உடன்பிறப்புகளுக்கு சிங்காநல்லுார் சிக்கல்: ஆபிசர்களுக்கு எடுக்கப்போறாங்க சுளுக்கு | Dinamalar

உடன்பிறப்புகளுக்கு 'சிங்காநல்லுார் சிக்கல்': ஆபிசர்களுக்கு எடுக்கப்போறாங்க 'சுளுக்கு'

Updated : மே 11, 2021 | Added : மே 11, 2021 | |
முழு ஊரடங்கு எப்படியிருக்கிறது என்று பார்க்க, சித்ராவும், மித்ராவும் நகர்வலம் புறப்பட்டனர்.முக கவசம், கையுறை, ஹெல்மெட் அணிந்து கொண்டு, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா. பின்இருக்கையில் அமர்ந்த மித்ரா, ''என்னக்கா, ஒவ்வொரு நாளும் கேஸ் எண்ணிக்கை கூடிட்டே போகுது. 'டெத் ரேட்'டும் அதிகரிச்சுக்கிட்டே இருக்காமே. புது கவர்மென்ட்டுக்கு தெரியுமா தெரியாதா,'' என, பேச்சை
 உடன்பிறப்புகளுக்கு 'சிங்காநல்லுார் சிக்கல்': ஆபிசர்களுக்கு எடுக்கப்போறாங்க 'சுளுக்கு'

முழு ஊரடங்கு எப்படியிருக்கிறது என்று பார்க்க, சித்ராவும், மித்ராவும் நகர்வலம் புறப்பட்டனர்.முக கவசம், கையுறை, ஹெல்மெட் அணிந்து கொண்டு, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா.

பின்இருக்கையில் அமர்ந்த மித்ரா, ''என்னக்கா, ஒவ்வொரு நாளும் கேஸ் எண்ணிக்கை கூடிட்டே போகுது. 'டெத் ரேட்'டும் அதிகரிச்சுக்கிட்டே இருக்காமே. புது கவர்மென்ட்டுக்கு தெரியுமா தெரியாதா,'' என, பேச்சை ஆரம்பித்தாள்.'

'மித்து, கொரோனா விஷயத்துல எதையும் மூடி மறைக்கக் கூடாதுன்னு, தெளிவா உத்தரவு போட்டிருக்காங்க. இருந்தாலும், ஜனங்க கஷ்டப்படக்கூடாதுன்னு, முழு ஊரடங்கு சமயத்திலும் அத்தியாவசிய கடைகளை, 12:00 மணி வரைக்கும் திறந்து வைக்கச் சொல்லி இருக்காங்க,''

''அதுவும் தப்பு போலிருக்கு. இந்தா பாரு...ஊரடங்கு மாதிரியே தெரியலை. ஏகப்பட்ட பேரு ஊர் முழுக்க சுத்திக்கிட்டு இருக்காங்க. போலீஸ்காரங்களும் யாரையும் தடுக்கவும் மாட்டேங்கறாங்க, கண்டிக்கவும் மாட்டேங்கறாங்க,'''

'இப்படி, ஒவ்வொருத்தரும் ஊர் சுத்துனா, அப்புறம், எப்படி தொற்று கட்டுக்குள்ள வரும்,'''

'யெஸ், நீ சொல்றதும் சரிதான். மருத்துவத்துறையினரும் அதைத்தான் சொல்றாங்க. முதல் அலை பரவுனப்ப அமல்படுத்துன மாதிரி, எந்த கடையும் திறக்க அனுமதிக்கக் கூடாது. முழு ஊரடங்கை கடுமையா அமல்படுத்தி, மக்கள் நடமாட்டத்தை தடுத்தா மட்டும்தான், தொற்று பரவலை தடுக்க முடியும்னு சொல்றாங்க,''

''அவனவன் உயிர் பயத்துல அல்லாடிக்கிட்டு இருக்கான். கொரோனாவால், உயிரிழந்தவங்க பாடியை கொடுக்கறதுக்கும் கரன்சி கேக்குறாங்களாமே,''

