இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : மே 11, 2021 | Added : மே 11, 2021
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்ஒலிம்பிக் வீரருக்கு 'நோட்டீஸ்'புதுடில்லி: டில்லியின் சத்ராசல் ஸ்டேடியத்தில் மல்யுத்த வீரர்களுக்கு இடையே நடந்த தனிப்பட்ட மோதலில், 23 வயது வீரர் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக, இரு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் தலைமறைவானதால், தேடப்படும் நபர் என்பதற்கான 'லுக் அவுட்
today, crime, round up, இன்றைய, கிரைம் ரவுண்ட் அப்


இந்திய நிகழ்வுகள்ஒலிம்பிக் வீரருக்கு 'நோட்டீஸ்'

புதுடில்லி: டில்லியின் சத்ராசல் ஸ்டேடியத்தில் மல்யுத்த வீரர்களுக்கு இடையே நடந்த தனிப்பட்ட மோதலில், 23 வயது வீரர் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக, இரு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் தலைமறைவானதால், தேடப்படும் நபர் என்பதற்கான 'லுக் அவுட் நோட்டீஸ்' போலீசார் தரப்பில் வழங்கப்பட்டு உள்ளது

'கால் சென்டர்' மோசடி

ஆமதாபாத்: 'குஜராத்தின் ஆமதாபாதில் போலி 'கால் சென்டர்' நடத்திய அகிலேஷ் நாயர், 23, உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அமெரிக்க மக்களை குறிவைத்து அமெரிக்காவின் விரைவு கடன் நிறுவனம் என மோசடி செய்துள்ளது, விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆக்சிஜன் தடைபட்டதால் 11 பேர் பலி

திருப்பதி: ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள ரூயா அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன், 'சப்ளை' தடைபட்டதால், 11 கொரோனா நோயாளிகள் உயிர் இழந்தனர்.

ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்., காங்., ஆட்சி நடக்கிறது.இம்மாநிலத்தின், திருப்பதியில் உள்ள ரூயா அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சைப் பிரிவில், 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு, 5 தீவிர சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. அதில்,135 நோயாளிகள் வரை வென்ட்டிலேட்டர் வாயிலாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை, 7:30 மணியளவில் வென்ட்டிலேட்டருக்கு வரவேண்டிய ஆக்சிஜன், 'சப்ளை' திடீரென தடைபட்டது.

இதனால், ஆக்சிஜன் சப்ளை இல்லாமல், நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதில், 11 நோயாளிகள் மூச்சு திணறி உயிரிழந்தனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த நோயாளிகளின் உறவினர்கள், ஆத்திரத்தில் மருத்துவமனை கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

இந்த சம்பவம் குறித்து, அதிகாரிகள் கூறியதாவது:ஆக்சிஜன் சப்ளை குறைய துவங்கியஉடன், ஊழியர்கள் அதை கவனித்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் மூலம் அதை நிரப்பும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, 'கம்ப்ரசர்' அளவு குறைந்ததால், ஆக்சிஜன் சப்ளை தடைபட்டது. மற்றபடி, ஆக்சிஜன் சப்ளை முற்றிலுமாக நிற்கவில்லை. இந்த சம்பவத்தில் இதுவரை, 11 பேர் உயிரிழந்துள்ளனர். 13க்கும் மேற்பட்டோர், கவலைக்கிடமாக உள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவமனை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


