து, இ.பி.எஸ்., புறப்பட்டார்.ஒரு மனதாக தேர்வு


அப்போது ஆதரவாளர்கள், அவரை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பினர்.கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், தலைமை செயலகம் சென்றனர். அங்கு, சட்டசபை செயலர் சீனிவாசனை சந்தித்து, அ.தி.மு.க., சட்டசபை கட்சி தலைவராக, இ.பி.எஸ்., ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை வழங்கினர்.சட்டசபை அ.தி.மு.க., தலைவராக, இ.பி.எஸ்., தேர்வு செய்யப்பட்டுள்ளதால், அவர் எதிர்க்கட்சி தலைவராகிறார்.

அதேநேரம், எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பி.எஸ்.,சை இருக்கும்படி, எம்.எல்.ஏ.,க்கள் கூற, அவர் மறுத்துள்ளார்.எனவே, துணைத் தலைவர் மற்றும் சட்டசபை கொறடாவுக்கு, போட்டி எழுந்துள்ளது.அ.தி.மு.க.,வில், அனைத்து பொறுப்புகளில் இருந்தும், இ.பி.எஸ்., தரப்பினர், ஓ.பி.எஸ்.,சை ஓரங்கட்டி வருவது, அவரது ஆதரவாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கட்சி முழுமையாக இ.பி.எஸ்., கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில், ஓ.பி.எஸ்., என்ன செய்யப் போகிறார் என்ற பரபரப்பு, அக்கட்சி வட்டாரத்தில் காணப்படுகிறது.


போலீஸ் குவிப்பு!


அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்த போது, ஓ.பி.எஸ்., -- இ.பி.எஸ்., ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்படும் என, தகவல் பரவியது. அதைத் தொடர்ந்து, கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டனர். கட்சி அலுவலகத்தில், தொண்டர்கள் சமூக இடைவெளியின்றி கூடி நின்றனர். போலீசார் ஒலிபெருக்கியில், 'அனைவரும் முக கவசம் அணியுங்கள்; சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள்' என, அறிவுறுத்தினர்.


'ஓட்டெடுப்பு நடத்தினால் இ.பி.எஸ்.,சுக்கே வாய்ப்பு'


எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியதாவது:முன்னாள் சபாநாயகர் தனபாலை, இந்தப் போட்டிக்குள் கொண்டு வந்து நுழைப்பது, இ.பி.எஸ்., வரக்கூடாது என்பதற்கான மாற்றுத் திட்டம் தான். எம்.எல்.ஏ.,க்களை பொறுத்தவரை, ஓட்டெடுப்பு நடத்தினால், இ.பி.எஸ்.,சுக்கு தான் வாய்ப்பு இருக்கிறது. ஓட்டெடுப்பு வரை செல்லாமல் இருப்பது தான், எல்லாருக்கும் கவுரவம். யார் இந்த விஷயத்தில் குறிக்கிட்டு எதைப் பேசினாலும், இறுதியில் இ.பி.எஸ்.,சின் உழைப்பு, கட்சியை கட்டுக்கோப்பாக நடத்திச் செல்லும் பாங்கு தான் வெளிப்படும்; அதுவே வெல்லும்.

தமிழகத்தை நான்காண்டு காலம் சிறப்பாக வழி நடத்திய, இ.பி.எஸ்.,சுக்கு தான், எதிர்கட்சித் தலைவராக இருந்து, கட்சியை சட்டசபையில் நடத்திச் செல்லும் முழு தகுதியும் இருக்கிறது. அதனால், இ.பி.எஸ்.,சுக்கு மாற்றே இல்லை. அவர் தான் எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட வேண்டும்இவ்வாறு வேலுமணி பேசினார்.
அதைத் தொடர்ந்து, கே.பி.முனுசாமி உள்ளிட்ட பல தலைவர்களும் தங்கள் கருத்தை பேசினர். அவர்களில் சிலர், 'கட்சியை மன்னார்குடி வகையறாக்களிடம் இருந்து மீட்டு, உண்மையான ஜெ., விசுவாசிகளால் நடத்தப்படும் கட்சியாக, அ.தி.மு.க.,வை உருவாக்கி வைத்திருப்பவர், இ.பி.எஸ்., தான். 'ஓ.பி.எஸ்., பேச்சு, -நடவடிக்கைகளை பார்க்கும் போது, அவர் மன்னார்குடி ஆட்களுக்கு சாதகமாக செயல்படுவது போல தெரிகிறது. எனவே, இ.பி.எஸ்.,சை எதிர்க்கட்சித் தலைவராக்க வேண்டும்; 66 அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களில், 60 பேர், இ.பி.எஸ்.,சை ஆதரிப்பவர்கள்' என்றனர்.

இறுதியில், இ.பி.எஸ்., தான் எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்படுகிறார் என, மூத்த தலைவர்கள் அறிவித்தனர். அதற்கு முன், இ.பி.எஸ்.,சை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்து தயார் செய்யப்பட்ட கடிதத்தில், ஓ.பி.எஸ்., வேண்டா வெறுப்பாக கையெழுத்திட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (60+ 115)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,,யூ.எஸ்.ஏ
12-மே-202114:48:12 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN எதிர் கட்சி தலைவர் பதவியை பொறுப்பா செய்வாரு
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
11-மே-202123:24:35 IST Report Abuse
Pugazh V ஓபிஎஸ் நாளை குருமூர்த்தி ஆபீசுக்கு போவார். அவர், நீயெல்லாம் ஆம்பளயா? ஜெயலலிதா சமாதில போய் யோகா பண்ணு ம்பார். அங்கே போகாதீங்க. ஊரடங்கை மீறியதாக கைது பண்ணிருவாங்க.
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
11-மே-202118:19:45 IST Report Abuse
karutthu உரிமை உள்ளது .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X