''ஆமாப்பா, உண்மைதான்! நானும் கேள்விப்பட்டேன். இ.எஸ்.ஐ., மருத்துவமனையிலதான் இந்த கொடுமை நடக்குதாம். உடலை ஒப்படைக்கறதுக்கு, 2,000த்துல இருந்து, 8,000 ரூபாய் வரைக்கும் கேக்குறாங்களாம்,'''

'என்ன கொடுமை இது,''''மித்து, ஹெல்த் டிபார்ட்மென்ட்டுல இருக்கற அதிகாரிங்க எல்லோருமே போன ஆட்சிக்காலத்துல நியமிக்கப்பட்டவங்க. பலரும் கொரோனாவை வச்சு, பல லகரம் சம்பாதிச்சவங்க. நம்மை எப்படியும் புது அரசு மாத்திடும்ங்கிற நெனைப்புல, அக்கறை இல்லாம அலட்சியமா வேலை பார்க்குறாங்க,''

''கொரோனா முதல் அலை பரவுனப்ப, பிரைவேட் ஹாஸ்பிடல், லேபுகள்ல பெரிய தொகை வசூலிச்சு, ஈரோட்டுல வீடு கட்டுன, அதிகாரியை தானே சொல்றீங்க,''

''ஆமா, அவரே தான்,'' என்ற சித்ரா, ''சில ஆஸ்பத்திரிகள்ல, ஒரு நாளைக்கு, 2 லட்சம், 3 லட்சம்னு வசூலிக்க ஆரம்பிச்சிட்டாங்களாம். பெட் வேணும்னா, இதுதான் கட்டணம். முடிஞ்சா, சேருங்க; இல்லேன்னா போய்க்கிட்டே இருங்கன்னு சொல்றாங்களாம்,'''

'காப்பீடு திட்டத்துல சிகிச்சை பெறலாம்னு, கவர்மென்ட் சொல்லி இருந்தாலும், தெளிவான உத்தரவு இன்னும் வெளியாகாததால, கரன்சியை அள்ளிக்கிட்டு இருக்காங்க. ஆந்திரா மாதிரி, உத்தரவை கடுமையா அமல்படுத்துனாதான், சரிப்பட்டு வரும் போலிருக்கு,'''

'ஆஸ்பத்திரிக்கு ஜனங்க போனா, தடுப்பூசி 'ஸ்டாக்' இல்லைன்னு சொல்றாங்க; இருந்தாலும், வி.ஐ.பி.,களுக்கு மட்டும் போடுறாங்களாமே,''

''கார்ப்பரேஷன் ஆபீசுல நடந்த விவகாரத்தை சொல்றீயா. இரண்டு பாட்டில் தடுப்பூசி மருந்து, பத்திரமா எடுத்து வச்சிருந்தாங்களாம். லேடி அதிகாரிக்கு நெருக்கமானவங்க, உறவுக்காரங்க, வி.ஐ.பி.,ன்னு சொல்லி ஏகப்பட்டவங்க வந்து, ஊசி போட்டுட்டு போயிருக்காங்க,''

''அப்ப, சாதாரண ஜனங்க ஒவ்வொரு முகாமா அல்லாடிக்கிட்டே இருக்கணுமா, என்ன,'' என, மித்ரா கொந்தளித்தாள்.

''மித்து, கொரோனா விஷயத்துல ஹெல்த் டிபார்ட்மென்ட்காரங்க சொல்றதை உண்மைன்னு அரசு நம்பிக்கிட்டு இருக்கு. உளவுத்துறை இனி, உண்மையை புட்டு புட்டு வச்சாங்கன்னா, ஹெல்த் டிபார்ட்மென்ட் அதிகாரிகளை 'சுளுக்கு' எடுக்க ஆரம்பிச்சிடுவாங்களாம்,''

''அதெல்லாம் இருக்கட்டும். எஸ்.பி.சி.ஐ.டி., போலீசார், ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா போறாங்களாமே,'''