தமிழக நிகழ்வுகள்

நடைபாதையில் துாங்கிய பெண் கார் ஏறியதில் பரிதாப பலி

பிராட்வே : -பிராட்வேயில், நள்ளிரவில் நடைபாதையில் துாங்கி கொண்டிருந்த பெண் மீது, கார் ஏறியதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை பிராட்வே, எம்.கே.கார்டன் தெருவைச் சேர்ந்தவர் பரமசிவம், 53; இவர் மனைவி செல்வி, 50. இவர்கள், அங்குள்ள நடைபாதையில் வசித்து வந்தனர்.நேற்று முன்தினம் நள்ளிரவு செல்வி, நடைபாதையில் துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ராசி அசமது, 30 என்பவர் ஒட்டி வந்த கார், நடைபாதையில் ஏறியது. இதில், அங்கு துாங்கிக் கொண்டிருந்த செல்வி மீதும் கார் ஏறியது. இந்த விபத்தில், தலையில் பலத்த காயமடைந்த செல்வியை, ராசி அசமது, அதே காரில் ஏற்றி, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு, பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக கூறினர்.இது குறித்து, யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிந்து, ராசி அசமதுவை கைது செய்து விசாரிக்கின்றனர்.

மெக்கானிக் வீட்டில் 70 சவரன் கொள்ளை

கடலுார்; வீட்டின் கதவை உடைத்து, 70 சவரன் நகை திருடிய மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் தெற்கு ரத வீதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 62. 'டிவி' மெக்கானிக். இவர், தன் மனைவியுடன், 8ம் தேதி கோவையில் உள்ள மகள் வீட்டிற்குச் சென்றார்.நேற்று காலை, வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்த அப்பகுதி மக்கள், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ராஜேந்திரன் வந்து பார்த்தபோது, வீட்டில் இரண்டு பீரோக்களில் இருந்த, 70 சவரன் நகை திருடு போயிருப்பது தெரிந்தது. ஸ்ரீமுஷ்ணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஒரே நாளில் தந்தை, மகன் கொரோனாவுக்கு பலி

திருப்பூர்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட தந்தை, மகன் ஒரே நாளில் பலியாயினர்.திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், அம்மன் கோவில் வீதியில் வசித்தவர் முத்துசாமி, 75; மனைவி பூரணம், 72; மகன் ரவி, 52. ரவியின் மனைவி, மகன் வெளியூரில் வசித்து வருகின்றனர்.

முத்துசாமி, பூரணம், ரவி ஆகியோருக்கு, கொரோனா உறுதி செய்யப்பட்டு, 1ம் தேதி கரூர், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 4ம் தேதி வீடு திரும்பி, தனிமைப்படுத்தி கொண்டனர். அப்போதிருந்தே, முத்துசாமிக்கும், ரவிக்கும் மூச்சுத்திணறல் இருந்துள்ளது.நேற்று காலை, 7:30 மணியளவில், அவர்களது வீட்டில் மொபைல் போன் அடித்தும், யாரும் எடுக்கவில்லை. சந்தேகப்பட்டு, '108' அவசரகால ஆம்புலன்சுக்கு, பக்கத்து வீட்டினர் தகவல் தெரிவித்துள்ளனர்.ஆம்புலன்ஸ் வருவதற்குள், ரவி மூச்சுத்திணறலால் இறந்தார்.

தந்தை முத்துசாமி, கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காலை, 9:30 மணியளவில் இறந்தார். பூரணத்தின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.தம்பதி மரணம்: திருவண்ணாமலை மாவட்டத்தில், நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

ஆரணி அடுத்த பனையூர் கிராமத்தைச் சேர்ந்த, 75 வயது முதியவர், 65 வயதுள்ள இவரது மனைவி ஆகியோர், கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.சென்னை, கிண்டியில் உள்ள அரசு கிங் மருத்துவமனையில் இருவரும் சேர்க்கப்பட்டனர். இரண்டு நாட்களுக்கு முன், முதியவர் பலியானார். நேற்று முன்தினம் அவரது மனைவியும் பலியானார். அவர்களது உடல்கள், சென்னையிலேயே தகனம் செய்யப்பட்டன.

