இன்றைய சூழலில் இப்படியான கேள்வியை நம்மை நாமே கேட்க வேண்டியது அவசியமாகிறது. 'நல்லா இருக்கீங்களா' என்பது தான் நம்மைப் பார்ப்பவர்களிடம் நாம் கேட்கும் கேள்வியாக இருக்கும். உண்மையிலேயே நன்றாக இல்லாவிட்டால் கூட நல்லா இருக்கிறோம் என்பதே பெரும்பான்மையானவர்களின் பதிலாக இருக்கும்.ஆனால் இந்த கொரோனா கால கட்டத்தில் உடல் நிலை பற்றிய பயமும், அது சார்ந்த மன நிலையும் சற்று கடினமாகவே உள்ளது. கண்ணுக்கெதிரே தெரிந்தவர்கள் மரணச் செய்தி கலங்க வைக்கிறது. நோய் பற்றிய அச்சத்திலேயே வாழ்க்கை நகர்கிறது. இது
இப்படியே தொடருமா என்று யோசிக்கிறோம்.அப்படி கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால் நிலைமை மாறுமா என்றால் மாறாதுதானே. எல்லாவற்றிற்கும் தீர்வுகள் உண்டு. என்ன தான் செய்யலாம். நோய்த் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்க முக கவசம், சமூக இடைவெளி என பாதுகாப்பின் அத்தனை நடவடிக்கைகளையும் மேற் கொள்ளுங்கள். உடலைப் பாதுகாக்கலாம். இந்த மனசை என்ன செய்வது? அதை சும்மா விட்டு விடுங்கள் போதும்.
அர்த்தமுள்ள வாழ்வு
நிகழ்காலத்தில் அந்த வினாடிகளில் மட்டுமே வாழ்வது தான் வழி. பிறப்பு என்பது உண்டு என்றால் இறப்பு என்ற ஒன்றும் உண்டு தானே. மரணம் வரும் போது வரட்டும். அது வரை வாழ்வை அர்த்தமுள்ளதாக வாழ்ந்துவிட்டுச் சென்றுவிடுவோம். பண ரீதியாகவோ, மன ரீதியாகவோ அருகில் உள்ள நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு உதவுங்கள். தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். நண்பர்களை குழுவாக இணைத்து நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகள்,படுக்கைகள், இருக்கைகள் இருக்கும் மருத்துவமனைகள் பற்றிய தகவல்களைத் திரட்டிக் கொடுங்கள்.ஆறடி நிலம் கூட இனி வரும் காலங்களில் சொந்தம் இல்லை.அப்படியானால் ஏன் இந்த சண்டை.எதற்காக இந்த ஓட்டம். குடும்பம் இருக்குதே. ஆமா தான். தேவைகளைச் சுருக்கிய வாழ்வு அழகு அல்லவா?. எனக்குப் பசிக்குது என்று சக மனிதன் நம்மிடம் கேட்கும்போது கொடுக்கலாம் என நினைக்கும் போது தானா பாக்கெட்டில் நாணயங்களே இல்லாமல் 100 ரூபாயாக இருக்கவேண்டும் என்று அங்கலாய்க்கும் மனிதர்களால் தானா இந்த உலகம் இயங்குகிறது.பேருந்தில் கைநீட்டும் மாற்றுத்திறனாளிக்கு பணம் கொடுக்கும் கரத்தைதட்டி 'இதென்ன இவ்ளோ ஏமாளியா இருக்கீங்க அவன் ஏமாத்திவிட்டுப் போகப் போறான்' என இலவச அறிவுரை சொல்பவர்களைஎன்ன சொல்வது.
தானும் செய்யாமல் மற்றவரையும் செய்ய விடாமல் தடுக்கும் மனப்பாங்கை எங்கிருந்து கற்றோம்.சமீபத்திய தேர்தல் முடிவில் தோல்வி அடைந்திருந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. வழக்கம் போல சமுகப் பணிகள் செய்து கொண்டிருந்த அவரிடம் எப்படி இவ்வாறு இருக்க முடிகிறது எனக் கேட்ட போது எனக்காகவும் 500 ஓட்டுகள் போட்ட மனிதர்கள் மேல் ஏற்பட்ட அன்பும், நம்பிக்கையையும் காப்பாற்றவேண்டும் என்பதே காரணம் என்ற அவரின்பதிலில்ஆயிரம்அர்த்தங்கள் இருந்தது. இருப்பதை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வது தானே இயல்பு. இயல்பைத் தொலைத்து, இல்லாதவற்றைத் தேடி, எதிலும் மனநிறைவு இல்லாமல் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டுஇருக்கிறோம்.