'அதுவா, கொரோனா விஷயத்துல அதிகாரிகள் சொல்றதை அரசு முழுமையா நம்பலை. அதனால, எஸ்.பி.சி.ஐ.டி., போலீஸ்காரங்க, அவுங்களுக்கு ஒதுக்குன லிமிட்டுக்குள்ள இருக்குற ஆஸ்பத்திரிக்குள்ள போயி, உண்மை நிலையை கண்டுபிடிச்சு, 'உள்ளது உள்ளபடி' அறிக்கையா அனுப்பனும் சொல்லி இருக்காங்களாம். தெனமும் எத்தனை பேரு அட்மிட் ஆகுறாங்க; எவ்வளவு பேரு இறக்குறாங்க; தடுப்பூசி தட்டுப்பாடு இருக்கா, இல்லையான்னு சொல்லணுமாம்,''

''எந்த பாதுகாப்பும் இல்லாம, ஆஸ்பத்திரிக்குள்ள போயிட்டு வர்றதுனால, பயத்துல, வீட்டுக்கு போகாம, லாட்ஜ்ல ரூம் எடுத்து தங்கியிருக்காங்களாம். ஆஸ்பத்திரியிலும் உண்மையை சொல்றதுக்கு தயங்குறதா எஸ்.பி.சி. ஐ.டி., போலீஸ்காரங்க புலம்புறாங்க,'' என்ற சித்ரா, கலெக்டர் அலுவலகம் எதிரே, மரத்தடியில் ஸ்கூட்டரை நிறுத்தினாள்.

சைக்கிளில் வந்த சுக்குமல்லி காபி விற்பவரிடம், இருவரும் சூடாக காபி வாங்கிக் கொண்டனர்.''தேர்தலுக்கு முன்னாடி கொடுத்த புகாருக்கு, தேர்தலுக்கு பின்னாடி நடவடிக்கை எடுத்திருக்காங்களாமே,'' என காபியை உறிஞ்சியபடி, 'ரூட்' மாறினாள் மித்ரா.'

'பொதுமக்கள் தரப்புல வந்த ஒரு புகாரை, ஐ.ஜி., ஆபீஸ்ல இருந்து விசாரிக்கச் சொல்லியிருக்காங்க. எஸ்.பி., ஆபீஸ் இன்ஸ்.,சும், பேரூர் ஸ்டேஷன் இன்ஸ்.,சும் 'அசால்ட்'டா விட்டுட்டாங்க. டி.எஸ்.பி., விசாரிச்சு, தகவல் சொல்லியிருக்காரு. இப்போ, ரெண்டு இன்ஸ்.,களையும் சரகம் விட்டு சரகம் மாத்திட்டாங்களாம்,'''

'அந்த ரெண்டு பேரும், முந்தைய ஆட்சிக்காலத்தில், இலைக்கட்சி வி.ஐ.பி.,க்கு நெருக்கமா இருந்தவங்கன்னு சொல்வாங்களே,''

''ஆமாப்பா, நெருக்கம் காட்டிய அதிகாரிகள் எல்லாம், இப்ப, வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு அல்லாடிக் கிட்டு இருக்காங்க,'' என்றபடி, காபியை ருசித்தாள் சித்ரா.இருவரும் பேசிக்கொண்டே, கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்றனர்.

அங்கிருந்த ஜீப் ஒன்றை பார்த்த மித்ரா, ''டிஜிட்டல் விளம்பர போர்டு விவகாரத்தில், கலெக்டர் அலுவலக அதிகாரி, கல்லா கட்டுறாராமே,'' என, கேட்டாள்.''ஆமாப்பா, விளம்பர போர்டு வைக்கக்கூடாதுன்னு, ஐகோர்ட் உத்தரவு இருக்கு. இப்போதைய கலெக்டரும் அனுமதி கொடுக்கலை; முந்தைய கலெக்டரும் அனுமதி கொடுக்கலை. இருந்தாலும், முந்தைய ஆட்சியாளர்களின் பினாமி கம்பெனிகாரங்க, நேரடியாவும், சப்-கான்ட்ராக்ட் விட்டும், போர்டு வச்சிருக்காங்க. கலெக்டர் உதவியாளர் ஒருத்தரு, இந்த விவகாரத்துல, கரன்சியை அள்ளியிருக்காரு,''

''அந்த அதிகாரிக்கு, நம்மூருதான் சொந்த ஊராம். வருவாய்த்துறை அதிகாரிகளை, சொந்த மாவட்டத்துல போஸ்ட்டிங் போடக்கூடாதுங்கிறது ரூல். அதனால, திருப்பூர் வீட்டை கணக்கு காட்டி, சொந்த மாவட்டமா சொல்லி, 'போஸ்ட்டிங்' வாங்கியிருக்காராம்,'''

'அவரோட சம்சாரம், தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்துறாங்களாம். இவருடைய அதிகாரத்தை பயன்படுத்தி, அந்த நிறுவனத்துக்கு ஏகப்பட்ட வேலைகளை சாதித்துக் கொள்கிறாராம்,''அப்போது, கார்ப்பரேஷன் ஜீப் ஒன்று, கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைந்தது. அதை கவனித்த மித்ரா, ''அக்கா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி, ஆபீசர்ஸ் இடையே பதவி சண்டை நடந்துச்சாமே,'' என, கிளறினாள்.

''ஆமாப்பா, உண்மைதான்! உயரதிகாரிகள் தலைமையில ஆய்வு கூட்டம் நடந்திருக்கு. டெக்னிக்கல் அசிஸ்டென்ட் போஸ்ட்டிங்கிற்கு, ஆள் வேணுங்களான்னு கேட்டிருக்காங்க,''

''உடனே, நம்ம கார்ப்பரேஷனுக்கு ரெண்டு நிர்வாக பொறியாளர் போஸ்ட்டிங்தான் 'அலாட்மென்ட்'. ஆனா, இல்லாத போஸ்ட்டிங்கிற்கு கூடுதல் பொறுப்புன்னு சொல்லி, அதிகாரி நியமிச்சிருக்கீங்கன்னு, ஞானமுள்ளவரு கேள்வி எழுப்பியிருக்காரு,''

''அப்புறம், என்னாச்சு,''

''டவுன் பிளானிங் ஆபீசர் பதவி எனக்குதான் கொடுக்கணும்; என்னிடம் அரசாணை இருக்குன்னு இன்னொரு அதிகாரி, போர்க்கொடி துாக்கியிருக்காரு. உடனே, லேடி ஆபீசர் குறுக்கிட்டு, நான் தான் ஒரிஜினல்; என்னிடம் இருக்கற ஆர்டர்தான் ஒரிஜினல்னு சொல்லியிருக்காங்க,''

''இவுங்க பஞ்சாயத்து எப்பவுமே தீராது போலிருக்கே,'' என்ற மித்ரா, ''கமல் கட்சியை காரணமாச் சொல்லி, உடன்பிறப்புகள் தப்பிக்க பார்க்குறாங்களாமே,'' என, அரசியல் சப்ஜெக்ட்டுக்கு தாவினாள்.

''ஆமா, மித்து! நானும் கேள்விப்பட்டேன். தேர்தல் பரப்புரைக்கு வந்த ஸ்டாலின், 'அ.தி.மு.க., கோட்டையை தகர்த்தெறிவோம்'னு, பேசியிருந்தாரு. ஆனா, 10 தொகுதியையும் அ.தி.மு.க., கைப்பத்தியிருக்கு; சிங்காநல்லுார் தொகுதியை பறிகொடுத்ததுனால, தி.மு.க., தலைமை அதிர்ச்சியாகி இருக்கு,''

''கமல் கட்சிக்காரங்க, ஓட்டை பிரிச்சதுனால, வெற்றி கை நழுவி போயிடுச்சுன்னு கட்சிக்காரங்க சொல்லியிருக்காங்க. அதை தலைமை நம்பலையாம்.எம்.பி., எலக்சன்லயும் கமல் கட்சி போட்டி போட்டுச்சு. அப்ப, தி.மு.க., கூட்டணி வேட்பாளர் வாங்குன ஓட்டுகளை, இப்ப ஏன் வாங்க முடியலைன்னு கேட்குறாங்களாம்,''

''கட்சிக்காரங்க உள்ளடி வேலை செஞ்சதுனால தோத்தோமா, உண்மையாகவே ஜனங்க நிராகரிச்சாங்களான்னு விசாரிக்கிறாங்களாம்,''இருவரும் பேசிக்கொண்டே, கலெக்டர் அலுவலக மேல்தளத்துக்கு படியேறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X