மகன், தந்தை உயிரிழப்பு: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி குமராபுரத்தில் வசித்தவர் துரைராஜ், 72. அரசு பஸ்சில் கண்டக்டராக இருந்து, ஓய்வு பெற்றவர். மகன் ராஜ்குமார், 36, கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று காலை இறந்தார். இதையறிந்த தந்தை துரைராஜ், மயங்கி விழுந்து இறந்தார்.இவர்கள், வெளியூரைச் சேர்ந்தவர்கள் என்பதால், உறவினர்கள் இன்றி, துரைராஜ் உடலை அடக்கம் செய்ய முடியாமல், அவரது மனைவி காமாட்சி தவித்தார். தன்னார்வலர்கள், அவரது உடலை, ஆண்டிபட்டி சுடுகாட்டில் எரியூட்டினர்.----

கொலை, கொள்ளை திருச்சியில் 7 பேர் கைது

திருச்சி; நகைக் கடை ஊழியரை கொலை செய்து 1.5 கிலோ நகைகளை கொள்ளை அடித்த ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி, கரூர் பைபாஸ் ரோட்டில் பிரணவ் ஜுவல்லரி செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் மதன்.கடந்த 8ம் தேதி கடையில் பணியாற்றி வரும் மார்ட்டின் ஜெயராஜ், 42, என்பவர், நகை வாங்க காரில் சென்னைக்கு சென்றார்.அங்கு சென்ற அவர் 75 லட்சம் ரூபாய்க்கு 1.5 கிலோ நகைகள் வாங்கி, அன்று இரவே திருச்சிக்கு கிளம்பி உள்ளார். காரை, திருச்சி மாம்பழச்சாலை பகுதியைச் சேர்ந்த பிரசாந்த், 26 ஓட்டி உள்ளார்.

மறுநாள் காலை வரை, மார்ட்டின் ஊர் திரும்பவில்லை. மதன், உறையூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், கடலுார் மாவட்டம், தொழுதுார் அருகே மார்ட்டின் மொபைல் போன் ஆப் செய்யப்பட்டது தெரிந்தது. இதையடுத்து, கார் டிரைவர் பிரசாந்தை பிடித்து போலீசார் விசாரித்தனர். நண்பர்களுடன் சேர்ந்து மார்ட்டினை, தொழுதுார் அருகே காட்டுப் பகுதியில் கொலை செய்து உடலை புதைத்து, நகையை கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து பிரசாந்த் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின்படி, பிரசாந்த் நண்பர்கள் 19 - 23 வயதுடைய ஆறு வாலிபர்களை உறையூர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மார்ட்டின் உடலை தோண்டி எடுக்கவும், போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.டிரைவர் பிரசாந்த் கடன் பிரச்னையில் இருந்ததால், அதை சமாளிக்க இந்த செயலில் ஈடுபட்டதாக போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.

மகன் திருமணம் நடக்க இருந்த நாளில் தந்தை கொரோனாவுக்கு பலி

தளவாய்புரம்: விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் அருகே முகவூரில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய தந்தை , மகனுக்கு திருமணம் நடைபெறும் நாளில் கொரோனா தொற்றால் பலியானார்.

தளவாய்புரம் அடுத்த முகவூரை சேர்ந்தவர் முனீஸ்வரன் 50. குவைத்தில் இன்ஜினியராக உள்ளார். மகன் கார்த்திக் திருமணத்திற்காக 5 மாதத்திற்கு முன் ஊர் திரும்பியவர் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தார். முகவூர் அருகே முத்துச்சாமிபுரம் சாலியர் சமுதாய் கூடத்தில் மே9ல் திருமணம் நடை பெற இருந்தது.

இந்நிலையில் முனீஸ்வரன் மூன்று நாட்களுக்கு முன் காய்ச்சல் அறிகுறியால் பாதிப்படைந்து தளவாய்புரம் தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்றார்.திருமண பணிகளுக்காக மருத்துவனையில் இருந்து வந்த அவர் மே9 அதிகாலை 3:00 மணிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தார். மகனின் திருமண நாளில் இறந்தது உறவினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil news


ரோட்டில் கவிழ்ந்த டிராக்டர்: உயிர் தப்பிய டான்டீ டிரைவர்

வால்பாறை:வால்பாறை அருகே, தேயிலை பாரம் ஏற்றி சென்ற டிராக்டர் விபத்துள்ளானதில், டிரைவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.வால்பாறை அடுத்துள்ளது சின்கோனா 'டான்டீ' தேயிலை தோட்டம். இந்நிலையில், சின்கோனா ரயான்டிவிஷன், 7ம் நெம்பர் தேயிலை காட்டில் தொழிலாளர்கள் பறித்த பச்சை தேயிலை டிராக்டரில் பாரம் ஏற்றப்பட்டது.ரயான் டிவிஷன் தொழிற்சாலைக்கு தேயிலை கொண்டு செல்லும் போது, இரண்டாவது கொண்டை ஊசிவளைவில், ரோட்டில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், டிரைவர் சந்திரசேகர்,58, லோசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.டிராக்டர் சரிவர பராமரிப்பு பணி செய்யாததாலும், கரடு முரடான ரோட்டாலும் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து, டான்டீ கோட்ட மேலாளர் விக்ரம் மற்றும் அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.

திண்டுக்கல்லில் 3608 மது பாட்டில்கள் பறிமுதல்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக ஒரே நாளில் 99 வழக்குகள் பதியப்பட்டு, 3608 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக இன்று (மே 10) முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. டாஸ்மாக கடைகளை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது. நேற்று நிர்ணயித்த நேரத்தை விட, மது விற்பனை நடப்பதாக புகார் எழுந்தது.எஸ்.பி., ரவளிப்பிரியா உத்தரவின் பேரில் மதுவிலக்கு மற்றும் அந்நந்த ஸ்டேஷன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஒரே நாளில் 99 வழக்குள் பதியப்பட்டு 3,608 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் விற்பனைக்கு பயன்படுத்திய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு நாட்களில் கள்ளச் சந்தையில் மது விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.

கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.12 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்

அந்தியூர்: கர்நாடகாவில் இருந்து, தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்ட, 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவர் கைது செய்யப்பட்டனர்.

அந்தியூர் அருகே பர்கூர் வனப்பகுதிக்கு உட்பட்ட மயானம் அருகே, பர்கூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கர்நாடகா மாநிலம், கொள்ளேகாலில் இருந்து வந்த பிக்கப்வேனை நிறுத்தி சோதனை செய்தனர். வேனை ஓட்டி வந்தவர் தென்காசிமாவட்டம், கடையநல்லூர் இந்திராநகரை சேர்ந்த பாலசுப்பிரமணியம், 33, என்பதும், வேனில், 31 ஹான்ஸ் மூட்டைகள், ஐந்து விமல் பாக்கு மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதின் மதிப்பு, 5.85 லட்சம் ரூபாய். போலீசார் பாலசுப்பிரமணியனை கைது செய்தனர். இதேபோல் தட்டக்கரை வனச்சரகம் அருகே, மற்றொரு சரக்கு வாகனத்தை சோதனை போலீசார் செய்தனர். அதில், 5.94 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 63 குட்கா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலம், சைலஜா மங்களராம் பகுதியை சேர்ந்த டிரைவர் ஆனந்த், 28, கைது செய்யப்பட்டார். கர்நாடகா மாநிலத்தில் இருந்து, தமிழகத்துக்கு குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

1,000 மது பாட்டில்கள் பதுக்கல்: 'மாஜி' மந்திரியின் சகோதரர் கைது

திருச்சி: கொரோனா ஊரடங்கு காலத்தில், அதிக விலைக்கு விற்க, மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த, முன்னாள் அமைச்சர் வளர்மதியின் சகோதரர் கைது செய்யப்பட்டார். திருச்சி, உறையூர் மின்னப்பன் தெருவில், ஒரு வீட்டில் மது பாட்டில்கள் அதிகளவில் பதுக்கி வைத்திருப்பதாக, உறையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம், குறிப்பிட்ட வீட்டில், உறையூர் இன்ஸ்பெக்டர் மணிராஜ் சோதனை நடத்தினார். அப்போது, 40 அட்டை பெட்டிகளில், 1,000க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், மனோகரன், 46, என்பவரை கைது செய்தனர். இவர், அ.தி.மு.க., ஆட்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதியின் உடன் பிறந்த சகோதரர். வளர்மதிக்கு, கார் டிரைவராகவும் இருந்துள்ளார்.


latest tamil news


பைக் மீது லாரி மோதல் இருவர் பலி

தொப்பூர்: தொப்பூர் அருகே, பைக் மீது லாரி மோதியதில் இரு வாலிபர்கள் இறந்தனர். கோவை மாவட்டம், இடையர்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 27. இவர், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில், சேலம் பகுதியை சேர்ந்த இவரது நண்பர் ரமேஷ், 28, என்பவரும் பணியாற்றி வந்தார். கொரோனா முழு ஊரடங்கு அறிவிப்பால், பெங்களூருவில் இருந்து, இவர்கள் இருவரும் சொந்த ஊருக்கு செல்ல தர்மபுரி மாவட்டம், தொம்பரகாம்பட்டி வழியாக, யமஹா பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இவர்கள் பைக் மீது, அவ்வழியே வந்த லாரி மோதியதில், லாரியின் சக்கரத்தில் சிக்கி சதீஷ்குமார், ரமேஷ் ஆகிய இருவரும் இறந்தனர். தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

கேபிள் ஆப்பரேட்டர் கொலை வழக்கில் எட்டு பேர் கைது

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், கேபிள் ஆப்பரேட்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில், எட்டு பேரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு எட்டிமடையைச் சேர்ந்தவர் முருகன், 40; கேபிள் ஆப்பரேட்டர், ரியல் எஸ்டேட், பைனான்ஸ் தொழில்களை செய்து வந்தார்.

கடந்த, 7ல் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இன்ஸ்பெக்டர்கள் ஹேமாவதி, கபிலன் ஆகியோர் தலைமையில், தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், சங்ககிரி ஜெயராமன், 49, சேலம் செல்வம்,42, தேவனாங்குறிச்சி சூர்யா, 27, செங்கோடம்பாளையம் மணிகண்டன், 28, குமார், 26, புள்ளிபாளையம் மணிகண்டன், 27, செங்கோடம்பாளையம் கார்த்தி, 26, அர்ஜுன், 27, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: எட்டிமடையை சேர்ந்த நபரிடம், சங்ககிரியை சேர்ந்த ஜெயராமன் ஆறு லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். அதை அவர் திரும்ப கேட்டுள்ளார். காமராஜ் குடும்பத்திடம், 'ஜெயராமனை கண்டு பயப்பட வேண்டாம். அவர் ஒன்றும் பெரிய ஆள் கிடையாது' என, முருகன் கூறியுள்ளார். ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன், திருச்செங்கோட்டை சேர்ந்த சசிகுமார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், வழக்கில் தொடர்பே இல்லாத தன்னை சேர்க்க காரணமாக இருந்ததாக ஜெயராமனுக்கு, முருகன் மீது கோபம் இருந்தது. இந்நிலையில் தொடர்ந்து முருகன் தனக்கு தொல்லை கொடுத்து வருவதை அறிந்து, முருகனை தீர்த்துக்கட்ட முடிவு செய்த ஜெயராமன், கூலிக்கு ஆட்களை அமர்த்தி முருகனை கொலை செய்துள்ளார். சம்பந்தப்பட்ட, எட்டு பேரையும் கைது செய்துள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

லேப்டாப் ஆசை காட்டி இன்ஜினியர் வங்கி கணக்கில் ரூ.4.18 லட்சம் 'அபேஸ்'

கிருஷ்ணகிரி: லேப்டாப் பரிசு விழுந்துள்ளதாக கூறி, இன்ஜினியர் வங்கி கணக்கில் இருந்து, நான்கு லட்சத்து, 18 ஆயிரம் ரூபாய் அபேஸ் செய்தது தொடர்பாக, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த மத்திகிரியை சேர்ந்தவர் சுந்தர்ஸ்ரீராம், 45; தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக உள்ளார். இவர் ஆன்லைன் மூலமாக, பல்வேறு பொருட்களை அடிக்கடி வாங்கி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த, 6ல், இவரது மொபைல் போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், உங்களுக்கு லேப்டாப் பரிசாக கிடைத்துள்ளது. ஜி.எஸ்.டி., வரி மற்றும் சேவை கட்டணம் ஆகியவற்றை செலுத்தி விட்டு, லேப்டாப்பை பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளார். அதை நம்பி, சுந்தர்ஸ்ரீராம் அவரது வங்கி கணக்கில் பணத்தை செலுத்தினார். அப்போது எதிர் முனையில் பேசிய நபர் பணம் வரவில்லை, மீண்டும் அனுப்புமாறு கூறினார். இதையடுத்து அவர் இரண்டாவது முறையாக பணம் அனுப்பியுள்ளார். இறுதியாக அவர் வங்கி கணக்கை பார்த்த போது, நான்கு லட்சத்து, 18 ஆயிரத்து, 567 ரூபாய் எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபரின் வங்கி கணக்கிற்கு சென்றிருந்தது தெரிய வந்தது. மேலும் லேப்டாப்பும் கொடுக்காமல், அந்த நபர் ஏமாற்றியதும் தெரிய வந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுந்தர் ஸ்ரீராம், இது குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்படி, இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


உலக நிகழ்வுகள்


அமெரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு: 11 பேர் பலி

டென்வர்: அமெரிக்காவின் மூன்று மாகாணங்களில், அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில், 11 பேர் உயிரிழந்தனர்.அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இதற்கிடையே நாட்டில் துப்பாக்கிகளை பயன்படுத்த, மக்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கக்கோரி பல தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.நேற்று முன்தினம் மூன்று மாகாணங்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறின. கொலோராடோ மாகாணத்தின் கொலோராடோ ஸ்பிரிங்ஸ் பகுதியில், ஒரு இளைஞருக்கு வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்தது. அப்போது வீட்டிற்குள் நுழைந்த ஒருவர், அங்கிருந்தோரை குறிவைத்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார்.பின், தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.போலீசார், அங்கு படுகாயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

செல்லும் வழியிலேயே ஆறு பேர் உயிரிழந்தனர். மேரிலேண்ட் மாகாணத்தின் வுட்லான் பகுதியில், எவர்டன் பிரவுன், 56, என்பவர், தன் பக்கத்து வீட்டிற்குள் நுழைந்து, அங்கிருந்தோரை துப்பாக்கியால் சுட்டார். இதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அங்கு விரைந்த போலீசார், தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக் கொன்றனர்.அரிசோனா மாகாணத்தின் பீனிக்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில், நேற்று முன்தினம் இரவு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் பங்கேற்ற சிலருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம், துப்பாக்கிச்சூட்டில் முடிந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார்; ஏழு பேர் காயமடைந்தனர்.

மேற்கு வங்க வன்முறை அமெரிக்காவில் போராட்டம்

ஹூஸ்டன்: மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவுகள், இம்மாதம் 2ம் தேதி வெளியானது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்றது.தேர்தல் முடிவுகள் வெளியான பின், மாநிலத்தின் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. பா.ஜ.,வைச் சேர்ந்த சிலர் கொல்லப்பட்டனர்.இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இந்தியவம்சாவளியினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அமெரிக்காவின் 30 நகரங்களில், நேற்று போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் மேற்கு வங்கத்தை சேர்ந்த பலர் பங்கேற்றனர். மம்தா பானர்ஜியை கண்டித்து, அவர்கள் கோஷமிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X