மனக்கவலை
இப்போது நோய்த் தொற்று பற்றிய பயத்தால் மனசு கவலை. ஆனால் எப்போதும் சுமக்கும் கவலைகளை என்ன செய்வது? பில்கேட்ஸ் போல வர முடியலைன்னு கவலைப்படுபவர்கள், அவருக்கே பல பிரச்னைகள் உள்ளது என்பதை அறிந்து இருக்கிறோமா.பிறரோடு ஒப்பிட்டு பார்த்து நம் மனமகிழ்வைத் தொலைக்கிறோம்.பழி சொல்லும் உலகுக்கு வழி சொல்லத்தெரியாது.கேள்விகளை மற்றவர்கள் மேல் எளிதாக கேட்டு விட்டு நகர்ந்து விடும் சமூகத்திற்காக பதில்களைத் தேடிக் கொண்டு யோசிப்பதிலேயே சோர்ந்துவிடுகிறோம்.திருமணமாகாத ஒருவரிடம் இன்னும் கல்யாணம்ஆகலையாஎன்றும்,ஆன பிறகு குழந்தை இல்லையா என்றும், குழந்தை பிறந்த பிறகு ஆம்பளபிள்ளைஇல்லையாஎன்றும்,அடுத்துஆம்பளபிள்ளைபிறந்துடுச்சு என்று நிம்மதியோடு இனி கேள்வி இல்லை எனயோசித்தால் எல்லாம் சரிதான் ஆனால் என்ன இப்படி கலர் கம்மியா இருக்கானே என்று அடுத்த கேள்வியோடு நிற்கும் மனிதர்கள்... அப்பப்பா
எத்தனை கேள்விகள். இது மனிதர்களைப் பொறுத்து மாறுபடவும் செய்யும். இப்படியான மனிதர்களுக்காகவாகபயப்படுகிறோம்.
மனதோடு பேசுங்கள்
எந்தவொரு செயலைச் செய்யும் போதும் உங்கள் மனசு உங்களிடம் சொல்லும். இது சரி, இது தவறு என்று. இரண்டு வகையான மனம் உள்ளிருந்து கேட்கும். அதில் ஆழ்மனம் சொல்வதைக் கவனித்து இருக்கிறோமா. கவனியுங்கள். மனிதர்களை நம்புவதை விட உங்கள் மனசை நம்புங்கள்.செக்கு மாடு போல ஒரே பாதையில் பயணிப்பதை விட மாற்றுப் பாதையில் செல்வதற்கு, மாற்று சிந்தனைகளை உருவாக்குவதே வெற்றிக்கான வழி. எனக்குத் தெரிந்த உறவினர் ஒருவர் எந்த சூழலையும் எளிதாக கையாளுவார்.எப்படி இது சாத்தியமாகிறது. பிளான் ஏ, பிளான் பி என்று இரண்டு வைத்துக் கொள்வார்.
ஒரு வேலையைச் செய்யும் போது முதல் திட்டம் சொதப்பி விட்டது எனில் தயங்காமல் அடுத்த திட்டத்தை வைத்து இருப்பார். இது சாத்தியமா என்றால் சாத்தியமே. வெற்றி பெற வேண்டும் என்ற பரபரப்புடன் இயங்க வேண்டியதுமில்லை. வாழ்க்கை ஓட்டப் பந்தயம் இல்லை.அதிக பணம் வேணும்,பெரிய வீடு, பெரிய கார், நிறைய புகழ் எல்லாம் இருக்கிறது.ஆனால் நிம்மதி இருக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். வயிற்றுக்கு சாப்பாடு, ஆரோக்கியமான உடல், இருக்க ஒரு வீடு, நிறைவு தரும் உறவுகள் என்ற எளிய வாழ்வியலில் துன்பமேது?நான் வர்றப்பதான் பஸ்ஸே வராது. எனக்கு மட்டும்தான் இப்படிநடக்குது. என்னைமட்டும் கடவுள் சோதிக்கிறார். இப்படியே எனக்கு மட்டும் என சாதாரண விஷயங்களுக்கும் புலம்புகிறோம். பஸ் வர தாமதமா. அதனால் என்ன பிடிச்ச பாட்டைக் கேக்கலாம். பிடிச்சது கிடைக்கலைனா கிடைச்சத பிடிச்சதாக மாற்றிக்கொள்ள வேண்டியதுதான்.
நேர்மறை சிந்தனைகள்
நம்மனதை பலவீனமாக்கும் மனிதர்களைக் கண்டு கலங்கி விடாமல் மனதை அழகாக்கும் நேர்மறை சிந்தனைகளால் நம்மைநிரப்புவோம்.ஆக்சிஜன் பற்றாக்குறை ஒருபக்கம்,அன்பு பற்றாக்குறை மறுபக்கம், நோயாளிகளுக்கு படுக்கை வசதி இல்லை என்ற அவலங்கள் ஒருபுறம், எல்லாமிருந்தும் துாக்கம் வராமல் தவிக்கும் மனிதர்கள் மறு புறம் என்று வாழ்வின் இரு வேறு பக்கங்களை கண்டு கொண்டு இருக்கிறோம்.இருந்து சிறக்கப்போகிறோமா அல்லது இறப்பதற்காகவே இருக்கப் போகிறோமா என்று கேட்கும் நம் மனதிற்கு உங்களிடம் சரியான விடை இருக்கிறது என்றால் சரியான வாழ்வை நோக்கி நம் அடுத்த தலைமுறையை நகர்த்திக்கொண்டு இருக்கிறோம் என்று அர்த்தம். ஒவ்வொரு விடியலும் கடவுள் நமக்காகத் தந்திருக்கும் இன்னொரு வாய்ப்பு. எதிர்கால கனவுகளுக்காக நிகழ்காலத்தை தொலைக்காமல் இந்த நொடியில்அர்த்தமானதாக வாழச் சொல்லி மனசு சொல்வது கேட்கிறது.
உயிரோடு வாழ்கிறாயா, உயிர்ப்போடு வாழ்கிறாயா என்பதான கேள்வியோடு இன்றைய நாளைத் தொடங்குவோம்.-ம.ஜெயமேரி, ஆசிரியைஊ.ஒ.தொடக்க பள்ளிக.மடத்துப்பட்டி bharathisanthiya10@gmail.com
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE